அட்லாண்டா: தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஏப்ரல் 16, 2016 அன்று அட்லாண்டா வாழ்கலைமன்றத்தில் (Art of Living) மையத்தில் தேவாரம், திருவாசம், திருப்புகழ் எனத் தமிழ்மறைகளை ஓதித் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. திருமதி பூங்கோதை ராம்மோகன், திரு. ராம்மோகன் கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் திரு. பெரியண்ணன் சந்திரசேகரன், திரு. அருண் சந்தானம், திரு. ஹரிஹரன் சாம்பசிவம், திரு. குமரேசன் நடராசன், திருமதி. மங்களா ஐயர், திருமதி. பைரவி சந்திரமௌலி, திருமதி. லலிதா சந்திரசேகரன், திருமதி. உமா கோலப்பன் இவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது. ஆறுமணி நேரம் நடந்த இந்த வழிபாட்டில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர் சேர்ந்து பாடினர்.

நல்வழி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, திருக்குறள், திருப்புகழ், விநாயகர் அகவல், தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப்பதிகம், அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ், உட்பட்ட பல மறைகளிலிருந்து பாடல்கள் ஓதப்பட்டன. நூல்களுக்கான சிறுகுறிப்புகளோடும், எழுதியவர் வரலாற்றோடும் வழிநடத்துநர் ஒருவர் எடுத்துரைக்க, ஒவ்வொரு பாடற்றொகுதியும் ஓதப்பட்டது. மெட்டு அமைக்கப்பட்டுக், குழுவாகப் பாடிப் பயிற்சிபெற்ற சிறுவர்களோடு பெரியோரும் பாடினர். ஐங்குறுநூறிலிருந்து ஓரம்போகியாரின் "ஓம் வாழி ஆதன்! வாழி அவினி! மாரி வாய்க்க! வளம் நனிசிறக்க!" என்ற வாழ்த்துடன் நிறைவுசெய்தனர்.

இதில் அட்லாண்டாவின் The Heritage Tamil Academy சார்ந்த, ஏழிலிருந்து 16வயது வரையான மாணவ மாணவியர் தெளிந்த ஒலிப்போடு பாடல்களைப் பாடினர். இத்தமிழ்ப்பள்ளி, தமிழ்ப்பாடங்களோடு, ஒலிப்பும் பொருளோடு ஓதலும் பயிற்றுகின்றது.

மேலும் பிராணாயாமம் மற்றும் சிவநாம ஓதுமுறையைத் திரு. கண்ணப்பன் பயிற்றுவித்தார். ராமநவமியை முன்னிட்டு பானகமும், வழிபாட்டுப் படையலும், பின்னர் பல்வகை உணவும் எனக் கொண்டாட்டமாய் நிறைவுற்றது வழிபாடு.

மங்களா ஐயர்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com