சிவஞான வித்தகர், திருவாசகக் கொண்டல், சிவத்தமிழ்ச் செல்வி, சித்தாந்த ஞானாகரம், சைவதரிசனி, திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, தெய்வத் திருமகள் உட்படப் பல கௌரவங்கள் பெற்றவர் தங்கம்மா அப்பாக்குட்டி. சைவத்திற்கும் தமிழுக்கும் தன்னை அர்ப்பணிந்து வாழ்ந்த இவர் ஜனவரி 07, 1925 நாளன்று யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில், தையல்பிள்ளை-அப்பாகுட்டி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆசிரியர். சிவன், அம்பாள் பக்தரும்கூட. சிறந்ததோர் சைவச்சூழலில் வளர்ந்தார் தங்கம்மா. தந்தை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சியுடையவர். அவர் வழியில் மகளும் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இவரது ஆரம்பக்கல்வி அமெரிக்க மிஷன் தமிழ்ப்பாடசாலையில். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே பல போட்டிகளில் பரிசுபெற்றார். பேச்சுப் போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்த திருவாசக நூல் தமிழ்மீதும் சைவத்தின்மீதும் பற்று அதிகரிக்கக் காரணமாகியது. தொடர்ந்து பல பேச்சரங்குகளில் பங்கேற்று வென்றார். ஆசிரியர் கல்வியை நிறைவு செய்து, ஆசிரியராகப் பணி துவக்கினார். சிறந்த ஆசிரியராக விளங்கியதுடன் ஓய்வுநேரத்தில் சைவம், தமிழ் குறித்துச் சொற்பொழிவாற்றி வந்தார். கொழும்பு விவேகானந்த சபையில் இவர் ஆற்றிய சொற்பொழிவு இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அதுமுதல் நாடெங்கும் பயணித்துச் சொற்பொழிவாற்றத் துவங்கினார். தொடர்ந்து பயின்று பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய பட்டங்களைப் பெற்றார். சென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் சைவப்புலவர் தேர்விலும் தேர்ச்சிபெற்றார்.
தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே பொருளாளராகப் பொறுப்பேற்ற தங்கம்மா, திறம்படப் பணியாற்றி அறங்காவலர் தலைவராக உயர்ந்தார். அவ்வாலயத்தை ஈழத்தின் குறிப்பிடத்தக்க தெய்வநிலையமாக வளர்த்தெடுத்தார். யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தியதில் இவருக்கு மிகமுக்கியப் பங்கு உண்டு. பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் முழுக்க முழுக்கச் சமய, சமூகப் பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஈழத்தில் நடக்கும் திருவாசகர் விழா, மணிவாசகர் விழா, சேக்கிழார் விழா போன்றவற்றில் வாழ்நாளின் இறுதிவரை ஆண்டுதோறும் சிறப்புரையாற்றிய பெருமை இவருக்குண்டு. "அறிவியலை நாம் மூளையில் திணிப்பதால் மட்டும் பேராக்கத்தைப் பெற்றுவிட முடியாது. அந்த அறிவை இதயத்துள் இறக்கி வாழ்க்கையின் உள்ளீடான அன்பையும் கருணையையும் பெற்று உய்வதனாலேதான் பிறவியின் பயனை எய்துகின்றவராவோம்" என்பது தங்கம்மா அப்பாக்குட்டியின் முக்கியமான சிந்தனையாகும். கருணையும் அன்பும் கொண்டிருந்த இவர், பெண்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இலங்கை வானொலியில் 'மாதர்நலம்' குறித்துத் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் 'பெண்மைக்கும் இணையுண்டோ?' நூல் சிறப்பானது. 'வாழும்வழி' என்ற நூலும் முக்கியமானது. தமிழறிஞர்கள் தெ.பொ.மீ., அ.ச.ஞா. உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றவர். இலங்கை மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் என பல இடங்களுக்கும் பயணம் செய்து பல மேடைகளில், தமிழ், சைவம் ஆகியவை குறித்துச் சொற்பொழிவாற்றியிருக்கிறார். வாழ்நாளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பேசிய பெருமைக்குரியவர்.
சைவப் பணியோடு சமூகப் பணியையும் மேற்கொண்டார். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து அதன்மூலம் பல சமூக நற்பணிகளைச் செய்துவந்தார். ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தல், கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்தல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம், அன்னபூரணி அன்னதான மண்டபம் போன்றவை இவரது உழைப்பில் விளைந்தவை. திருமண மண்டபம் ஒன்றையும் நிறுவிக் குறைந்த செலவில் திருமணங்கள் நடக்க உதவினார். பழைய ஆய்வு நூல்களைப் பாதுகாக்கவும், தேடிப் பதிப்பிக்கவும் என இவரால் உருவாக்கப்பட்ட 'சிவத் தமிழ்ச் செல்வி ஆய்வு நூலகம்' இவர் பணிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். கனடாவின் சைவ சித்தாந்த மன்றக் காப்பாளர்களில் ஒருவராகவும், 'அன்புநெறி' இதழ் சிறப்பாசிரியர்களில் ஒருவராகவும் இருந்து பணியாற்றியவர். பல நூல்களின் ஆசிரியரும்கூட. இவரது சொற்பொழிவுகள் பல தொகுக்கப்பட்டு நூல்களாகியுள்ளன. 'இலண்டனில் ஏழுவாரம்', 'மலேசியா-சிங்கப்பூர் சுற்றுப் பிரயாணச் சொற்பொழிவுகள்', 'கந்தபுராணச் சொற்பொழிவுகள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. 'அபிராமி அந்தாதி', 'கந்தபுராணச் சுருக்கம்', 'பெரியபுராண வசனம்', 'அரியவும் பெரியவும்', 'சைவபோதம்', 'சைவக் கிரியைகளும் விரதங்களும்' போன்ற நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பெற்ற பெருமையுடையன.
"பல சோதனைகளும் கஷ்டங்களும் நிறைந்த காலத்தில் ஆன்மீக ஒளிபரப்பி எமது மக்களுக்கு உண்மையில் கலங்கரை விளக்கமாகவே விளங்கினார். அப்படியான பிரச்சினைகள் மிகு காலகட்டத்தில் யாழ் மண்ணின் மக்களுடன் மக்களாக இணைந்து வாழ்ந்து அவர் தன் சிறப்பை இருண்ட காலத்திலும் மின்ன வைத்தார்" என்று இவரைப் புகழ்கிறார், இந்து மாமன்றத் தலைவராக விளங்கிய வி. கைலாசப்பிள்ளை. "சைவப் புலவர் பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தின் தூண்டாமணி விளக்கு. ஈழத்தின் வரலாற்றிலேயே சைவத் தமிழ்ப் பெண்களுக்கு முதலிடம் தந்து நிற்பவர் அவரே!" எனப் பாராட்டுகின்றனர், அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கத்தினர்.
"செந்தமிழ் மொழிக்கும் சிவனெறி யதற்கும் அந்தமில் தொண்டுகள் ஆற்றிடு செல்வி தண்டமிழ்ப் பண்டிதர் சைவப் புலவர் எண்டிசை போற்ற இலங்குதங் கம்மா..."
என்று பாராட்டுகிறார் கம்பனடிப்பொடி சா. கணேசன். தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது சிறப்பைப் பாராட்டி மதுரை ஆதினகர்த்தர் 'செஞ்சொற்செம்மணி' என்ற பட்டம் வழங்கினார். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தால் 'துர்க்கா துரந்தரி' எனக் கௌரவிக்கப்பட்டார். இவரது கந்தபுராணச் சொற்பொழிவுக்கு 'சாகித்திய மண்டல'ப் பரிசு கிடைத்தது. இவரது சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 'கலாநிதி' பட்டம் வழங்கியது. ஹவாய் சிவாய சுப்ரமணியசுவாமி ஆசிரமம் 2005ம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை வழங்கியது. இவரது வாழ்நாள் சாதனைக்காக இலங்கை அரசு 'கலாசூரி' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது
ஆசிரியப்பணி, சமூகப்பணி. ஆலய அறங்காவல்பணி, சொற்பொழிவுப்பணி போன்றவற்றில் ஈழத்தின் சிறந்த முன்னோடியாகத் திகழ்ந்த இவர், ஜூன் 15, 2008 நாளன்று உடல் நலிவுற்றுக் காலமானார். ஆறுமுக நாவலருக்குப் பிறகு சமயத்தையும், சமூகத்தையும் தனது தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டு சமயப்பணி செய்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி என்பதில் சற்றும் ஐயமில்லை.
பா.சு. ரமணன் |