ராம-ஈஸ்வரா - நாட்டிய நாடகம்
மே 15, 2016 அன்று ஆசார்யா கலைக்கழகமும் (Acharya Performing Arts Academy) நூபுர கீதா அமைப்பும் இணைந்து ஷாம்பர்க் ப்ரையரி ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்தில் ராம-ஈஸ்வரா நாட்டிய நாடகத்தை வழங்கினர். ராவணனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் இந்த நிகழ்ச்சி அழகாகச் சித்திரித்தது. கழக நிறுவனர் விதுஷி ஆஷா ஆசார்யா அடிகா நடனத்தை வடிவமைத்து இயக்கியதோடு, ராவணனாகவும் பாத்திரமேற்றிருந்தார். இசைபயிலும் மாணாக்கர்கள் கணேச வந்தனம் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர். அடுத்து செயின்ட் லூயியைச் சேர்ந்த சூர்யா கலைக்குழுவின் குரு பிரசன்னா கஸ்தூரி அவர்களின் கதக் நடனம் அரங்கேறியது. பின்னர் இண்டியானாபொலீஸ் யக்ஷகானா கலைப்பள்ளியிலிருந்து டாக்டர் ராஜேந்திர கேதலாயாவும் குழுவினரும் தனித்தன்மை வாய்ந்த யக்ஷகான நடனத்தை வழங்கி மகிழ்வித்தனர்.

சிவபெருமான் தன்னுடைய மாபெரும் பக்தனான ராவணனின் கதையைத் தாமே கூறுவதுபோல் நாட்டிய நடனம் ஆரம்பித்தது. நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக ராமன் ராவணனைக் கொல்லும் காட்சி அமைந்தது. ஆடை அலங்காரமும், குறிப்பாக புஷ்பக விமானமும் சிறப்பாக இருந்தன. மாது சந்திரசேகரன் மற்றும் சீமா கஸ்துரி (பாடல்), ஸ்ரீநிவாஸ் மகராஜன் (மிருதங்கம்) நீலா அமராவதி (வீணை), பிரஷாந்த் கல்லூர் (புல்லாங்குழல்), முரளிதர் காசே செண்டையும் அற்புதமான பின்னணியிசை வழங்கினார்கள்.

சந்திரா பப்புதேசு,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com