மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சாமுண்டிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில். இக்கோயில் புராணப் பெருமை வாய்ந்த கோயிலாகும். பார்வதிதேவியின் அம்சமான சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்தவள். அசுரனை அழிப்பதற்காக அம்பாள் அங்கே தவம்செய்ததால் மலைக்கு சாமுண்டிமலை என்ற பெயர் வந்தது. அங்கு கோயில் கட்டப்பட்டு சாமுண்டீஸ்வரியாக அம்பாள் அருள்பாலிக்கிறாள். பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த அம்பாள், மைசூர் மகாராஜா வம்சத்தினரின் குலதெய்வம். ஸ்கந்தபுராணம் மற்றும் பிற புராணங்களில் உள்ளபடி 'த்ரிமுதக்ஷேத்ரம்' என்னும் புனிதத்தலம் எட்டு மலைகளால் சூழப்பட்டது. இதில் மேற்குப்புறம் அமைந்துள்ளது சாமுண்டிமலை. ஆரம்பகாலத்தில் இதை 'மஹாபலாத்ரி' என்று அழைத்தனர். இங்குள்ள சிவபெருமானின் மஹாபலேச்வர் கோயில் மிகப்பழமை வாய்ந்ததாகும். தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பார்வதியின் அவதாரமாக சாமுண்டீஸ்வரி கருதப்படுவதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் உலகெங்கிலுமிருந்து தேவியைத் தரிசிக்க வருகின்றனர். ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான இக்கோயில் ஆரம்பகாலத்தில் சிறியதாக இருந்தது. பக்தர்கள் பல்கிப் பெருகவே தானும் வளர்ந்து இன்று பெரிய கோயிலாகத் திகழ்கிறது. அம்பிகையின் பெருமையை மைசூர் வாசுதேவாச்சார் புகழ்ந்து தனது கிருதிகளில் போற்றிப் பாடியுள்ளார்.

நான்காம் சாமராஜ உடையார் மைசூரை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஒருநாள் சாமுண்டீஸ்வரியைத் தரிசித்துவிட்டுத் திரும்பும்போது பலத்த மழை பெய்தது. ஒரு மரத்தினடியில் அவர் வந்த பல்லக்கை வீரர்கள் இறக்கி வைத்தனர். மன்னர், தன்னைக் காப்பாற்றும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டு மலைக்கோயிலைப் பார்த்தபோது கோயில் கண்ணுக்குத் தெரியவில்லை. சில அடி தூரம் நகர்ந்துசென்று பார்த்தபோது கோயில் கண்ணுக்குத் தெரிந்தது. அப்போது, அவர் எந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தாரோ அங்கே மின்னலுடன் இடிவிழுந்து, மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அம்பிகை கோயிலை மறைத்தாள் என்பதை மன்னர் உணர்ந்துகொண்டார். மகிழ்ந்தார். அம்பாளுக்கு நன்றிசெலுத்தும் விதமாக கோயிலைப் பெரிதாகக் கட்டினார்.

கோயில் நாற்கர வடிவில் கட்டப்பட்டுள்ளது. பிரதான வாயில், நுழைவாயில், நவரங்க மண்டபம், அந்தராள மண்டபம், கருவறை, பிரகாரம் கொண்டது. ராஜகோபுரம் ஏழு தங்கக்கலசங்களைக் கொண்டது. கிருஷ்ணராஜ உடையார் 1872ல் கோயிலைச் சீரமைத்து வாகனங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தார். ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனர், விஜயநகர மன்னர்கள் எனப் பலர் ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

கோபுர நுழைவாயிலில் சிறிய விநாயகர் வீற்றிருக்கிறார். வாசல்கதவில் அம்மனின் வெள்ளிக்கவசமிட்ட சிற்பங்கள் உள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் விநாயகர் சிலை, சிறிது தூரத்தில் கொடிமரம், அம்மனின் திருப்பாதம் உள்ளன. சிறிய நந்தி கருவறையை நோக்கி உள்ளது. கொடிமரத்துக்கு முன்னால் வலதுபுறம் சுவரில் ஆஞ்சநேயர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையில், எட்டுக் கைகளுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இச்சிலை மிகப்பழமையானது. மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இங்கு பலி கொடுக்கப்பட்டது உண்டு. பிற்காலத்தில் வழக்கம் மாறியது. சன்னதி நுழைவாயிலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி அளிக்கின்றனர். சந்நிதியின் வலது பக்கத்தில் பைரவர் காட்சி தருகிறார். மஹாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது மனைவியர் சிலைகள், விநாயகர் சிலையை அடுத்துள்ளன. கருவறையின் மேலே சிறுகோபுரம் உள்ளது.

இவ்வாலயத்தின் சிறப்பு நவராத்திரி விழா. இங்கே இது 'மைசூரு தசரா' ஆகக் கொண்டாடப்படுகிறது. மைசூரின் மிக முக்கியமான திருவிழா தசரா ஆகும். அன்று அரண்மனை முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான யானைகளின் ஊர்வலத்தின்போது அன்னை சாமுண்டீஸ்வரி யானைமீது தங்க சிம்மாசனத்தில் பவனி வருகிறாள். மன்னர், பரம்பரையினர் அன்று தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவர். அன்று கோலாகலமாக பல நிகழ்வுகள் நடக்கின்றன.

மலைமேல் இருந்து சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலாத்ரி, நாராயணசுவாமி கோயில், மகிஷாசுரன் சிலை, நந்தி சிலை. கிருஷ்ணராஜ சாகர் ஏரி, ரேஸ்கோர்ஸ் எனப் பலவற்றைக் காணலாம். சாமுண்டீஸ்வரி கோவிலின் தென்புறம் மாரம்மா கோயில் அமைந்துள்ளது. இங்கு பூஜைகள், விழாக்கள் கிராமத்தினரால் செய்யப்படுகின்றன. சாமுண்டி மலைக்கு மைசூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துகள் செல்கின்றன.

சீதா துரைராஜ்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com