ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25)
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை அறிவிப்பதுபோல் சிவந்த ரத்தம் அவரது வெள்ளைச் சட்டையை நனைத்தது. காட்டுவிலங்குகள் வேட்டையாடுவது போல இப்போது அந்த கைக்கூலிகள் சில நொடிகளில் தேசத்தை முன்னேற்ற முனைந்த சிந்தனாவாதியை செதில் செதிலாகச் சிதைத்து தரையில் கிடத்தினர். இந்தக் கோரசம்பவத்தை, அங்கு வந்திருந்த தொலைக்காட்சி கேமராக்கள் "அடித்தது லாட்டரி" என்பதுபோல, பரபரப்பாகப் படம்பிடித்து ஸ்டூடியோக்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. இப்போது அந்தத் தொழிற்சாலையின் அறிவிப்பு ஒலிப்பெருக்கியில், "திஸ் இஸ் போலிஸ். கைலாஷ் அனுப்பின கூலிக்காரனுங்க எங்க இருந்தாலும் உடனே உங்க ஆயுதங்களை போட்டுட்டு சரண்டர் ஆயிருங்க. ஃபேக்டரியைச் சுத்தி போலிஸ் இருக்கு. உங்களை அனுப்பின கைலாஷ் அரெஸ்ட் ஆயிட்டான். மீறி விஸ்வநாத்தை தாக்க முயற்சி பண்ணினா நாங்க உள்ள வந்து உங்கள சுடக்கூடத் தயங்கமாட்டோம்." கடுமையாக ஏ.சி.பி.யின் குரல் ஒலித்தது.

கூலிப்படைத் தலைவன் போன்றவன் இப்போது ஒரு நிதானத்துக்கு வந்து, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தான். சுற்றிலும் கேமராக்கள் படமெடுப்பதையும் கவனித்து, தாக்குதலை நிறுத்தி, "ஏய், பொருளெல்லாம் அப்படியே போட்டுட்டு குடோன் வழியா தப்பிச்சுருங்க. மாட்டினோம்னா வெளியே வரமுடியாது" என்று கூவினான். விஸ்வநாத்தைத் தாக்கியதோடு நில்லாமல், இப்போது அந்த ப்ரோடோடைப்பைத் தாக்கிச் சேதம் விளைவிக்க நினைத்த கும்பல், அந்த நினைப்பைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தது. அதேநேரம் பரத்தும் கேந்திராவும் உள்ளே ஓடிவந்து நடக்கக்கூடாத விபத்து நடந்தே விட்டைதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விஸ்வநாத்தை கேந்திரா மடியில் கிடத்தினாள். அவர் அந்த சில வினாடி தாக்குதலில், ரத்த சகதியில் குற்றுயிராக அடையாளம் தெரியாமல் கிடந்தார். "டாட்.. டாட்… யூ வில் பி ஆல்ரைட். செக்யூரிடி. யாராவது வாங்க, கால் தி ஆம்புலன்ஸ். ஃபர்ஸ் எய்ட் ப்ளீஸ்" என்று தோன்றியவற்றைக் கோவையில்லாமல் அரற்றினாள். இதற்குள் முதலுதவி சமாசாரங்களும், ஒரு ஸ்ட்ரெச்சரும் போலீஸோடு வந்துவிட்டன. அவசர உதவி டாக்டர், நாடி பார்த்து, "ப்ளீடிங்கை உடனே நிறுத்தணும். வீ ஆர் லூசிங் ஹிம். க்விக்" என்று முடிந்த முதலுதவியைச் செய்தவாறே, விஸ்வநாத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல யத்தனித்தார். மிச்சமிருந்த சக்தியைத் திரட்டி விஸ்வநாத் பரத்தைக் கைநீட்டி அழைத்தார். ஸ்தம்பித்திருந்த பரத் சுயநினைவு பெற்று விஸ்வநாத்தின் அருகே போனான். "பர…த்… க்விக். அசெம்பிள் தி எஞ்...சின். சாதிக்க…ணு…" நினைவு தவறித் தலைசரிந்தார். "ஹி மைட் ஸ்லிப் இன் டு கோமா. சீக்கிரம் தூக்குங்க."

விஸ்வநாத்தின் ரத்தமும், கூலிகளின் ஆயுதங்களும் அங்கு நடந்த கோரத்தின் பதிவுகளாகக் கிடக்க, விஸ்வநாத்தைத் தொடர்ந்து கேந்திரா மருத்துவமனைக்கு சென்றுவிட்டாள். வாணியும், டாக்டர் மித்ரனும் இந்தப் போட்டிக்கும் பொறாமைக்கும் தாக்குதல்களுக்கும் மொத்தக் காரணமான அந்த முழுமை பெறாத எஞ்சினும் பரத்தை வெறித்துக்கொண்டிருந்தன. பரத் இன்னும் அங்கு சில வினாடிகளின் நடந்து முடிந்த சம்பவங்களின் தாக்குதலிலிருந்து வெளிவராவிட்டாலும், குறை உயிரோடு விஸ்வநாத் தனக்குக் கடைசியாக இட்ட கட்டளைமட்டும் அவனை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. தலைமை ஏற்கவேண்டிய தருணம் இது என்று தீர்மானமாகத் தெரிந்தது. உடனே செயல்படத் தொடங்கினான்.

"யார் இங்க சூப்பர்வைசர்?" " உடனே போலிஸ் பெர்மிஷனோட இந்த எடத்தை க்ளியர் பண்ணுங்க. தேவையில்லாத ஆட்களை செக்‌ஷன்லேருந்து அப்புறப்படுத்துங்க. மீடியா ஆட்களை அதோ அந்த ஓரமா இந்த ப்ரோடோடைப்பை நல்லா தெரியற மாதிரி, அங்க எடம் குடுத்து ஒழுங்குபடுத்துங்க. க்விக்."

சூப்பர்வைசர் இந்தக் காரியங்களைச் செயல்படுத்தும்போது, "டாக்டர் மித்ரன், வாணி ஐ நீட் யுவர் ஹெல்ப்" என்று அவர்களைத் தனியாக அழைத்தான். டாக்டர் மித்ரன் முந்திக்கொண்டார். "என்ன பண்ற பரத்? எதுக்கு இன்னும் மீடியாவை இருக்கச் சொல்ற?"

"நாம சொன்ன கெடுவுக்குள்ள, இந்த எஞ்சினை அசெம்பிள் பண்ணி, சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிக்காட்டறோம். பெட்ரோல் தயவில்லாத, குறைந்தசெலவு ஆட்டோமொபில். இந்தக் கனவை இன்னிக்கு நிறைவேத்தறோம்."

"இட்ஸ் ஆல் ஓவர். இன்னிக்கு நம்மால இந்த எஞ்சினை அசெம்பிள் பண்ணி, ட்ரையல் ரன் பண்ணமுடியாது. நாம சேலஞ்சில தோத்துட்டோம்."

"ஒய் நாட்?"

"இந்த எஞ்சினோட ஃபைனல் அசெம்ப்ளிங், ஏன் இதோட ஆல்டர்னேட் எனர்ஜி சோர்ஸ் எல்லாமே ரொம்ப சீக்ரெட்டா விஸ்வநாத் எதிரிகளுக்குப் பயந்து தன் மூளைக்குள்ள வச்சிருந்தார். எனக்கோ, வாணிக்கோ அந்த டீடெயில்ஸ் தெரியாது. உனக்குத் தெரியும்னா, நாம அட்டெம்ப்ட் பண்ணலாம். இல்லைன்னா, வீ நீட் டு வெய்ட் ஃபார் விஸ்வநாத்."

"நோ, நாம இதுல ஜெயிக்கணும். இது நம்ம எதிரிகளோட ஃபவுல் ப்ளேனு தெரிஞ்சாலும், இன்னிக்கு நாம இந்த எஞ்சினைக் கொண்டு வரலைனா, நம்ம ஷேர்ஸ் மார்கெட்ல விழுந்துரும். அதுக்கப்புறம் போராடி நாம இது கேடிகேயோட வேலைன்னு ப்ரூவ் பண்ணினாலும், அதுக்குள்ள கேந்திரா மோட்டார்ஸ் படுத்துரும். வீ நீட் டு கோ அஹெட். நமக்காக இல்லைனாலும், கேந்திரா மோட்டார்சுக்காக இல்லைனாலும் விஸ்வநாத்துக்காக நாம இதைச் செய்யணும்."

"பரத் சொல்றது ரொம்ப சரி டாக்டர் மித்ரன். நாம முயற்சி பண்ணுவோம்" என்றாள் வாணி.

"என்ன பேசற வாணி? பரத் புரியாம உணர்ச்சி வேகத்துல பேசறான். நீயுமா? இதை நாம அடெம்ப்டே பண்ணலைனா, விஸ்வநாத் பொழச்சு வந்ததும் எஞ்சினை ரிலீஸ் பண்ணுவோம்னு சொல்லலாம். ஆனா, இப்ப நாம அடெம்ப்ட் பண்ணி தோத்துட்டா, ரிகவரே பண்ணமுடியாது."

"டாக்டர் மித்ரன், இதுல ரிஸ்க் இருக்குன்னு புரியுது. நான் அதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன். விஸ்வநாத் என்கிட்ட கடைசியா சொன்னதைக் கேட்டீங்க இல்லே? லெட் அஸ் பீ பாசிடிவ்."

இதற்குள் மீடியாவைச் சேர்ந்தவர்கள், "இந்த எஞ்சின் இன்னிக்கு வெளிவருமா?" "எஞ்சின் நினச்ச மாதிரி வரலைன்னு, மக்களை திசைதிருப்ப கேந்திரா மோட்டார்ஸே இப்படி ஒரு தாக்குதல் நாடகம் நடத்தியிருக்காங்கனு ஒரு நியூஸ் இப்ப வாட்ஸப்ல வந்துருக்கே. அதுக்கு என்ன சொல்றீங்க?" "நீங்கதான் பரத்தா? ஒன் ஃபோட்டோ ப்ளீஸ். நீங்க கேந்திராவோட லவராமே?" என்று கேள்வி அம்புகளைக் காட்டடியாக வீசிக்கொண்டிருந்தனர். நல்லவேளையாக வினய் அங்கு விஷயத்தைக் கேள்விப்பட்டு வரவே, பரத் அவனை மீடியாவை சமாளிக்கும் பொறுப்பை அளித்து, எஞ்சின் அசெம்ப்ளிங்கில் கவனம் செலுத்தினான்.

இரண்டு மணிநேரம் தனித்து இயங்கிய மூவர்குழு தங்களுக்கு விஸ்வநாத் அளித்திருந்த பொறுப்புகளின் மூலம் தங்களுத் தெரிந்த எஞ்சின் பாகங்களை நேர்த்தியாகப் பொருத்தினர். ஆச்சு. தொண்ணூறு சதவீதம் முடிந்தது. வியர்வை வெள்ளத்தில் குளித்திருந்த மூவரும் இப்போது முழுமூச்சாக நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருந்தனர். எஞ்சினின் உயிர்பாகத்துக்கு இணைப்பு தரவேண்டியது மட்டுமே பாக்கி என்ற கட்டத்தில் இருந்தனர். மித்ரனும், வாணியும் இப்போது தங்கள் வேலையை முடித்துவிட்டு, "இதுதான் கடைசிவேலை. மெய்ன் இணைப்பு எங்க, எப்படி முடுக்கிறதுனு எங்களுக்குத் தெரியாது. இதுவரை நாம பண்ணினதெல்லாம் சுலபமா ஒரு அசெம்ப்ளிங்க் எஞ்சினியர்கூடப் பண்ணிருவான். இதோ இந்த மெய்ன் இணைப்புதான் இந்த எஞ்சினோட மூளை. விஸ்வநாத் மொத்த சூட்சுமத்தையும் இதுலதான் ஒளிச்சிருக்கார்" என்றனர்.

"எனக்கு இந்த விவரம் தெரியாது. எவ்வளவோ யோசிச்சிருக்கேன். ஆனா இதுல இருக்கிற மர்மம் எனக்கு புலப்படலை. இந்த அசெம்ப்ளிங்குக்கு கெளம்பும் முன்னகூட கேட்டேன் விஸ்வநாத் சார்கிட்ட. அவர் ஒரு க்ளூமட்டும் குடுத்தாரு, பட் ஒண்ணும் புரியலை."

"மே பீ விஸ்வநாத் இப்ப சுயநினைவுக்கு வந்திருக்கலாம். கேந்திராவுக்கு ஃபோன் பண்ணிக் கேளு பரத். அவர் நம்ம கைடு பண்ணமுடியுமானு பாக்கலாம்" என்றாள் வாணி.

தன் ஃபோனை எடுத்து கேந்திராவை அழைக்க முற்பட்ட பரத், அதில் அப்போது கேந்திராவிடமிருந்து வந்த செய்தியைப் பார்த்த் ஸ்தம்பித்துப் போனான். "டாட் இன் கோமா. இன் ஐ.சி.யு. கோ அஹெட் வித் எஞ்சின் அசெம்ப்ளி."

"விஸ்வநாத் இன்னும் சுயநினைவுக்கு வரலை. திஸ் இஸ் அப் டு அஸ் நௌ" வறண்ட புன்னகை பரத்திடமிருந்து வந்தது. "டாக்டர் மித்ரன் இந்த மெயின் கனெக்‌ஷனை பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க"

"இந்த எஞ்சினோட லைவ் கனெக்‌ஷன் இதுதான். உடலுக்கு ப்ராணசக்தி மாதிரி, இந்த எஞ்சினுக்கு தேவையான ப்ராணசக்தி இத கனெக்‌ஷன் வழியா வரணும். வழக்கமான கார்கள்ல, இந்த சக்தி பெட்ரோல், டீசல் இதுலருந்து ஜெனரேட்டாகி எஞ்சினை உயிர்ப்பிக்கும். இந்த புது மாடல்ல, பெட்ரோல், டீசல் இல்லாம, ஏதோ ஒரு சோர்ஸ்லருந்து இந்த எஞ்சின் இயங்கணும். அது என்ன சோர்ஸுனு எனக்குத் தெரியாது. ஆனா இந்த கனெக்‌ஷனை சரியா நாம விஸ்வநாத் நெனச்சாமாதிரி குடுத்தா, அது இயங்கும்போது என்ன சோர்ஸ்ல இயங்குதுனு கண்டுபிடிக்கலாம்."

பரத் இப்போது அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த அந்த இணைப்புகளை நெருங்கிப் பார்த்தான். அவற்றை சரியான இடத்தில் இணைக்க வேண்டும். "வீனஸ், மெர்குரி, சன், சாடர்ன், மூன்" என்று மொத்தம் ஐந்து லேபில்கள் ஒட்டப்பட்ட தொடர்புகள் எஞ்சினின் மேல்பாகத்தில் இருந்தன. "பரத் இதோ இந்த அஞ்சுல ஒண்ணு சரியான கனெக்‌ஷன். ஆனா அது எதுன்னு தெரியாது"

"ஒவ்வொண்ணா கனெக்ட் பண்ணி டெஸ்ட் பண்ணினா?"

"முடியாது. ஒரே சான்ஸ்தான் இருக்கு. விஸ்வநாத் இதை ரொம்ப க்ளவரா டிசைன் பண்ணியிருக்கார். தப்பான காம்பினேஷன்ல இதை கனெக்ட் பண்ணி டெஸ்ட் பண்ணினா, எஞ்சின் வெடிச்சு, செல்ஃப் டிஸ்ட்ரக்ட் பண்றமாதிரி டிசைன் பண்ணியிருக்கார்."

"தவிர இதை கனெக்ட் பண்ணினாலும், என்ன எனர்ஜி சோர்ஸ்ல இது இயங்கப்போவுதுனு புரியாத புதிரா இருக்கு. இந்த எஞ்சின்ல வேற எந்த சூட்சுமமும் இல்லை. அதோ, அங்க செக்‌ஷனுக்கு வெளில நிக்குதே அந்த கார், அதுலதான் இந்த எஞ்சினை பொருத்தணும். அந்த காரைக்கூட ஒரு அங்குலம் விடாம பாத்துட்டேன். பெட்ரோல் டேங்கோ, எலக்ட்ரிக் பேட்டரியோ ஒண்ணுமே இல்லை. இட் இஸ் எ மிஸ்டரி"

"வாணி, டாக்டர் மித்ரன் எனக்கு சில நிமிஷம் அவகாசம் குடுங்க. கொஞ்சம் யோசிக்கணும்." பரத் அந்த அசெம்ப்ளி செக்‌ஷனின் மூலைக்குச் சென்று தனிமையில் யோசித்தான்.

அவன் நினைவில் முழு வாழ்க்கையும், தான் சாதிக்க நினைத்த விஷயங்களும் நியூஸ் ரீல் போல விறுவிறுவென ஓடின. இன்னும் ஒருசில வினாடிகளில் தான் செய்யவிருப்பது, கேந்திரா மோட்டார்ஸின் ஏன் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடியது என்று புரிந்தபோது அவன் உடல் நடுங்கியது. சுதாரித்துக்கொண்டு, தன் பாட்டி வள்ளியம்மை, தாத்தா யக்ஞசாமி ஆகியோரின் தியாகங்களை மறுபடி நினைவில் கொண்டான். பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்த அர்ஜுனனின் குறியைப் போல, இப்போது அந்த எஞ்சினைச் சரியாக இணைப்பது மட்டுமே பரத்தின் குறியானது. "வீனஸ், மெர்குரி, சன், சாடர்ன், மூன்" எது சரியா இருக்கும்? V09 ஒரு வேளை வீனஸைக் குறிக்கிறதோ? இல்லை, எனர்ஜி ஏதாவது கெமிகல் ரியாக்‌ஷன்ல வருமோ? அப்ப மெர்குரி சரியாயிருக்குமோ? குழப்பமாயிருந்தது. விஸ்வநாத் கடைசியாக சொல்லிச்சென்ற வார்த்தைகளை மீண்டும் அசைபோட்டான்.

"க்ளூ.. க்ளூ.. ம்ம்.. தலைகீழா நின்னாலும் இவன் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இயங்கமுடியாது. என் புது ப்ராடக்டும் அப்படித்தான் "V09+tblos" Technologically brilliant oil saver? அப்படி இருக்குமோ? பளிச்சென்று இப்போது அலம்பி விட்டாற்போல எல்லாம் புலப்படுவதுபோல் இருந்தது. புது உற்சாகத்தோடு பரத் அசெம்ப்ளிங்க் செக்‌ஷனுக்கு வெளியே இருந்த காரை நோக்கி ஓடினான். வெள்ளோட்டத்துக்காக வெளியே வெயிலில் அந்தக் கார் எஞ்சினுக்காக நின்று கொண்டிருந்தது. மணமகனுக்காகக் காத்திருக்கும் புதுப்பெண்ணைப்போல அந்த நீலநிறக் கார் நின்று கொண்டிருந்தது. வெளித்தோற்றத்தில் சாதாரண காரைப்போல தோற்றமளித்த அந்த வண்டியில், பெட்ரோல் டேங்க் திறப்பான் இல்லை, எஞ்சின் அமரும் இடம் ஒரு சிம்மாசனம் போன்று இருக்க, அதைச் சுற்றிலும் தங்கநிற ரேக்குகள் போலச் சில்லுகள் காரின் வெளிப்பாகத்தோடு இணைத்துக்கொண்டிருந்தன. பரத்தின் ஊகம் சரியானதுபோல அவனுக்குத் தோன்றியது. இப்போது காரின் மேல்பாகத்தைச் சற்று உற்று நோக்கினான். அந்த இளவெயிலில் ஒரு கோணத்தில் நீலநிறம் வேறு வர்ண ஜாலங்களை சில்லுசில்லாக இறைத்தன.

உற்சாகத்தோடு உள்ளே ஓடிவந்த பரத், "கண்டுபிடிச்சுட்டேன். டாக்டர் மித்ரன், வாங்க இதோ சில நிமிஷத்துல நாம தயாராயிடுவோம்" என்றான். மீடியா நண்பர்களைப் பார்த்து, "ஃப்ரெண்ட்ஸ், எங்க பாஸ் விஸ்வநாத் இவ்வளவு நாள் எதுக்காக பாடுபட்டாரோ, கிட்டத்தட்ட தன் உயிரை பணயம் வெச்சு இந்த தேசத்துக்கு ஒரு பெரிய பொக்கிஷத்தைக் குடுக்கணும்னு நெனச்சாரோ, அந்தக் கனவு நினைவாகப்போகிறது. கொஞ்சம் அமைதியா இருந்து இந்த சரித்திர முக்கியத்துவமான நேரத்தை பதிவு பண்ணுங்க. உங்க ஒத்துழைப்பு தேவை. இதை நீங்க லைவா கவர் பண்ணனும்னு கேட்டுக்கறேன். நம்ம தேசத்து மக்கள் இதைப் பாக்கணும், பெருமிதப்படணும். அவங்களோட உற்சாகமான வாழ்த்துக்கள் விஸ்வநாத்தை மறுபடி எழுப்பி நடமாட வெக்கணும்" என்று உணர்ச்சிகரமாகச் சொல்லிவிட்டு, எஞ்சின் இணைப்பை எல்லாமறிந்தவன்போல முடித்தான். அத்தோடு, அதை சுற்றி ஒட்டியிருந்த லேபில்களை முன்னெச்சரிக்கையாகப் பிய்த்தெறிந்தான். இப்போது அந்த எஞ்சின் வெளியே நின்ற காருக்குள் பொருத்தப்பட்டது.

காரை இயக்கப் பொதுமக்களின் பிரதிநிதி அழைத்து வரப்பட்டார். மீடியா மொத்தக் காரையும், கேமரா கண்களால் துழாவி, எந்த ஏமாற்று வேலையும் இல்லை என்பதை விளக்கிக் காட்டியது. விஸ்வநாத் முன்பே கேட்டுக்கொண்டிருந்தபடி, வெள்ளோட்டத்துக்கு முன்பாக, தேசியகீதம் இசைக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக அனைவரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளை வள்ளியம்மையும், பரத்தின் பெற்றோரும் கண்களில் பெருகும் கண்ணீரோடு டிவியில் பார்த்துப் பெருமிதம் கொண்டனர். அந்தத் தருணம் வந்துவிட்டது. காரை இயக்க இருந்த அந்த பிரதிநிதி, "பரத் இது இந்த நாட்டோட, இல்லை, உலகத்தோட தலையெழுத்தையே மாத்தக்கூடிய தருணம். இந்தக் காட்சி எப்படி மனிதன் நிலாவுக்குப் போய் காலடி எடுத்துவச்சானோ அதைப்போல இன்னும் நூறு, இருநூறு வருஷங்களுக்கு திரும்பத் திரும்ப காட்டப்படும். இந்த வெற்றிக்கு பெரியகாரணமான நீதான் இந்த காட்சில இருக்கணும். நீயே வண்டிய ஓட்டு" என்று சாவியைக் கொடுத்தார். மறுப்புச் சொல்லாமல், பரத் வாங்கிக்கொண்டான்.

டாக்டர் மித்ரன் அவன் காதோரமாக, "பரத் ஆர் யூ ஷ்யூர்? நீ தப்பான கனெக்‌ஷன் கொடுத்துருந்தா, வண்டியை ஸ்டார்ட் பண்ணினதும் வெடிச்சிரும். யுவர் லைஃப் இஸ் இன் டேஞ்சர்" என்று எச்சரித்தார்.

"நோ ஒரிஸ் டாக்டர், ஐ எம் ஃபைன்" என்று வண்டிக்குள் சென்று, எஞ்சினை ஸ்டார்ட் செய்தான். கடவுள் நம்பிக்கை இல்லாத டாக்டர் மித்ரன், தான் அறியாத ஒரு பெரிய சக்தியை நினைத்து மனதுக்குள் இறைஞ்சினார். சிம்ஃபொனி இசைபோல அந்தக் கார் கிளம்பும் சப்தம் நிசப்தமான சூழலை நிரப்பியது. வெண்ணெய்போல வழுக்கி, புகை கக்காமல் அந்த வண்டி ஓடுதளத்தில் விரைந்தது, "ஹோ…ஹோ" என்று பேரிரைச்சலை அங்கிருந்த டிவி, பத்திரிகையாளர்களும், தொழிலாளர்களும், பிரமுகர்களும் எழுப்பி ஆரவாரித்தனர்.

"ஹி டிட் இட், வீ அச்சீவ்ட் இட்" தழுதழுக்கும் குரலில் டாக்டர் மித்ரன் வாணியிடம் சொல்லிவிட்டு தானும் இந்த சரித்திரத்தில் இடம்பெற்றதை நினைத்து மகிழ்ந்தார். கார் இரண்டு சுற்று முடித்து புறப்பட்ட இடத்தில் வெற்றிகரமாக வந்து நின்றது. பரத் உற்சாகத்தோடு வெளியே இறங்க அவனுக்குப் பெரும் ஆரவாரத்தோடும் கைத்தட்டல்களோடும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும், உலகமெங்கும் இந்த முக்கிய நிகழ்வு ஒளிபரப்பாகியது. "சாதித்துக்காட்டிய இந்திய கம்பெனி" "பெட்ரோல், டீசலுக்கு குட் பை"; "விஸ்வநாத்துக்கு நோபல் பரிசா?" என்றெல்லாம் செய்திகள் வெளியான அதே நேரம், "விஸ்வநாத் கவலைக்கிடம்", "கேடிகே தில்லுமுல்லு அம்பலம்" போன்ற செய்திகளும் வெளியாகின.

நண்பனின் சாதனையில் பூரித்தவாறே, "சாதிச்சுட்டடா பரத். சந்தோஷமாயிருக்கு. அப்பா எப்பவும் சொல்வாரு, உனக்கு பிடிச்ச தொழிலைத் தேர்ந்தெடு, வசதி வாய்ப்புக்காக இல்லை, உன் மனசுக்குப் பிடிச்ச துறை, தொழில்ல ஈடுபட்டா நிச்சயம் ஒருநாள் சாதனை படைப்பன்னு. நீ அவர் சொன்னமாதிரி பெரிசா சாதிச்சிட்ட. விஸ்வநாத்தை தாக்கின ரவுடிகளை பிடிச்சாச்சு. கேடிகே கம்பெனிமேல கிரிமினல் கேஸ் போட்டிருக்காங்க. சரி, உடனே ஹாஸ்பிடல் போயி விஸ்வநாத் சாரை பாக்கலாம் வா" என்று நண்பனை அணைத்து அழைத்துப் போனான் மனோகர்.

மறுநாள் மொத்த உலகமும் தலைகீழாக விடிந்தது. கேந்திரா மோட்டார்ஸின் பங்கு விலை நூறுமடங்கு உயர்ந்தது. கேடிகே இந்தியாவில் எந்த வியாபாரமும் செய்யமுடியாத நிலைக்கு முடக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை வெகுவாகக் குறையத் தொடங்கின. விஸ்வநாத் இருபெரும் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, நினைவு திரும்ப, நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார். இன்னும் ஐசியுவில் இருந்த அவர் பரத்தைத் தனியாகப் பார்க்க விரும்புவதாகச் சொல்லவே, அவன் மட்டும் அனுமதிக்கப்பட்டான். வார்த்தைகள் பொலபொலவென விஸ்வநாத்திடமிருந்து உதிர்ந்தன. சிரமப்பட்டுப் பேசினார்.

"மை பாய். ஐ அம் ப்ரௌட் ஆஃப் யூ. எப்படி அந்த ரகசியத்தை கண்டுபிடுச்ச?" கண்களில் குறுகுறுப்போடு கேட்டார்.

"எல்லாம் நீங்க சொன்ன க்ளூவில்ருந்துதான் சார். 'V09+tblos' Technologically brilliant oil saver." தலைகீழா நின்னாலும் இவன் இல்லாமல் எதுவும் நடக்காதுனு சொன்னீங்க. Tblos அப்படியே தலைகீழா போட்டா solar னு வருது. அதனால sun னுங்கிற லேபில் இருக்கிற கனெக்‌ஷன் குடுக்கணும்னு யூகிச்சேன். அப்புறம் வெளில போயி காரை பார்த்தேன். சோலார் பவர்ல ஓடணும்னா பெரிய பெரிய சோலார் பேனல் இருக்கணுமே ஒண்ணும் இல்லயேனு குழப்பமா இருந்தது. அப்புறம் காரோட வெளிப்புறத்தை இன்னும் கவனிச்சேன். லிதியம் ஐயோடைட் கலந்த பெயிண்ட், காரோட வெளிபாகங்கள் நீங்க தனியா அசெம்பிள் பண்ணச் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த சீக்ரெட் கெமிகல் காரோட பாடி பார்ட்டுக்கு உபயோகப் படுத்தியிருப்பீங்க, அதுதான் காரை இவ்வளவு லைட்டாவும், சோலார் பேனல் போலவும் இயக்க உதவுதுன்னு கெஸ் பண்ணினேன். ரைட்?"

"பிரில்லியண்ட்." யோசித்தவாறே "காரை என்ன பண்ண?" என்றார் கவலையாக "பயப்படாதீங்க சார். கனெக்‌ஷன் குடுத்த ஒடனே லேபிலை எடுத்துட்டேன். யாராலயும் இந்த ரகசியத்தை பேடண்ட் பண்றவரை கண்டுபிடிக்கமுடியாது."

"தேங்க்யூ. நௌ ஐ கேன் ரெஸ்ட். போ கேந்திராவைப் பாரு" என்று கஷ்டப்பட்டுக் கண்ணைச் சிமிட்டினார்.

இதற்குமேல் என்ன நடந்திருக்கும் என்று விவரித்து, அந்த இளம் காதலர்களின் தனிமையை இங்கிதம் தெரியாமல் கெடுக்க விரும்பாததால், வாசகர்களின் ஊகத்துக்கு அதை விட்டுவிடுகிறோம். ஆனாலும் இந்தக் கதையில் நம்மோடு இரண்டு வருஷமாய் அன்னியோன்னியமாக இருந்த முக்கிய கதாபாத்திரங்கள் என்ன ஆனார்கள் என்று ஒரு சுவாரசியமான பின்னூட்டத்தை கதையை நிறைவு செய்யும்முன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

பரத்தும் கேந்திராவும் திருமணம் செய்து கொண்டார்கள். கேந்திரா மோட்டார்சின் நிர்வாகப்பொறுப்பை இருவரும் எடுத்துகொண்டதோடு, ஒரு வருடத்திலேயே 'யக்ஞா' என்ற ஒரு அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்கள்.

வாணி மேலும் ஆராய்ச்சியில் தன்னை முனைப்பாக ஈடுபடுத்திக்கொண்டாள். மோகன், கஸ்தூரியின் சிபாரிசின் பேரில் மனோகரை வாணி மணந்துகொண்டு கதிரேசனுக்கு நிம்மதியைத் தந்தனர்.

வினய் கேந்திரா மோட்டார்சின் நிர்வாகப்பொறுப்பில் மார்கெட்டிங்கில் கொடிகட்டிப் பறந்தான். அவனுக்கு இன்னும் பெண் தேடிக்கொண்டிருக்கிறார் கோபால் ரத்னம். அவரும் விஸ்வநாத்தும் பாதிநேரம் ஒய்வு, பாதிநேரம் நிர்வாக ஆலோசனை என்று நிம்மதியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். மோகனும், கஸ்தூரியும், கதிரேசனும் வள்ளியம்மையோடு கிராமத்துக்கே போய், அவளுடைய கிராமசேவையில் தங்களையும் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

போன நூற்றாண்டில் அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா, உலக சரித்திரத்தில் தலை நிமிர்ந்து பீடுநடை போடுவதையும், தன் பேரனின் சாதனையையும் பார்த்து, பெருந்தியாகங்கள் செய்த தன் கணவனின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்று நினைத்து வள்ளியம்மை நிம்மதி அடைந்தாள்.

(முற்றும்)

சந்திரமௌலி

© TamilOnline.com