மே 22, ஞாயிற்றுக்கிழமை அன்று தேஜஸ் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா Make A Wish Foundation of North Texas, Irving வளாகத்தில் நடைபெற்றது. மூன்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த நடனப்பள்ளியில் நான்கரை முதல் 12 வயதுவரையிலான குழந்தைகள் நடனம் பயில்கிறார்கள். இந்த ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிமூலம், குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'Make A Wish Foundation' அமைப்புக்கு நிதியளிப்புச் செய்தனர்.
தாமே குழந்தைகள்தாம் என்ற போதிலும் மற்றக் குழந்தைகளுக்கு உதவும் உன்னத நோக்கத்துடன் அவர்கள் நிகழ்ச்சியை வழங்கினர். அறக்கட்டளையினர் குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிந்தனர்.
சுமார் 25 குழந்தைகள் குழுக்களாகப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். நிறுவனரும் குருவுமான திருமதி. புவனா வெங்கட்ராமன் பேசுகையில், நமது பாரம்பரிய நடனமும் ஒருவகையில் தாய்மொழியைப் போன்றதுதான். இதை அடுத்த தலைமுறை அமெரிக்கக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தப் பள்ளியை நிறுவியுள்ளோம். காலத்துக்கேற்ப மனிதநேயம், சுற்றுச்சூழல் போன்ற கருத்துக்களை நடனங்கள்மூலம் வெளிப்படுத்த முடியும். அதற்குத் தகுந்தாற்போல் நடனங்கள் கற்றுத் தருகிறோம் என்றார்.
சிறுவயதிலேயே தஞ்சாவூர் முறைப்படி குரு திருமதி. சுதா விஜயகுமாரிடம் பயின்ற புவனா, தொடர்ந்து அமெரிக்காவில் திருமதி. ரேவதி சத்யு, திருமதி. ராதிகா கணேஷ் ஆகிய குருமார்களிடம் பயிற்சிபெற்றுள்ளார். டாலஸ் இண்டிக் டான்ஸ் கம்பெனியின் இணை இயக்குனராகவும் உள்ள புவனா, தொண்டு நிறுவனங்களுக்காக நடன நிகழ்ச்சிகள் அமைத்தும் பங்கேற்றும் வருகிறார்.
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |