திருப்பதி மலை ஏறாமலேயே ஏற்படும் முழங்கால் முடிச்சின் காரணங்களைக் கொஞ்சம் பார்க்கலாமா? வயது அதிகரிப்பதை தலைநரையும் மூட்டுவலியும் உணர்த்தும் என்று சொன்னால் மிகையல்ல. ஐம்பது வயதுக்கு மேலானவருக்கே மூட்டுவலி வர வாய்ப்பு அதிகம். வயது அதிகரிக்க, அதிகரிக்க வலியும் அதிகமாகும்.
இதை ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்று சொல்வர். மற்ற ஆர்த்ரைடிஸ் வகைகள் காய்ச்சல், தோல்வியாதி, குடும்ப வரலாறு போன்றவையுடன் இருக்கும். இதில் ருமடாய்ட் போன்றவை அடக்கம். இவை அவ்வளவு அதிகமாகக் காணப்படுவதில்லை. மூட்டுகளில் அடியெதுவும் படாமல் ஆனால் வலிமட்டும் அதிகமாக இருந்தால் அது பெரும்பாலும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் வகையைச் சேர்ந்தது.
எந்தெந்த மூட்டுகள் பாதிக்கப்படும்? குறிப்பாகப் பெரிய மூட்டுகளான முழங்கால்மூட்டு, இடுப்புமூட்டு, தோள்மூட்டு அதிகம் பாதிக்கப்படும். இதைத்தவிர சிறிய மூட்டுகளான விரல்மூட்டுகள் பாதிக்கப்படலாம். செய்யும் தொழிலைப் பொறுத்து ஒரு சில மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். காலைவேளையில் இந்த மூட்டுகள் இறுகிவிடும். நேரம் ஆக, ஆக வலி அதிகரிக்கும். மூட்டுகளை உபயோகிக்கும்போது வலி அதிகமாகும். மூட்டுகளில் வீக்கமும் இருக்கலாம். நீண்டதூரம் நடக்கமுடியாமல் வலிக்கும். மாடிப்படி ஏறி இறங்கச் சிரமப்படும். குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் இறுக்கம் அதிகமாகலாம்.
பரிசோதனைகள் மூட்டுவலி அதிகமாக இருந்தால் எந்த மூட்டு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியை X-Ray எடுக்கவேண்டும். எலும்புகளில் தேய்மானம் இருந்தால் அது கண்டறியப்படும். மூட்டிலிருக்கும் ஜவ்விலும் தேய்மானம் இருக்கலாம். ஒரு சிலருக்கு MRI தேவைப்படும். மூட்டுகளில் இருக்கும் தசைநார் (ligament) தேய்ந்திருந்தால் அதைக் கண்டுபிடிக்கலாம்.
தீர்வுகள் ஆர்த்ரைடிஸ் தீவிரத்தை Mild, Moderate, Severe என்று மூன்றாகப் பிரிக்கலாம். முதல் இரண்டு வகைகளுக்கு உடற்பயிற்சி கொடுத்துக் குணப்படுத்தலாம். ஃபிஸியோ தெரபி கொடுப்பதன்மூலம் மூட்டின் இறுக்கம் குறையும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யவேண்டும். வலி குறைவதற்கு Tylenol அல்லது Ibuprofen எடுத்துக் கொள்ளலாம். இதைத்தவிர கேல்ஷியம், வைடமின் D எடுத்துக்கொள்வது உசிதம். மருந்துக் கடைகளில் கான்ட்ராய்டின் சல்ஃபேட் (Chondroitin Sulfate) கிடைக்கும். இதுவும் மீனெண்ணெய் கேப்சூலும் தேய்மானத்தைக் குறைக்க உதவும். உடல் எடை கூடுதலாக இருப்பவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். எடை குறைப்பது உசிதம். முழங்கால் மூட்டுக்கு braces கிடைக்கும். அதைப் போட்டுக்கொண்டால் நடக்கும்போது வலி குறையும். அதிகத் தீவிரமானால் எலும்பு மருத்துவரை நாடவேண்டும். அவர்கள் மூட்டில் ஸ்டீராய்டு ஊசி போடுவார்கள். இது வலியை ஆறுமாதத்திலிருந்து ஒரு வருடம்வரை குறைத்துவிடும். இன்னும் சிலருக்கு Synvisc என்ற ஜவ்வு மருந்தும் ஊசிமூலம் தரப்படலாம். இதை மூன்றுமுறை கொடுக்க வேண்டிவரலாம். இவற்றால் வலி குறையாவிட்டால், நோயின் தீவிரம் அதிகம் என்று அர்த்தம். எலும்பு ஒன்றோடு ஒன்றாகத் தேயுமளவு தீவிரமிருந்தால் மூட்டுமாற்று (Joint replacement) அறுவைசிகிச்சை தேவைப்படும். ஆபரேஷன் என்றதும் நடுங்கிப் போகவேண்டாம். கடந்த பத்து வருடங்களில் மருத்துவத் துறையில் இந்தப் பிரிவு பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. சரியான காலத்தில் கைதேர்ந்த நிபுணர்கள் மூலம் செய்யப்படும் அறுவைசிகிச்சை நல்ல பலனை அளிக்கும்.
அறுவைசிகிச்சை முடிந்தபின்னர் மருத்துவர்கள் சொல்வதுபோலவே பயிற்சிகள் செய்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வலி முற்றிலும் குறைந்து முன்போலவே நடமாட முடியும். மூட்டில் நுண்ணுயிர்க்கிருமி தாக்காமல் இருக்க ஆன்டிபயாடிக்ஸ் தேவைப்படும். ரத்தம் கட்டாமல் இருக்க அறுவைசிகிச்சை முடிந்தவுடன் இரத்த ஓட்டத்ததை சீர் செய்யும் மாத்திரைகள் தேவைப்படும். இவற்றை எல்லாம் சரிவர செய்தால் புதிய மூட்டுடன் பழையபடி ஓடியாடலாம்.
தவிர்ப்பு முறைகள் எலும்புகளில் தேய்மானம் வயதின் காரணமாக ஏற்படுகிறது. இதை முற்றிலும் தவிர்ககமுடியாது. ஒரு சிலருக்குக் குடும்ப வரலாறு இருக்கலாம். ஆனால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இது எலும்புகளை பாதுகாக்கும். ஆரோக்கியமான உணவு குறிப்பாக கேல்சியம் அதிகம் உள்ள பால், தயிர், பச்சைக் காய்கறிகள், மீன், முட்டை, பாதாம், வால்நட் போன்றவை எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கும் நல்லது. தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்லது. வீட்டுவேலை, வெளிவேலை செய்பவராய் இருந்தபோதும் மூட்டுகளுக்கென்று தனியாகப் பயிற்சி செய்யவேண்டும். தினமும் நடப்பது அவசியம். காலை நீட்டி, மடக்கி பயிற்சி செய்யவேண்டும். ஓட்டப்பயிற்சி மூட்டுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல. அதிகமாக மாரதான் (Marathon) ஓடுபவர்களுக்கு இளவயதிலேயே மூட்டுகள் பாதிக்கப்படலாம். அதனால் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மாற்றவேண்டும். சைக்கிள் ஓட்டுவது முழங்கால் மூட்டுக்கு நல்லது. இருந்த இடத்திலேயே சைக்கிள் ஓட்டவும் (Stationary Bike) இப்போது வசதிகள் உள்ளன.
வயதானால் வரும் உபாதைகளில் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸும் ஒன்று. தகுந்த வைத்தியம் செய்துகொண்டால் நிவாரணம் கிட்டும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |