தாயுமானவன்
"அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன்.

வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர்.

"அஞ்சு லட்சமா!" என்றான் லஷ்மி நாராயணன். "அது அதிகம் இல்லியா சார்?"

"குத்தம் என்ன, சாதாரண குத்தமாய்யா? வயித்துல ஆபரேசன் பண்ணிட்டு உள்ள கத்திரிக்கோலை வெச்சா தைக்கிறது? எக்ஸ் ரேயில தெரியுது சார் கத்திரிக்கோல். அது மேல பளிச்னு 'மேட் இன் ஜெர்மனி'னு போட்டிருக்கு. ஏன்யானு கேட்டா 'அது ஒசத்திக் கத்திரிக்கோல். துருப்பிடிக்காது. உள்ளயே இருக்கட்டுமே. ஒரு வேளை இன்னொரு ஆபரேசன் தேவப்பட்டுச்சுன்னா டக்குனு எடுத்துக்கலாம். இதுக்கு நாங்க கூடுதலா சார்ஜு போடல' னு தெனாவெட்டா சொல்றாங்க. ஜட்ஜூ நம்ம பக்கம். டாக்டரை அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு கொடுன்னாரு".

"அப்படியா?"

"செங்கல்பட்டு கேசு பத்தி சொல்லியிருக்கனா, உங்களுக்கு. வயித்து ஆபரேசனுக்குப் போன நோயாளிக்கு மண்டையில காயம். கட்டு போட்டிருக்கு. நேயாளி மயக்கம் தெளிஞ்சு தலைவலின்னு கத்தறான். எப்படி வந்திச்சு தெரியுமா? பாதி ஆபரேசன்ல நோயாளி தலைமேல லைட்டு விழுந்திரிச்சாம். கேட்கவே கேவலமா இல்ல?"

அப்பொழுதுதான் தபால்காரர் ஒரு கட்டுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். லஷ்மிநாராயணன் கடிதங்களை மேலாகப் பார்த்தான். "சரிங்க, நான் அப்புறமா வரேன்" என்று சொல்லிவிட்டு வக்கீல் வரதன் எழுந்தார்.

அந்த நீலக்கவரைக் கிழித்துப் படித்த லஷ்மிநாராயணன், கலவரத்துடன், "சார், வரதன் சார், இங்க வாங்க. இதைப் படிங்க" என்றான்.

வரதன் திரும்பி வந்து அதைப் பார்த்தார். குறிஞ்சி மெடிகல் லேபரெட்டரியிலிருந்து வந்திருந்தது, அங்கே நோயாளிகளின் ரத்தம், சிறுநீர், மலம் முதலியவற்றைச் சோதித்து விவரம் தருவார்கள். பல டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளை அங்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

உறையிலிருந்து கடிதத்தை எடுத்துப் படித்தார்.

"அன்புள்ள லஷ்மிநாராயணன், வாழ்த்துகள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்" என்று அதில் எழுதி இருந்தது.

"வாழ்த்துகள். உங்க மனைவியப் பிரசவ சோதனைக்கு அழைச்சிட்டுப் போனீங்களா?" என்றார் வரதன் புன்னகையுடன்.

"இல்ல சார். என்னோட சிறுநீரைச் சோதனைக்குக் கொடுத்திருந்தேன்"

"உங்களுதா? எதுக்கு?"

"இரவில சிறுநீர் போகப் பல தடவை எழுந்துக்க வேண்டியிருக்கு. டாக்டர் நாகராஜன்கிட்ட போனேன். அவர் எனக்கு நீரிழிவு நோய் இருக்கும்னு சந்தேகிச்சு லேபரட்டரில போய் சிறுநீரைச் சோதிச்சிட்டு வான்னாரு"

வரதன் கடிதத்தை ஆய்ந்தார். கீழே குளூக்கோஸ், சோடியம், பொட்டாசியம் அளவுகள், சிறுநீரில் வெளியான புரத அளவுகள் இருந்தன.

ஒரு மூலையில் 'கர்ப்பம்: ஆம்/இல்லை' என்ற இடத்தில் 'ஆம்' வட்டமிடப்பட்டிருந்தது. 'இல்லை' அடிக்கப்பட்டு இருந்தது.

எல்லாமே கம்ப்யூட்டர் அச்சடிப்பு. கையெழுத்தே இல்லை.

"குளூக்கோஸ் அளவு பாத்தா உங்களுக்கு டையாபிட்டீஸ் இருக்கு போல இருக்கு. எதுக்கு கர்ப்பமாயிருக்கீங்களான்னு சோதனை பண்ணணும்? பண்ணி நீங்க கர்ப்பம்னு உறுதிப் படுத்தணும்? ஏதோ தப்பு நடந்திருக்கு. பேரு குழப்பமா இருக்கலாம். லஷ்மின்னு பொண்ணு பேரு, நாராயணன் கிறது புருசன் பேரா இருந்து, கர்ப்பமா உள்ள ஒரு பொண்ணோட சிறுநீர் சோதனை ரிசல்டை உங்களுக்குத் தப்பா அனுப்பியிருக்கலாமில்ல"

"டையாபிடீசு சரி. ஏன் கர்ப்பம்னு பேத்தறாங்க?"

"கர்ப்பிணிகளுக்கு டையாபிடீசு வரதுண்டு. அது எனக்குக் கவலையில்லை. ஆ, இங்க பாருங்க லஷ்மிநாராயணன், ஆண், வயது 28ன்னு போட்டிருக்கு. விலாசம் உங்களுதுதான்" லஷ்மிநாராயணன் குழம்பினான்.

"இத பாருங்க சார். நீங்க ஆண் என்று தெரிந்தும், ஏதோ குழப்படி பண்ணி கர்ப்பம்னு பேத்தறாங்க. இது லேபரட்டரியோட தப்பா இருக்கலாம். கம்ப்யூட்டர் புரோகிராம் பண்ணினது தப்பா இருக்கலாம். ஆனால் தேவையில்லாத டெஸ்ட் பண்ணினது, இதைச் சரியா செக் பண்ணாம அனுப்பினது இதனால உங்களுக்கு மனவருத்தம் ஏற்படக் காரணமானது தப்பு. குறிஞ்சி லேப்காரன் பணக்காரன். ஒரு கவனக் குறைவு வழக்கு போடலாம். காசு கறந்திடலாம். என்ன சொல்றீங்க?"

"என்ன சார் பேத்தலா இருக்கு? நான் ஒரு ஆண்? நான் எப்படி கர்ப்பமா இருக்க முடியும்? நம்ப முடியுதா?"

"சார், நீங்க கர்ப்பமா இல்லியாங்கிறது இங்க பிரச்னை இல்லை. ஆண் கர்ப்பம் தரிக்கமுடியாதுனு எனக்குத் தெரியாதா? ஒழுங்கா, கொடுத்த டெஸ்டை செய்ய வேண்டிய ஒரு பொறுப்பான லேபரட்டரி, வேண்டாத டெஸ்டைப் பண்ணி, கர்ப்பம்னு ரிசல்ட் வேற சொல்லியிருக்கு. முன்ன ஒரு லேப்ல ஒரு தடவை ஒரு பெண்ணோட சிறுநீர் சாம்பிள் மாறிப்போய் கல்யாணம் ஆகாத பெண் கர்ப்பமா இருக்கானு தப்பா ரிசல்ட் சொல்லி அந்தப் பெண் தற்கொலை பண்ணிக்கப் போயி, அப்புறமா டெஸ்டு தப்புனு தெரிஞ்சு... அஞ்சு லட்ச ரூவா நஷ்ட ஈடு கேட்டு ஒரு லட்சம் கொடுக்கச்சொல்லி கோர்ட்டு தீர்ப்பு குடுத்தது. நாம என்ன செய்யணும்? ஒரு கேசு பைல் பண்ணிட்டு முயற்சி பண்ணா, கிடைக்கிறது கிடைக்கட்டும். பத்து லட்சம் கிடச்சா வேண்டாம்னா சொல்லுவீங்க?"

"யோசிச்சு சொல்றேன் சார்" என்றான் மெதுவான குரலில். வரதன் போனதும் குளித்து விட்டு வேலைக்குப் போனான். குளிக்கும்போது வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

ஒரு வேளை இது வெறும் பியர் குடிச்சதால் வந்த தொப்பையில்லையோ?

ஆபீசில் கோபுவிடம் மட்டும் இதைச் சொன்னான். கோபுவுக்குச் சிரிப்பு தாங்க வில்லை."இதக்கேட்டிருக்கியா? ஒரு பஸ் ஸ்டாப்புல தமிழன், குஜராத்தி, சர்தார்ஜி மூணுபேரும் பஸ்ஸ¤க்கு நிக்கறாங்க. அப்ப ஒரு பைத்தியம் ஓடி வந்து 'என் கையில இருக்குற சிரிஞ்சில எய்ட்ஸ் ரத்தம் இருக்கு. உன் பையில உள்ள காசைக் குடுக்கலனா, உன்னைக் குத்திடிடுவேன்'னு கத்துது. தமிழன் பர்சை எடுத்துக் கொடுத்திடறான்.

குஜராத்தி கொஞ்சம் விவாதம் பண்ணி பஸ் சார்ஜு மட்டும் வெச்சிகிட்டு பாக்கியைக் கொடுத்திட்டான். சர்தார்ஜி, 'போடா பைசா தரமாட்டேன். உன்னால ஆனதைப் பாத்துக்க'னுட்டான். பைத்தியம் சர்தார்ஜிய சரக்சரக்னு சிரிஞ்சால குத்திட்டு ஓடிட்டுது. அது போனப்பறம் தமிழனும், குஜராத்தியும் திகைச்சுப் போயி, 'ஏன்யா இப்படிக் கஞ்சனா இருக்க. உனக்கு இப்ப எய்ட்ஸ் வந்திடும், பயமில்லயா'ன்னாங்க. சர்தார்ஜி சொன்னான், 'எய்ட்ஸ் பத்தி எனக்கு பயமில்ல. ஏன்னா இப்ப நான் காண்டம் போட்டிட்டுருக்கேன்'. நீயும் போட்டிருந்தா எய்ட்ஸ் வந்திடும்னு பயந்திகிட்டு பணத்தை இழந்திருக்க வேணாமில்ல?"

இந்த ஜோக்கை லஷ்மிநாராயணன் ரசிக்கவில்லை.

கோபு விடவில்லை. அப்பவே சொன்னேன்... என்று ஒரு இன்னொரு சர்தார்ஜி தன் மனைவியிடம் சொன்னான்னு ஒரு ஜோக்கு சொல்லிச் சிரித்தான்.

லஷ்மிநாராயணனுக்கு ஏன் இவனிடம் சொல்லித் தொலைத்தோம் என்றானது.

ஆபீசில் செய்தி பரவி கும்பலாக வந்து கைகுலுக்கி பரிகசித்து ஒரு சாக்லேட் பெட்டியைக் கொடுத்தார்கள். ஒரு வாழ்த்து அட்டை வேறு. ஆண்களுக்குப் பிரசவ லீவு உண்டா என்று ஜோக்கடித்தார்கள்.

ராமு ஒருவன்தான் ஆறுதலாகப் பேசினான்.

"ஏதோ தப்பு நடந்து போச்சு. நீ கர்ப்பம்ங்கிறான். இவங்க கொடுத்த குளூக்கோஸ் ரிசல்டும் சரியா இருக்குமோ என்னவோ? இப்பல்லாம் மூலைக்கு மூலை ஒரு லேப் திறக்கறான். யாராவது இதையெல்லாம் முறையா செக் பண்ணி லைசென்சு கொடுக்கிறாங்களா தெரியல. பேசாம இன்னொரு நல்ல லேபுக்கு போ. மறுபடியும் டெஸ்ட் எடுத்துக்க. காசு செலவானாலும் உண்மை தெரியுமில்லயா?"

இது நல்ல அறிவுரையாகப் பட்டது.

அலுவலகத்திலிருந்து சீக்கிரமே கிளம்பி வீட்டுக்கு போனான். பேருந்தில் போகும் போது ஒரு விளம்பரம் அவன் கண்ணில் பட்டது "கர்ப்பமா? எளிய, ரகசியமான, விரைவான சோதனை. அணுகுங்கள் தொலைபேசி எண் 123-456-7890". அந்த எண்ணைக் குறித்துக் கொண்டான்.

வீட்டுக்குப் போனதும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான். சிறு குப்பியில் சிறுநீர் எடுத்து வந்தால் சோதித்துச் சொல்லுவோம் என்றார்கள். அரை மணி நேரத்தில் முடிவு சொல்ல நூறு ரூபாயாம். குப்பியுடன் அந்த லேப் இருக்குமிடம் விசாரித்துப் போனான்.

சில நாற்காலிகளுடன் ஒரு சிறு அறை. மூடப்பட்ட கண்ணாடிச் சன்னலுக்கு அப்பால் ஆராய்ச்சிக்கூடம். குப்பியை வாங்கிக் கொண்ட பெண் எந்தக் கேள்வியும் கேட்காமல், நூறு ரூபாய் வாங்கிக் கொண்டாள். 'அரைமணியில் இங்கு வாருங்கள். வேண்டுமானால் இங்கேயே காத்திருங்கள்' என்று சொல்லி சன்னலைச் சாத்திக் கொண்டு போனாள். அரைமணிக்குள்ளாகவே சன்னல் திறந்தது. வெள்ளைக் கோட்டு போட்ட பெண் ஒரு காகிதத்தையும், இரண்டு அட்டைகளையும் கொடுத்து விட்டுக் கதவை மூடிக் கொண்டாள்.

காகிதத்தில் 'கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டது' என்றிருந்தது. ஒரு அட்டை பிரசவம் பார்க்கும் டாக்டரின் கார்டு. இன்னொன்று கருக்கலைப்பு செய்யும் டாக்டரின் கார்டு. லஷ்மிநாராயணனுக்கு மயக்கமே வந்தது. மெதுவாக ஆட்டோபிடித்து வீட்டுக்குப் போனான்.

கடைசியில் நான் கர்ப்பமா... அய்யோ?

ஒரு வாரமாய் மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள். இன்னம் இரண்டு நாளில் வருவாள். கல்யாணமாகி இரண்டு வருஷ மாச்சு. குழந்தையில்லை. இப்போதுதான் கர்ப்பம்! இதைச் சொன்னால் அவள் என்ன சொல்வாள்? 'என்ன கள்ளத்தனம்? எங்கிட்ட சொல்லவேயில்லயே' என்று தட்டிக் கொடுப்பாளா? இது எப்படி சாத்தியமாயிற்று? குழந்தை எப்படி வெளியே வரும்?

சிசேரியன்தான் பண்ணணும். பெண்களே இப்ப சிசேரியன்தான்னு வேணும்னு கேக்கிறாங்க. டாக்டரைக் கேட்டா என்ன? டாக்டர் நாகராஜன் வெளியூருக்குப் போயிருந்தார், நாளைக்குத்தான் வருவார். டெலிபோன் டைரக்டரியைப் பார்த்து டாக்டர் ஜான்சன் என்று ஒருவருக்குப் போன் போட்டான். "சார், எனக்கு ஒரு சந்தேகம். அது முட்டாள்தனமான சந்தேகமா இருக்கலாம். ஒரு ஆண் கருத்தரிக்க இயலுமா?" என்றான்.

டாக்டர் ஜான்சன் "இம்பாசிபிள். ஆண் உடல் கூறே வித்தியாசமானதாச்சே" என்றவுடன் மனது சற்று நிம்மதியானது. ஆனால் அவர் தொடர்ந்து " கொஞ்சம் இருங்க. யெஸ்.. முடியும். ஒரு ஆண் உடல்ல கரு இருந்த நியூஸ் படிச்சிருக்கேன். யெஸ். நியூ இங்கிலண்ட் ஜர்னல் ஆப் மெடிசின்ல ஒரு கட்டுரை வந்துது. யு.எஸ்ல பாஸ்டன் நகரத்துல ஒரு அம்பது வயசு ஆளுக்கு அடிக்கடி தலைவலி வந்துது. செக் பண்ணினா மண்டைக்குள்ள ஒரு கட்டி பெரிசா வளர்வது தெரிஞ்சது. அதை அறுத்து எடுத்தா அது ஒரு மனிதக் கரு. எப்படி வந்திச்சு தெரியுமா? அவன் அம்மா வயத்துல ரெண்டு கரு இருந்துது. ரெட்டைப் பிள்ளையா பிறந்திருக்க வேண்டியது. ஒரு கரு வளர்ச்சியடையாம இன்னொரு கருவோட மூளைப்பகுதியில ஒட்டிக்கிட்டு, தங்கிடிச்சு. பிற்காலத்துல அவன் உடம்புல ஏதோ ரசாயன மாற்றம் வந்தப்பறம் அந்தச் சின்னக்கரு வளர ஆரம்பிச்சு வலி உண்டாகிச்சு. நான் என்ன சொல்ல வரேன்னா ஒரு ஆணிடம் கரு வளரலாம்."

லஷ்மிநாராயணன் இடிந்து போனான்..

"ஒரு வேளை என் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது என்னோட வளர்ந்து பிறந்து இருக்க வேண்டிய தம்பி/தங்கைப் பாப்பா, இப்ப என் வயத்துல...? நான் அதுக்கு அம்மாவா, அண்ணாவா? பிறக்கிற குழந்தை என் மனைவிக்கு மைத்துனனா, நாத்தனாரா? இல்லை இது என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட கரு எப்படியோ என் வயத்தில் ஏறி... அய்யோ ஆண்டவா! இது என்ன சோதனை... என் பெண்டாட்டிக்கு இதை எப்படி விளக்கப்போறேன்!

ஒரு மருத்துவப் புத்தகத்தை எடுத்துப் படித்தான். "பெண்ணின் முட்டையின் அளவு 0.15 மில்லிமீட்டர். அதாவது நீங்கள் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் வாக்கியத்தில் உள்ள ஒரு முற்றுப்புள்ளியின் அளவே. ஆணின் விந்தணு 0.004 மில்லி மீட்டர் நீளமுள்ளது." புத்தகத்தை மூடினான்.

அய்யோ எத்தனை சின்னது? முற்றுப்புள்ளி அளவாமே? அதான் சுலபமாய் உள்ளே ஏறிவிட்டதோ? ஒரு திமிர் புடிச்ச பெண் முட்டை "எத்தினி நாளக்கிடா காலகாலமா எங்களை இப்படி அமுக்கி வைப்பீங்க. நான் இப்பவே எதிர் நீச்சல் போட்டு...." என்று கிளம்பி மனைவியிடமிருந்து எனக்குள் புகுந்து விட்டதோ?

அவனுக்கு இரவு உணவு பிடிக்கவில்லை. சாப்பிடாமல் படுக்க பயமாக இருந்தது. சின்ன உயிரைப் பட்டினி போடலாமா? ஒரு கப் பால் மட்டும் குடித்துவிட்டுப் படுத்தான். குப்புறப் படுக்க பயமாக இருந்தது. குழந்தை எங்காவது நசுங்கி...

சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.

பயங்கரக் கனவுகள்...

பஸ்ஸில் ஒரு கிழவி எழுந்து அவனுக்கு அமர இடம் தருகிறாள். "வயித்துல புள்ளை சுமக்கறீங்க. நிக்காதீங்க அய்யா. இங்கனே ஒக்காருங்க".

"தினம் ராத்திரி மறக்காம பாலுல குங்கமப்பூ போட்டு சாப்பிடுப்பா. குழந்தை சிவப்பா பொறக்கும்" என்று பாட்டி ஒருத்தி அறிவுரை சொல்கிறாள்.

அஞ்சு மாசத்தில் கையில் வளைபோட்டு வளைகாப்பு. பெண்கள் உரலைச் சுற்றி வந்து "இரண்டோடு மூன்றும் வளராதோ, இடுப்பிலமர்ந்து பால் குடிக்காதோ" என்று பாடியபடி செல்லமாக இவன் கன்னத்தைக் கிள்ளுகிறார்கள்.

மூன் டிவியிலிருந்து நேர்காணல் வேற. "நீங்கல் பென்கலுக்கு பெரிய் ஹெல்ப் பண்ணிட்டீங்க. உங்கலைப் போல எல்லா ஆன்களும் குழந்தை பெத்துகறது எப்படினு கத்துக்க உதவி பண்ணுங்க. வாட் ஈஸ் யுவர் மெத்தட்?" காமிரா வயிறு அருகே குளோசப் புக்கு நெருங்குகிறது.

கமலா செல்வராஜ் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, "ஐ ஹேவ் நோ க்ளூ" என்கிறார்.

வைரமுத்து "தமிழன் வேல் கொண்டான், வாள் கொண்டான்... இப்பொழுது சூலும் கொண்டான்" என்கிறார்.

இவனுக்கு மானம் போகிறது.

".. East Indian men have performed many weird things such as wearing poisonous snakes, sleeping on nail beds, growing long nails and beards. This man, Laxmi Narayanan, has now performed an impossible feat..." என்று CNN அறிவிக்கிறது.

"சீனியிலே வாசம் செய்வதால் எறும்புக்கு சீனிவாசன் என்று பேர் வந்தது. இந்த லஷ்மிநாராயணன் தாயாகவும் ஆனதினாலே தாயுமானவன் என்று பேர் பெற்றான்" என்று சொல்லிக் கொண்டே வாரியார் சுவாமிகள் அவன் வயிற்றில் விபூதியை அள்ளிப் பூசுகிறார்.

'ஆண்வயிற்றில் பிறந்ததால் அதிகத் திமிர் கொள்வாயோ' என்று புதுக்கவிதை எழுதப்படுகிறது.

மொத்தத்தில் தூக்கம் போனது. மனதில் மகிழ்ச்சி இல்லை.

காலையில் எழுந்தவுடன் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

வரதன்தான் அழைத்தார். "எப்படி இருக்கீங்க, லஷ்மிநாராயணன்?"

"மனசே சரியில்ல சார். குழப்பமா இருக்கு" என்றான் லஷ்மி நாராயணன்.

"கவலைப் படாதீங்க. ஒரு லா பாயிண்டு புதிசா படிச்சேன். ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றத் தீர்ப்பு. சுலோசனா ரெட்டி vs ராயல் ஹாஸ்பிடல். (1992). லெட் மி ரீட் டு யு. 'any incorrect medical report, from a laboratory, hospital or physician giving a suggestion, advice, statement that causes mental anguish, agony, discomfort, emotional disturbance or social ridicule to the recipient, is considered malicious, and if proven, punishable by a fine and or imprisonment'. அதாவது தப்பா தகவல் கொடுத்து ஒருத்தருக்கு மனவேதனை கொடுக்கறது தண்டனை, அபராதம் விதிக்கப்படக் கூடிய குத்தம். கிழிச்சுருவம் இந்தப் பசங்களை. நல்ல உறுதியான கேசு. இன்னிக்கு மத்தியானம் வரேன், பேப்பர் எடுத்திட்டு. ஒரு கையெழுத்து போட்டா போறும், மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன். அப்புறமா பேசறேன். போனை வெச்சுரவா?"

எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்குப் போய் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் கண்களில் மகாவிஷ்ணுவின் படம் பட்டது. அவர் பாற்கடலில் பாம் பணையில் அருகில் லஷ்மியுடன் இருக்க, அவர் நாபியிலிருந்து மேல்நோக்கி மலர்ந்த தாமரையில் பிரம்மா அமர்ந்திருந்தார். தினமும் பார்க்கிற படம்தான். ஆனால் இன்று அவனுக்கு வயிற்றில் ஏதோ சங்கடமாயிருந்தது.

ஆபீசுக்கு போகப் பிடிக்கவில்லை. டாக்டர் நாகராஜனை அழைத்தான். டாக்டர் அப்பொழுதுதான் ஊரிலிருந்து திரும்பியிருந்தார். "என்ன லஷ்மிநாராயணன். லேப்ல போய் சோதனை பண்ணியாச்சா. ரிசல்டை எடுத்திட்டு அப்புறமா நாளைக்கு மறுநாள் என்னை பார்க்க வரீங்களா?"

லஷ்மிநாராயணன், "சார். அதுவரை பொறுக்க முடியாது. இப்பவே வரேன், நான் கர்ப்பமா இருக்கேன்" என்றான்.

"வாட்?" என்றார் டாக்டர் திடுக்கிட்டு.

"நேர்ல வரேன் சார்" என்று சொல்லிக் கிளம்பினான்.

டாக்டர் அவனை அமர வைத்தார். "முதல்ல லேப் ரிசல்டைக் கொடுங்க" என்றார்.

பார்த்தவுடன் அவர் முகம் மாறியது. "ஓ, நோ" என்றார்.

லஷ்மிநாராயணன் முகம் வெளிறியது.

"லஷ்மிநாராயணன், உங்களுக்கு எக்ஸ்ரே, இன்னும் சில டெஸ்டு எடுக்கணும். என் ஆபீஸ்லயே பண்ணிடலாம்" என்று சொல்லி, நர்சிடம் அவனை அழைத்துப் போகச் சொன்னார்.

அவன் போனவுடன் குறிஞ்சி லேபுடன் பேசினார்.

டெஸ்ட் முடிந்து வந்த லஷ்மிநாராயணன், டாக்டர் ரிசல்டைப் படித்து முடிக்கும் வரை காத்திருந்து, "இது எப்பிடி ஆச்சு சார்!" என்று அலறினான்.

டாக்டர் நாகராஜன் சொன்னார், "லஷ்மி நாராயணன் நீங்க கர்ப்பமில்ல."

லஷ்மிநாராயனனுக்கு நம்பிக்கைப் படவில்லை. "ரெண்டு லேப்ல சோதனை பண்ணியாச்சு டாக்டர். நான் கர்ப்பம்னு ரெண்டு இடத்திலயும்..."

"நான் சொல்றத முதல்ல கேளுங்க. கர்ப்பமா இல்லியானு எப்படி டெஸ்ட் பண்றாங்க? கர்ப்பம் தரிச்ச ரெண்டு வாரத்திலேருந்து பெண்ணின் உடலில் ஹியூமன் கொரியானிக் கொனாடொ ட்ரோபின்னு ஒரு ஹார்மோன் சுரக்குது. சுருக்கமா 'ஹெச்.சி.ஜி'னு (HCG) பேரு. இந்த ஹார்மோன் கருவைக் காப்பாத்துது. கொஞ்சம் கொஞ்சமா இந்த ஹார்மோன் பெருகி ரத்தத்துல வந்து சிறுநீர் வழியா வெளியே போயிடும். ரத்த, சிறுநீர் சோதனையில இந்த ஹார்மோன் இருந்தா பெண் கர்ப்பம்னு காட்டும்"

"ஆணின் சிறுநீர்ல இருந்தால்?"

"டெஸ்டிகுலர் கார்சினோமாங்கிற ஒரு வகைப் புற்றுநோய் ஏற்பட்டா இந்த ஹார்மோன் ஆணின் ரத்தத்திலும் சுரந்து சிறுநீர்லயும் வரும். அதனால ஆண் கர்ப்பம்னு அர்த்தம் இல்ல."

"எப்படி பெண் ஹார்மோன் ஆணுக்குச் சுரக்கும்?"

"இந்த ஹார்மோனோட மரபணு ஆண் கிட்டயும் இருக்கு. ஆனா அது செயலிழந்து இருக்கும். புற்றுநோய் வரச்ச இந்த மரபணு தூண்டப்பட்டு ஹார்மோன் வெளியாகுது. ஆண்களுக்கு இந்தக் கான்சர் இருக்கறதை அடையாளம் காட்டறதே இந்த ஹார்மோன் தான்"

"அப்ப நான் கர்ப்பம் இல்லை"

"இல்லை. உங்களுக்கு இந்தப் புற்றுநோய் இப்ப ஆரம்ப நிலையில இருக்கு. கீமோ தெராபி, கதிரியக்க சிகிக்சைனு கொடுத்தா சீக்கிரம் குணமாயிடும்"

"கர்ப்பமான்னு இந்த சோதனையை எனக்கு ஏன் பண்ணினாங்க?"

"நாங்க லேப் டெஸ்ட் ஆர்டர் பண்ண ஒரு அச்சடிச்ச பாரம் உபயோகிக்கறோம். இதில் எல்லா டெஸ்ட் பேரும் இருக்கு. தேவையானத டிக் பண்ணுவோம். உங்களுக்கு டையபிட்டிசுனு சந்தேகப்பட்டதால புரோட்டினூரியா, அதாவது சிறுநீர்ல அதிக புரோட்டீன் இருக்கானு சோதிக்க அதை டிக் பண்னினப்ப, டிக் மார்க் பெரிசாப் போட்டதில கீழ இருக்கிற ப்ரெக்னன்சி டெஸ்டும் சேந்திருச்சு. லேப்ல அதைப் படிச்சிட்டு ஆண் என்று கவனிக்காமப் பண்ணிட்டாங்க. இதை உங்க அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். பெரிசாப் போறதுக்கு முன்னாலயே புற்றுநோயைக் கண்டு பிடிச்சாச்சு. இதை குணப்படுத்திடலாம்"

"டையாபிட்டீஸ்?"

"அது ஆரம்ப நிலையில இருக்கு. உணவுக் கட்டுப்பாடுல குணப்படுத்திடலாம். நடை, ஓட்டம், எடை தூக்கல்னு தேகப்பயிற்சிய அதிகப்படுத்தணும்"

"உடற்பயிற்சிக் கூடத்துல சேரலாம்னு இருக்கேன். என் மனைவிக்கும் உடற் பயிற்சியிலே ஆர்வம் இருக்கு. அவ ஊரிலேருந்து வந்த உடனே ரெண்டு பேரும் சேர்ந்துடறோம்"

"தாராளமா செய்யுங்க", என்ற டாக்டர் கண்ணைச் சிமிட்டி, "உங்க வயிறு நிச்சயமா குறைஞ்சிடும்" என்றார்.

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com