சங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி
ஜூலை 10, 2016 அன்று சென்னை சங்கர நேத்ராலயாவும் யு.எஸ். சங்கரநேத்ரலயா ஓம் டிரஸ்ட்டும் இணைந்து திருமதி. எம்.எஸ். அம்மா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறது. இது CET ஆன்டனி ஸோட்டோ தியேட்டர் (701 வைன் தெரு, சான் ஹோசே, கலிஃபோர்னியா) அரங்கில் நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. வரிவிலக்கு உண்டு.

இதில் கானகலாபூஷணி திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களின் இசைநிகழ்ச்சி இடம்பெறும். திரு. ஜெய்சங்கர் பாலன் (வயலின்), திரு. விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசிப்பார்கள்.

கண் மருத்துவத்தில் தனி அடையாளத்தைப் பதித்து உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பியுள்ள சென்னை சங்கர நேத்ராலயா 38வது ஆண்டுகாலச் சேவையைத் தொடர்கிறது. இன்றைக்கும் எம்.எஸ். அம்மா அவர்களின் இசைத்தட்டுகளின் ராயல்டி தொகை சங்கர நேத்ராலயாவுக்கு வழங்கப்படுகிறது. அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு கண் அறுவைசிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

சங்கர நேத்ராலயா சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து நடமாடும் அறுவைச் சிகிச்சை வசதிகள் அனைத்தும் கொண்ட இரட்டைப் பேருந்துகள் மூலம், நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதியை கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கு எடுத்துச் செல்கிறது. இதன்மூலம் சுமார் 2000 அறுவைசிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இது ஒரு புதிய மைல்கல்.

சங்கர நேத்ராலயா, எம்எஸ் அம்மாவின் நூற்றாண்டையொட்டி 2000 ஏழைகளுக்கு இலவச கண் அறுவைசிகிச்சை வழங்க உறுதிபூண்டுள்ளது. ஒரு அறுவைசிகிச்சைக்கு $65 வீதம் தேவைப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தாராளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறது.

சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 501 (c) (3) IRS பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு.

நன்கொடைகளை "SN OM Trust Inc" என்ற பெயரில் காசோலையாகவும், www.sankaranethralayausa.org என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் வழங்கலாம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com