ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னேசென்றுகொண்டிருந்த சில சிஷ்யர்கள் ஒரு கரும்புத் தோட்டத்தைப் பார்த்தனர். அதனுள்ளே நுழைந்து, நன்கு விளைந்து சாறுநிரம்பிய கரும்புகளை உடைத்து, ரசித்துக் கடித்துத் தின்னத் தொடங்கினர்.
அவர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தைப் பார்த்த தோட்டக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது, ஒரு தடித்த கம்பை எடுத்துக்கொண்டு அவர்கள்மீது அவர் பாய்ந்தார். இனிய கரும்புச் சாறினால் கவரப்பட்ட தனது சிஷ்யர்களின் ஒழுங்கற்ற இந்த நடவடிக்கையைப் பார்த்து குருவுக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று.
மறுநாள் அவர்கள் சத்ரபதி சிவாஜியின் அரண்மனையை அடைந்தனர். பேரரசர் அவர்களை மிகவும் கோலாகலமாக வரவேற்றார். குருவுக்குத் தானே அருகிலிருந்து புனிதநீராடச் செய்தார். நீராடும்பொருட்டாக ராமதாசர் தமது ஆடைகளை அகற்றியபோது அவருடைய முதுகில் சிவந்த பட்டை பட்டையான சுவடுகள் இருப்பதைக் கண்டு சிவாஜி துணுக்குற்றார். மகிமைமிக்க குரு தமது அதீதக் கருணையால் சீடர்களுக்கு விழுந்த அடியைத் தமது முதுகில் வாங்கிக்கொண்டிருந்தார்.
உடனடியாகப் பேரரசர் கரும்புத் தோட்டக்காரரை அழைத்துவர ஆளனுப்பினார். சக்ரவர்த்தியும் அவரது குருவும் இருந்த இடத்துக்கு வந்த தோட்டக்காரர் நடுங்கியபடி நின்றிருந்தார். விரும்பிய எந்தத் தண்டனையை வேண்டுமானாலும் தோட்டக்காரருக்குக் கொடுக்கும்படி குருவிடம் வேண்டிக்கொண்டார் சிவாஜி.
தனது சீடர்கள் செய்தது தவறுதான் என்பதில் தெளிவாக இருந்த சமர்த்த ராமதாசர், கரும்புத் தோட்டக்காரரை ஆசிர்வதித்தார். அத்தோடு அவருடைய கரும்புத் தோட்டத்துக்கு நிரந்தரமாக வரிவிலக்கும் கொடுத்தார்.
ஸ்ரீ சத்திய சாயிபாபா நன்றி: சனாதன சாரதி |