ஃப்ரிஸ்கோ: பாலதத்தா தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
ஏப்ரல் 30, 2016 அன்று டெக்சஸ் மாநிலம் ஃப்ரிஸ்கோ ஸ்ரீகாரியசித்தி அனுமன் கோவிலில் இயங்கிவரும் பாலதத்தா தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா நடந்தேறியது.

மழலைநிலை மாணவ, மாணவியர் காய்கறிகள் மற்றும் தலைவர்களாக உடையணிந்து மழலையில் பேசி மனம் கவர்ந்தார்கள். நிலை-1 மாணவ மாணவிகள் "உலகை நீ மாற்ற நினைக்காதே, உன்னை முதலில் மாற்றிக்கொள்" என்ற கருத்தை வலியுறுத்தி அருமையான நாடகம் ஒன்றை வழங்கினார்கள். மேலும், நிலை-1 மாணவிகள், அழகானதொரு கிராமியப் பாடலுக்கு ஆடிக் கைதட்டல் பெற்றார்கள்.

நிலை-2 மாணவ மாணவியர் 'பரமார்த்த குருவின் கதை'யை நாடகமாக வழங்கினார்கள். நிலை-2 மற்றும் நிலை-3 மாணவ மாணவியர், "ஒவ்வொரு பூக்களுமே" பாடலை இனிமையாகப் பாடினர். நிலை-3 மற்றும் நிலை-4 மாணவ மாணவிகள், வாஸ்து மற்றும் எண் சோதிடம் என்ற பெயரில் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை "ஜீ-ஜீ" என்ற நாடகத்தின் மூலம் சிந்திக்க வைத்தார்கள்.

விழாவில், சாஸ்தா அறக்கட்டளையின் 9ம் ஆண்டு திருக்குறள் போட்டியில், 1330 குறட்பாக்களையும் ஐந்துமணி நேரத்தில் சொல்லி சாதனை படைத்த முனைவர். சித்ரா மகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பாலதத்தா பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சிரிஷ் பூண்டலா சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார். ஆசிரியர்கள் திரு. ஜெய் நடேசன், திருமதி. கீதா சுரேஷ், திருமதி. ஷைலா நாராயணன், திருமதி. ஆர்த்தி ராமமூர்த்தி, திருமதி சங்கீதா கார்த்திக், திருமதி. பவானி சுப்ரமோனி, திருமதி. ப்ரியா கோபிகண்ணன், திருமதி. சூர்யா சுகவனம் மற்றும் திருமதி. வித்யா ரமேஷ் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜெய் நடேசன்

© TamilOnline.com