பூரம் சத்தியமூர்த்தி
மூத்த எழுத்தாளரும், இறுதிவரை இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தவருமான பூரம் சத்தியமூர்த்தி (80) சென்னையில் காலமானார். ஏப்ரல் 21, 1937ல், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்தபின் புதுகை மாமன்னர் கல்லூரியில் பயின்றார். அக்காலகட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'டிங்டாங்' இதழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து பல சிறார் இதழ்களில் எழுதினார். படிப்பை முடித்தபின் சென்னை துறைமுகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்றார். கணிதமேதை ராமானுஜத்திற்குப் பின் அவர் அமர்ந்து பணியாற்றிய நாற்காலியில் அமர்ந்து பணிசெய்த பெருமை இவருக்குண்டு. அக்காலகட்டத்தில் கண்ணன், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். 32 ஆண்டுகள் துறைமுகத்தில் பணியாற்றி தலைமை மேலாளராக உயர்ந்தார். பார்வைக்கோளாறு காரணமாகப் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். சிறுகதைகளுக்காகப் பல விருதுகள் பெற்றிருக்கிறார். வேதங்களையும், பாஷ்யங்களையும் ஆழ்ந்து பயின்றிருந்த அவர், வேத பாடசாலையில் இலவசமாக வேதம் பயிற்றுவித்தார். கூடவே தனது 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' வழியே சிறுகதை வாசிப்புக் கூட்டங்களையும் தொடர்ந்து நடத்திவந்தார். அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பூரத்திற்கு தென்றலின் அஞ்சலி.

விவரங்களுக்கு

© TamilOnline.com