மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நட்பில் உயர்ந்த துரியோதனன்
பாண்டவர்களுக்கு துரியோதனன் செய்த தீங்குகளைப் பார்க்கத் தொடங்கினோம். இவை ஒவ்வொன்றிலும் கர்ணன் எவ்வாறு பங்கேற்றிருக்கிறான் என்பதைச் சொல்லும்போதுதான், பிரமாணகோடி (Pramanakoti) என்ற இடத்தில் பதினைந்து வயது பீமனுக்கு நஞ்சுகலந்த உணவை அளித்து அவனைக் கொல்ல துரியோதனன் முயன்ற மிக ஆரம்ப சதித்திட்டத்திலும் கர்ணனுடைய பங்கு இருந்திருக்கிறது என்பதைச் சொல்லி, எப்படி அவன் இளமைப் பருவத்திலேயே துரியோதனனை அடைந்தான், துரோணரிடத்தில் பயிற்சி பெற்றான், பிறகு துரோணர் தனக்கு பிரமாஸ்திரப் பயிற்சியை அளிக்க மறுத்ததால் பரசுராமரிடம் போய் பொய்சொல்லி பிரமாஸ்திரத்தைப் பயின்று "அது நேரத்தில் உனக்குப் பலிக்காமல் போகட்டும்" என்ற சாபத்தையும் வாங்கிக்கொண்டு, வரும் வழியில் ஒரு பசுவைக்கொன்று, அதனாலும் ஒரு சாபத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்போதுதான் அங்கே ஆட்டக்களத்தில் துரோணருடைய சீடர்கள் தங்களுடைய பயிற்சிகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே நுழைந்து தன்னுடைய வித்தைகளைக் காட்டிய கர்ணன் அர்ச்சுனனைப் போருக்கு அழைக்கிறான். அதைத் தொடர்ந்துதான் துரியோதனன் அவனை அங்கநாட்டுக்கு மன்னனாக முடிசூட்டுகிறான்.

எனவே, துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட நட்பு முன்பின் அறியாதவர்களிடம் திடீரென்று ஏற்பட்ட நட்பன்று. கர்ணனைப் பற்றி அனைவருமே அறிந்திருந்தார்கள். அவனுக்குள்ளே கனன்று கொண்டிருந்த பகையுணர்ச்சியை அனைவருமே அறிந்திருந்தார்கள். பாண்டவர்கள் ஐவரில் துரியோதனனுக்கு இருவர்மீது மட்டும்தான் சற்று சிந்தனை இருந்தது. பாஞ்சாலி சபதத்தில் இதைத்தான் துரியோதனன் வாய்மொழியாக:

காண்டகு வில்லுடையோன் - அந்தக்
காளை யருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல் வீமன் - தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே


என்று வெளிப்படுவதைப் பார்க்கிறோம். 'காணத்தகுந்தவனும் வில்லாளுமான அருச்சுனன் கண்களிலும், பெருமைபொருந்திய திறலுடைய வீமனின் மார்பிலும் என் அவமானம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே' என்பது பாரதியுடைய கற்பனையில் உதித்த வார்த்தைகளல்ல; அவை வியாசமூலத்தை ஒட்டியே செய்யப்பட்டுள்ளன.

இப்படி பீமன் அர்ச்சுனன் இருவரில், 'பீமனைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும்' என்ற நம்பிக்கை துரியோதனனுக்கு இருந்தது. அர்ச்சுனனுடைய வில்லாற்றலை எதிர்கொள்ளத்தான் அவனுக்கு ஒருவன் தேவைப்பட்டான். அது கர்ணன் வடிவத்தில் ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. அவன் பிரமாஸ்திரப் பயிற்சியைப் பெறமுடியாமல் இருந்ததையும் மீறி எப்படியோ பரசுராமரிடமிருந்து அந்தப் பயிற்சியையும் பெற்றுக்கொண்டுதான் திரும்பியிருக்கிறான் என்பதை துரியோதனன் மிக நன்றாகவே அறிவான். இப்படிக் கூடுதல் ஆற்றலோடு திரும்ப வந்திருக்கும்-அரக்குமாளிகை உள்ளிட்ட அத்தனை சதிகளிலும் பங்கேற்றிருந்த-தன்னுடைய பழைய நண்பனுக்குத்தான் துரியோதனன் பட்டம் சூட்டினானேயன்றி, முன்பின் அறியாத யாரோ ஒருவனுக்கன்று. பரசுராமர் 'தேவைப்படும் நேரத்தில் உனக்கு பிரமாஸ்திர வித்தை நினைவுக்கு வராமல் போகட்டும்' என்று சபித்திருந்தாலும், அர்ச்சுனனுடன் நடந்த அந்தக் கடைசி யுத்தத்தில் கர்ணன் மிக சிரமப்பட்டு பிரமாஸ்திரத்தைச் செலுத்தத் தேவையான மந்திரங்களை நினைவுக்குக் கொண்டுவந்து, அர்ச்சுனன்மேலே பிரயோகிக்கத்தான் செய்தான். அதை அர்ச்சுனன் தடுத்தான். எனவே, 'பரசுராம சாபம் அர்ச்சுனனுக்கு லாபம்'என்ற பேச்சிலும் பொருளில்லை.

கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நெருக்கமான நட்பு, 'எடுக்கவோ கோக்கவோ' போன்ற மிக நெகிழ்ச்சியான காட்சிகள் எதுவுமே வியாச பாரதத்தில் இடம்பெறவில்லை.

மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக்
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்(கு) என்ஆருயிரைப்
போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு


என்று கர்ணன் குந்தியினிடத்திலே சொல்வதாக வரும் காட்சியமைப்பு, பாரத வெண்பாவில் இடம்பெற்றுள்ளது. வேறெதிலும் இந்தக் காட்சி சொல்லப்படவில்லை. இந்தப் பாடல் விரிவானதொரு கற்பனைக் காட்சிக்கு இடங்கொடுக்கிறது. இதை விரித்து விவரித்துதான் இன்று நாம் இப்போது கேள்விப்படுகிற அந்தச் சம்பவம் உருவாகியிருக்கிறது.

ஆக, கர்ணன் துரியோதனன் இருவருடைய நட்பைப்பற்றி வியாசபாரதம் தனியாகக் குறிப்பிட்டுப் பேசாவிட்டாலும், இருவருக்குமிடையில் நிலவிய நெருக்கமான நட்பை, சம்பவங்களின் மூலமாக நாம் அனுமானித்தறிய முடிகிறது. இந்த இருவர் நட்பில் யாருடையது உயர்வானது என்று கேட்டால், துரியோதனன் கர்ணன்மீது கொண்டிருந்த நட்பே நிபந்தனையற்ற-unconditional-நட்பாகக் காட்சியளிக்கிறது என்றுதான் சொல்லமுடிகிறது. ஒரே ஒரு இடத்தைத் தவிர. இந்த ஓரிடத்தில் கர்ணன் மிகமிக உயர்ந்தவனாக, மிகப்பெரிய உதாரணபுருஷனாக உயர்ந்தெழுகிறான். 'இந்த கேரக்டரை ஆழ்ந்து பாத்தா, சாக்கடைக் கடலுக்கு நடுவில் கங்கையும் ஓடிக் கொண்டிருந்தது; படுபயங்கரமான பாதாளத்துக்குள்ளிருந்து ஒரு இமயமும் எழத்தான் செய்தது. இப்படிப்பட்ட complex குணச்சித்திரத்தைதான் நாம் பார்க்கிறோம்' என்று என் ஆசிரியப்பிரான் அமரர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அடிக்கடி சொல்வார்.

கர்ணனுடைய கொடைச் சிறப்பைப்பற்றி வில்லிபாரதத்திலும் கன்னடமொழியில் (ஹளே கன்னடா) இயற்றப்பட்ட ஜைமினி பாரதத்திலும் அற்புதமான சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளன. (ஜைமினி பாரதத்தை இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அதிலிருந்தும் பகிர்வேன்.) இருந்தாலும் வியாசமூலத்தில் கர்ணனைப் பெருங்கொடையாளியாகச் சித்திரிக்கவில்லை. விராட பர்வத்தில் "அர்ச்சுனனைக் கொல்வேன்" என்று கத்திமீது சபதம்செய்து களத்துக்கு வந்த கர்ணன்தான் பிருஹன்னளையாக பேடி உருவத்தில் நின்ற அர்ச்சுனனுடைய கணைகளின் வேகத்தைப் பொறுக்காமல் களத்தைவிட்டு, தன்னை நம்பிவந்த உயிர் நண்பனான துரியோதனைவிட்டு முதலிலே ஓடியவன். போருக்கு முன்னால் கந்தர்வன் சித்திரசேனனுடன் நடந்த-துரியோதனன் வீணுக்கு இழுத்து அகப்பட்டுக் கொண்ட-போரிலும் களத்தைவிட்டு முதலில் ஓடியவன் கர்ணனே. சித்திரசேனன் துரியோதனனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டித் தரதரவென்று இழுத்துச் சென்ற சமயத்தில் அவனைக் காப்பாற்ற கர்ணன் அருகிலேயே இல்லை. (சித்திரசேனன் அர்ச்சுனனுடைய இந்திரலோகத்து நண்பன். அர்ச்சுனனுடைய தேருக்காக நூறு வெள்ளைக்குதிரைகளைக் கொடுத்தவன் அவன்தான். வெள்ளைக்குதிரைகளையுடைய தேரில் வருவதால் அர்ச்சுனனுக்கு ஸ்வேதவாஹனன் என்றே பெயர்.) "பகை இருக்கலாம். இருந்தாலும் நம் குடும்பத்தைச் சேர்ந்த, நம் சகோதரன் இப்படி அவமானப்படுத்தப்படும் போது அவனை மீட்டுக்கொண்டு வரவேண்டியது நம் கடமை" என்று தர்மபுத்திரன் வலியுறுத்தியதால் பீமனும் அர்ச்சுனனும் போய் துரியோதனனை மீட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்தக் காரணத்தால்தான் பீமன் ஒருமுறை "அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே" (துரியோதனனுடைய கொடுமைக்கு நான் பயப்படவில்லை. உன்னுடைய அன்புதான் என்னை அஞ்சவைக்கிறது) என்று வில்லிபாரதத்தில் சொல்கிறான்.

இப்படி, யாரைச் சீண்டுவதற்காக துரியோதனன் ஆநிரை கணக்கெடுப்பது என்ற பெயரில் காட்டுக்குச் சென்றானோ, அவர்களாலேயே காப்பாற்றப்பட நேர்ந்ததைக் கோஷா யாத்திரை (பசுக்களை கணக்கெடுப்பது என்று பொருள்) பர்வம் சொல்கிறது; விராட பர்வத்தில் ஆநிரை கவரச்சென்ற போரிலும் இரண்டு முறை கர்ணனால் கைவிடப்படுகிறான்: ஒருமுறை பீமார்ச்சுனர்களால் காக்கப்பட்டு, அடுத்தமுறை பேடி வடிவத்தில் நின்ற அர்ச்சுனனிடம் தோல்வியுற்று, பிராயோபவேசம் (தற்கொலை) செய்துகொள்ளத் தீர்மானித்து தர்பைப்புல்லை விரிக்கிறான். உயிரைவிடுவதற்காக அமர்கின்ற சமயத்தில்தான், "போரில் அர்ச்சுனனை வெல்லும்வரை நான் இன்னின்னது செய்யமாட்டேன்" என்று கர்ணன் செய்யும் சபதங்களில் ஒன்றாக "யார் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமாட்டேன்" என்ற சபதத்தை மேற்கொள்கிறான். இதற்குப் பின்னால்தான் கவச குண்டலங்களைக் கொடுக்கும் சம்பவம் நிகழ்கிறது. இப்படி இரண்டுமுறையில்லை, பலமுறை கர்ணனால் கைவிடப்பட்டாலும் துரியோதனன் அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவையெல்லாம் அவன் கர்ணன்மீது கொண்டிருந்த அன்பையும் நட்பையும் நம்பிக்கையையும் எள்ளளவும் பாதிக்கவில்லை. இங்கே துரியோதனனுடைய நட்பு உயர்வானதாகிறது.

இப்படிப்பட்ட கர்ணன் ஒருகட்டத்தில் மஹோன்னதமாக உயர்கிறான். மேலே சொல்லியுள்ள பாரதவெண்பாப் பாடலைக் கர்ணன் குந்தியிடம் சொல்வதாக வரும். ஆனால் குந்தி கர்ணனிடம் வந்து 'நான்தான் உன்னுடைய தாய்' என்று சொல்வதற்கு முன்னாலேயே கர்ணனுக்கு இந்த உண்மை தெரியும். தெரிந்திருந்தும் தெரியாததைப்போல நடந்துகொள்கிறான். ஏன்? பார்ப்போம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com