மில்வாக்கி: ஸ்ரீ தியாகராஜ ஆராதனை
மே 7, 2016 அன்று மில்வாக்கியில் ஸ்ரீ தியாகராஜர் உத்சவம் விஸ்கான்சின் இந்துக் கோவில் அரங்கில் விமரிசையாக நடந்தது. வேத, மந்திர கோஷங்களுடன் உத்சவம் ஆரம்பமாயிற்று. அடுத்து பாடகர்களின் பஞ்சரத்னகிருதிகள் செவிக்கு இனிமை. பின்னர் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளைக் காட்டினர். அன்று மாலை குரு திருமதி. சீதாராஜன் அவர்களிடம் பயின்ற டாக்டர். பத்மா சுகவனத்தின் இசைவிருந்து அற்புதம். திரு. கமல கிரண் (வயலின்), திரு. வினோத் சீதாரமன் (மிருதங்கம்) ஆகியோரின் பக்கவாத்தியம் அபாரம். பத்மா சுகவனம் கேதார ராகத்தில் "தியாகராஜ குரும் ஆஸ்ரயே" என்ற குருவணக்கத்தோடு தொடங்கிப் பாடியது பிரமிக்கவைத்தது. ஸஹானாவில் "ஏமானாதிசேவோ" என்ற பாட்டுக்கு நிஷாதம் பாடிவிட்டு தைவதம் பாடியது பிரமாதம். ஹிந்தோளத்தில் ராகம், தானம், பல்லவி, "சங்கீத சாஹித்ய நிபுணம் சத்குரு தியகராஜம் பஜரே" என்று ஆலாபனை, நிரவல், ஸ்வரம் எல்லாம் கேட்டு மெய்சிலிர்த்துவிட்டது. திருப்புகழ், காவடிச்சிந்து எல்லாம் தேன்மழை. மங்களத்துடன் நிறைவுசெய்தார். திரு. சுவாமிநாதன் நன்றியுரையுடன் ஆராதனை இனிதே நிறைவடைந்தது.

பத்மா சுகவனம் அமெரிக்காவில் 17 இடங்களில் கச்சேரி செய்ய வந்துள்ளார். அவருடன் padmasugavanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

லலிதா வெங்கட்ராமன்,
மில்வாக்கி, விஸ்கான்ஸின்

© TamilOnline.com