2016 மே 6-7 நாட்களில் TiECON2016 மாநாட்டை TIE Silicon Valley சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்தியது. இதில் 4800 பேர் பங்கேற்ற அதே நேரத்தில் இதற்கு உலகெங்கிலுமிருந்து வந்திருந்த சுமார் 125 தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பொன்றை நிகழ்த்தினர். ஸ்ரீதர் வேம்பு (Zoho, சென்னை), பிரபாகர் சுந்தரராஜன் (Fabric) ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். தமது துறையில் எப்படி வெற்றியடைந்தார்கள் என்பதை இதில் பேசியோர் பகிர்ந்துகொண்டனர். புதிதாகத் தொழில் தொடங்கியோரும் கருத்துப் பகிரமுடிந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தவிர இந்தியாவின் கோவை, மதுரை, பாண்டி, பெங்களூரு போன்ற இடங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் இதில் பலர் பங்கேற்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தை (American Tamil Entrepreneurs Association - ATEAusa.org) ஆர்வத்துடன் தொடங்கினர். அடுத்த ஆண்டு இந்தச் சந்திப்பைப் பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் டெட்ராயிட் நகரிலும் நடைபெற இருக்கும் TiECON Detroit மாநாட்டின்போது ஒரு சந்திப்பு நடத்தப்படும்.
தமிழர்கள் தொழில் தொடங்கும்போது ஆரம்பக்கட்டத்திலிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு உதவிசெய்வது இந்தச் சந்திப்புகள் மற்றும் சங்கத்தின் நோக்கமாக இருக்கிறது. தொழில்துறை வழிகாட்டல், பலவகைப் பயிற்சி வாய்ப்புகள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்ரீதியாக ஆற்றல் தரவும், அவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கவும் இந்த அமைப்பு ஆவன செய்யும்.
நரசிம்மன் கஸ்தூரி, கூபர்ட்டினோ, கலிஃபோர்னியா |