அருண், டேவிட் ராப்ளேயிடம் சபதம் செய்துவிட்டு அம்மாவைக் கட்டாயப்படுத்தி நகரத்தின் மேயர் ரோஸ்வுட் வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னான்.
ஒருபக்கம் சந்தோஷம், மறுபக்கம் பயம். இரண்டும் கலந்த மனநிலையில் சாவிகொடுத்த இயந்திரம்போல கீதா வண்டியை ஓட்டினார். பக்கரூ சத்தமின்றிப் பின்சீட்டில் அருணுக்கு அருகே படுத்துக்கொண்டிருந்தது.
அந்தக் காலைவேளையில் மேயர் ரோஸ்வுட் வீட்டின் முன்புறம் கார்க்கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிருந்தார். என்னதான் மேயரானாலும், கர்வமே இல்லாமல், தன் வேலையைத் தானே செய்துகொண்டிருந்தார்.
அருண் கதவைத் திறந்துகொண்டு முதலில் இறங்கினான். டேவிட் ராப்ளேயிடம் ஓடியதுபோல இங்கும் ஓடப்போகிறான் என்று கீதா நினைத்தபொழுது, அவன் மெதுவாக பக்கரூவை தூக்கிக்கொண்டு இறங்கினான். மகன்மீது இருந்த நம்பிக்கை, அல்லது அவன் போக்கில் தலையிடவேண்டாம் என்ற எண்ணம், ஏதோவொரு காரணத்தால் கீதா அவனைப் பார்த்து, "குட்லக்", எனச் சொல்லிவிட்டு, வண்டிக்குள்ளேயே இருந்தார்.
காலை வேளையில் வீட்டின்முன் ஒரு வண்டியைப் பார்த்தவுடன் மேயர் ரோஸ்வுட்டின் கவனம் திரும்பியது. கீதாவை அடையாளம் கண்டுகொண்டு கையாட்டினார். உள்ளூர வியப்பாக இருந்தாலும், அவரது முகத்தில் நட்பான புன்னகை தெரிந்தது.
அருண் நாய்க்குட்டியோடு வருவதைப் பார்த்தவுடன், "அடடா, என் வீட்டிற்கு வந்து பெருமைதரும் எனது நகர மைந்தனே!" என்று புன்சிரிப்போடு வரவேற்றார்.
அருண் அவரைப் பார்த்து வலுக்கட்டாயமாக ஒரு புன்னகை செய்து, தான் வந்த காரியத்தைக் கூறினான். ஒரு சின்னப்பையனின் விவேகத்தைப் பார்த்து மேயர் அசந்துபோய்விட்டார்.
கீதா இறங்கிவராமல் இருப்பதைப் பார்த்து அவர் புரிந்துகொண்டார். "அருண், நீ சொல்வது உண்மையா? டாக்டர்கள் எல்லாம் சொன்ன பிறகும் இந்த விதை உன் பக்கரூவை காப்பாத்தும்னு நம்புறியா?"
"ஆமாம் ஐயா, ஆமாம்" தீரமாகச் சொன்னான் அருண். "அந்த லெட்டர்ல அப்படித்தான் எழுதி இருந்திச்சு."
"அருண்…"
"ஐயா, என் பக்கரூவைப் பிழைக்கவைக்க வேறுவழியே இல்லை ஐயா, இதையாவது முயற்சி பண்ணிப் பார்க்கலாம். நீங்க சொன்னீங்கன்னா ராப்ளே அனுமதி கொடுப்பாரு" என மேயரைக் கேட்டுக்கொண்டான்.
மேயரிடம் பேசும்பொழுது அவன், மிகவும் சீக்காளியாக இருந்த பக்கரூவைத் தூக்கிக் காட்டினான். அந்தச் சின்னப்பையனின் முகத்தில் இருந்த நம்பிக்கையும், அவன் ராப்ளேயை எதிர்த்துப் பேசிய விதமும் மேயரை மிகவும் ஆச்சரியப்படுத்தின.
அருணை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே சென்றார். சில நிமிடங்களில் கையில் செல்ஃபோனோடு வந்தார். ஸ்பீட் டயலில் டேவிட் ராப்ளேயின் நம்பரைக் கூப்பிட்டார். ராப்ளேயின் குரல் ஃபோனில் ஒலித்தது.
"ஹலோ டேவிட், நான் மேயர் பேசறேன்." சற்றே சாதாரண விஷயங்களைப் பேசியபின் மேயர் ரோஸ்வுட் விஷயத்திற்கு வந்தார்.
"டேவிட், இந்தப் பையன் ஒரு விதையை நட அனுமதி கேட்கறான். அதனால அவன் நாய்க்குட்டி பிழைக்கும்னு நம்பறான். கொஞ்சம் அனுமதி கொடுங்களேன்."
டேவிடிடம் பேசிக்கொண்டே மேயர் செல்லமாக பக்கரூவை ஒரு கையினால் வருடினார்.
டேவிடின் பதில் காதில் விழவில்லையானாலும், மேயரின் முகத்திலிருந்து டேவிட் மறுக்கிறார் என்பதை அருண் அறிந்துகொண்டான். மேயரின் குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது. "டேவிட், திஸ் இஸ் நான்சென்ஸ். ஒரு சின்னப் பையனுக்காக ஒரு சின்ன அனுமதி கொடுக்கறதினால என்ன வந்திரப் போகுது. ஒரு மனுஷத்தன்மையே இல்லையா உங்களுக்கு?" மேயரின் சத்தமான குரல் காலை நிசப்தத்தில் எங்கும் கேட்டது.
வண்டியில் உட்கார்ந்திருந்த கீதா, மேயரின் கோபமான வார்த்தைகளைக் கேட்டவுடன் சடாரென்று கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தார். திடீரென்று போனின் மறுபுறத்தில் பேச்சு நின்று டயல்டோன் கேட்டதும் கீதாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. மேயர் சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தார். அவன் காதில் விழாமல் மேயர் கீதாவிடம் மெதுவாகப் பேசினாலும், "அரசியல், வக்கீல், கோர்ட்…" என்ற வார்த்தைகளைக் கூறியது அருணுக்குக் கேட்டது.
"அம்மா!"
அருணின் குரல் கேட்டு கீதா அவன் பக்கம் திரும்பினாள். "வாங்கம்மா, நாம போகலாம்."
கீதா சற்றே வியப்போடு அவனைப் பார்த்தார். அருண் அழுது மல்லாடுவான் என்று நினைத்தால். அவனிடம் அந்த மாதிரி எந்த அறிகுறியும் காணவில்லை.
"அம்மா, நாம ரிடையர்ட் ஜட்ஜ் குரோவ் கிட்ட போய் பேசலாம் அம்மா. அவர் சொன்னா நிச்சயம் டேவிட் கேட்பாரு."
கீதாவிற்கு ஒரே சங்கடமாக இருந்தது. நிலைமையைப் புரிந்துகொண்டு, மேயர் கண்களால் சம்மதித்தார்.
"அம்மா, மேயர்கிட்ட ஒண்ணுமட்டும் சொல்லுங்க", அருண் சத்தமாகச் சொன்னான். "நம்மவீட்டு வோட்டு அவருக்கு இனிமே என்னிக்குமே கிடையாதுன்னு."
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |