'கலை காலத்தின் கண்ணாடி' என்பார்கள். ஆனால் சமூகம் திரைப்படத்தின் கண்ணாடி ஆகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. சற்றே பின்னால் பார்த்தால் ஒரு மிகப்பிரபலமான படத்தின்மூலம் மிகப்பிரபலமடைந்த ஒரு கதாநாயகர் அந்தப் படத்தின் முதல்பகுதி முழுவதையும் தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணைக் கடத்திக்கொண்டு போய் ஒரு குகைக்குள் வைத்துப் படாதபாடு படுத்துவார். இத்தனைக்கும் அவர் எந்த உருப்படியான வேலையும் செய்யாத ஒரு 'ரோட்சைடு ரோமியோ'தான். இன்றைக்கு வரும் பெரும்பாலான படங்களில் தொடக்கமே ஒருதலைக் காதல்தான். நாயகர்கள் பெண்ணை மிகக்கேவலமாகப் பேசுவதும், 'கொலவெறி' கொண்டு பாடுவதும், அவமானப்படுத்துவதும், ஏன், கைநீட்டி அடிப்பதும் மிகச்சாதாரணமான காட்சிகளாகிவிட்டன. இதன் அடிநாதம் ஒரே ஒரு செய்தி: 'பெண்ணே! நான் காதலித்தால் நீ காதலித்தாகவேண்டும்'.
இந்த மனநிலையைச் சமுதாயத்தில் எங்கும் காணமுடிகிறது. தனது மோகத்தை ஏற்காத பெண்ணைக் கற்பனை செய்யமுடியாத அளவு பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவது (உங்களுக்கு நிர்பயா நினைவு வரலாம்), அவர்மீது ஆசிட் வீசுவது என்பதெல்லாம் தாண்டி, அண்மையில் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பலர் முன்னிலையில் நடந்ததுபோல, கொடூரமாக வெட்டிக் கொல்வது - எனத் தொடர்ந்து நடக்கின்றன. காதல் என்பதை அன்பின் வெளிப்பாடு என்று கொண்டால், தான் அன்புசெலுத்தும் ஒருவரை, அவர் அதனை ஏற்காவிட்டாலும்கூட, கொடூரமாகத் துன்புறுத்தும் செய்கையை எப்படிக் 'காதல்' என்ற சொல்லால் அழைப்பது! பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் மிக அதிகமாகப் பறை கொட்டப்படும் இந்த நாளில்தான் இத்தகைய சிந்திக்கமுடியாத குற்றங்கள் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்றன. இதன் மற்றொரு பரிணாமம்தான் ஆர்லண்டோ ஒருபாலினச் சேர்க்கையாளர் கிளப்பில் நடைபெற்ற படுகொலை. இவை கண்டிக்கத்தக்கன. இன்றைய கல்விமுறை, மக்கள் வளர்ப்புமுறை, சமுதாய ஒழுக்கம் ஆகியவை வெகுவாகத் தவறிவிட்டதை இவை காட்டுகின்றன. பேச்சுரிமை/எழுத்துரிமை என்ற பெயரில் கலைகள் சமுதாயத்தைச் சீர்கெடுக்கும் சக்திகளாகி விட்டதையும் இது காண்பிக்கிறதோ என்றும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. அரசு, பெற்றோர், கல்வியாளர்கள், பொதுநலம் விரும்பிகள் எல்லோருமே சிந்தித்தாக வேண்டும்; செயல்படவும் வேண்டும்.
*****
இயற்கை வேளாண்மை, வரலாற்றுப் பாதுகாப்பு, செவிவழித் தொடுசிகிச்சை போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வோரை நேர்காணல் செய்துள்ள தென்றல், இயற்கை முறையில் உடல்நலம் பேணுவது குறித்துப் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் டாக்டர் கு. சிவராமன் அவர்களுடன் இந்த இதழில் மிகச்சுவையாக உரையாடியுள்ளது. அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆல்போல் பரவி அருகுபோல் வேரோடிய வரலாற்றைச் சிகாகோவின் வ.ச. பாபு மற்றொரு கட்டுரையில் விவரிக்கிறார். ரம்ஜான் சிறப்புச் சிறுகதையைச் சவூதி அரேபிய எழுத்தாளர் அபுல்கலாம் ஆசாத் எழுதியுள்ளார். இந்த மாதத்தின் பல்சுவை விருந்து இதோ உங்கள் கையில்! இதற்கு நாங்களென்ன கட்டியம் கூறுவது! உங்கள் தென்றல் உங்களோடு....
வாசகர்களுக்கு குருபூர்ணிமை மற்றும் ரம்ஜான் மற்றும் அமெரிக்கச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
ஜூலை 2016 |