2016 ஏப்ரல் 23-24 நாட்களில் வடகரோலினாத் தமிழ்ச்சங்கம் திருமதி. வைதேகி அவர்களின் வழிகாட்டலில் தமிழ் இலக்கியப் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்களும் எட்டுத்தொகை பத்துப் பாட்டுகள் யாவை, அவை எழுதப்பட்ட காலம், நிலம், நிலத்தின் தன்மை போன்றவற்றைச் சுவையுறக் கற்பித்தார். வைதேகி அவர்கள் சங்க இலக்கியத்தை எளிய முறையில் கற்பது எப்படி என்று ஊர் ஊராகச் சென்று கற்பிக்கிறார்.
பயிலரங்கத்தின் முதல்நாள் சங்ககாலத்தைப் பற்றியும், ஐந்திணைகள், அவற்றுக்குரிய பண்புகள் மற்றும் ஒழுக்கங்களைப் பற்றியும், அக்காலப் புலவர்கள், குறுநில மன்னர்கள் குறித்தும் அறிமுகம் செய்தார். நாள்முடிவில் ஒவ்வொரு பாடலும் எத்திணையைச் சேர்ந்தது என்று கூறுமளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தோம்.
இரண்டாம் நாள் பயிலரங்கில் நெய்தல், பாலைத் திணைகளிலிருந்து தலைவன் போருக்கோ பொருள்தேடியோ வேறு நகரத்துக்குச் செல்லும்போது தலைவியின் நிலையை, பிரிவுத்துயரைப்பற்றிப் பாடும் பாடல்கள் சிலவற்றைப் படித்தோம். பயிலரங்கின் முடிவில் ஒரு வளமிக்க பண்பாட்டோடு வாழ்ந்தது தமிழ்ச்சமூகம் என்பதை அன்று அறிந்தோம். சங்க இலக்கியம் புரியாத புதிரல்ல என்று உணரவைத்தது திருமதி. வைதேகி அவர்களின் இலக்கியப் பட்டறை என்றால் மிகையாகாது.
திருமதி வைதேகி அவர்களின் சங்கப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க: learnsangamtamil.com
பரணிகா இடைக்காடர், வடகரோலினா |