மறுநாள் காலை, கீதா சீக்கிரமே எழுந்து அருணின் பள்ளிக்கூட ஆசிரியருக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார்:
அன்புள்ள ஆசிரியருக்கு,
இன்று அருணால் பள்ளிக்கு வரமுடியாத நிலைமை. அவனுக்கு ஒரு நாளைக்கு விடுப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள கீதா |
ரமேஷுக்கு ஒரு சின்னச்சீட்டு எழுதிவிட்டு அருணின் அறைப்பக்கம் சென்றார். "அம்மா, நான் இங்கே இருக்கேன்," சமையலறைப் பக்கத்திலிருந்து குரல் வந்தது. அங்கே போய்ப் பார்த்தால், மடியில் பக்கரூவோடு அருண் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
"என்ன கண்ணா, சீக்கிரம் எழுந்துட்டயா?"
"ராத்திரி, அந்த லெட்டரப்பத்தியே நினைச்சுட்டு இருந்தேன், அம்மா."
"சரியாத் தூங்கினியா?"
"ம்..."
"நாம கிளம்பலாமா?"
"நான் ரெடி."
"பக்கரூ வேண்டாம்ப்பா."
அருண் பக்கரூவை இறுகக் கட்டிக்கொண்டான். "மாட்டேன் அம்மா, மாட்டேன். நான் பக்கரூவை விட்டு வரமாட்டேன்."
அதிகாலை வேளை அருணோடு மல்லுக்கட்ட கீதாவுக்கு மனமில்லை. பக்கரூவை கூட்டிக்கொண்டு போக அரைமனதோடு சம்மதித்தார்.
சில நிமிடத்தில் அருணையும் பக்கரூவையும் வண்டியின் பின்பக்கத்தில் உட்காரவைத்து, வண்டியைக் கிளப்பினார். வண்டி சிறிது நேரத்தில் ஹோர்ஷியானா வளாகத்துக்குள் நுழைந்தது. வண்டியை ஹோர்ஷியானா அதிபர் இருக்கும் கட்டடத்தின் அருகில் நிறுத்தினார். அதே சமயம் ஹோர்ஷியானா அதிபர் டேவிட் ராப்ளேயும் தனக்கான இடத்தில் வண்டியை நிறுத்தினார்.
"அப்பாடி, சரியான சமயத்தில்தான் வந்திருக்கோம்" என்று சொன்ன கீதா திரும்பிப் பார்த்தபொழுது, அருண் கதவைத் திறந்துகொண்டு ஓடுவதைப் பார்த்தார். பக்கரூவை சீட்டில் விட்டுவிட்டு அருண் தலைதெறிக்க டேவிடின் வண்டியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.
"அய்யய்யோ…", என்று சொல்லிக்கொண்டே கீதா அருண் பின்னால் ஓட ஆரம்பித்தார். அதற்குள் அருண் வண்டியிலிருந்து வெளியே வந்த டேவிடைப் பார்த்து, "அய்யா, என் செல்லநாயைக் காப்பாத்துங்க அய்யா" என்றான்.
திடீரென்று ஒரு சின்னப்பையன் அதிகாலையில் அப்படிக் கூப்பிட்டது அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதுவுமில்லாமல், வேகமாக ஓடிய அருண் அவர்மீது மோதி அவர் கையிலிருந்த காஃபிக் கோப்பையை கீழே தட்டிவிட்டான். டேவிடுக்கு வந்ததே கோபம். "யார் இந்தச் சிறுவன்? இவனை யார் இங்கே விட்டது?" என்று சத்தம் போட்டார். அதற்குள் கீதா அங்கு வந்து அவரைப் பார்த்து, "ஐயா, இவன் என் மகன் அருண். இவன்…" கீதா முடிக்குமுன், அவர் கத்த ஆரம்பித்தார்.
"இது என்ன விளையாட்டு அரங்கமா, வீட்டு ஆளுங்களை எல்லாம் கூட்டி வருவதற்கு. இது ஒரு ஆஃபீஸ்."
கீதாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
"செக்யூரிடி, செக்யூரிடி எங்கே?" என்று டேவிட் சத்தம்போட்டு அதிகாரியை அழைத்தார். பாதுகாவல் அதிகாரிகள் வருவதைப் பார்த்தான் அருண். மறுபுறம் அம்மா அழுகையை அடக்குவதைப் பார்த்தான். ஒரு வெறி வந்தவன்போல் படபடவென்று வந்த காரணத்தைச் சொன்னான். அவன் குரலில் ஒரு தீரம் இருந்தது. டேவிடிற்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு ஒரு மீட்டிங் போக நேரமாகவே, அவசர அவசரமாக நகர்ந்தார்.
"ஐயா, தயவுசெய்து எங்ககிட்ட இருக்கிற விதையை நிலத்தில் விதைக்க அனுமதி கொடுங்க" என்றான் அருண். திடீரென்று ஒரு பொத்தானை அழுத்தியதுபோல நின்றார் டேவிட்.
"என்ன சொன்ன தம்பி, விதையா?"
"ஆமாம் ஐயா, அபூர்வமூலிகையோட விதை." அதைக் கேட்டதுதான் தாமதம், டேவிடின் முகத்தில் ஒரு புன்னகை வந்தது. தனது செக்ரடரிக்கு தான் தாமதமாக வருவதாக டெக்ஸ்ட் செய்தார். பலவருட காலமாக அவர் அந்தச் செடியின் விதைக்காக எவ்வளவு முயன்றிருக்கிறார். அருண் சொல்வது உண்மையானால் அவரது பிரார்த்தனை பலித்தமாதிரி.
"தம்பி, உண்மையாவா?"
"ஆமாம் ஐயா, எங்க அம்மாவை கேளுங்க."
கீதாவுக்கு அருண் இப்படி ரகசியத்தை உடைத்துவிட்டானே என்று இருந்தது.
"கீதா, உண்மையாகவா? அபூர்வமூலிகையின் விதை உங்ககிட்ட இப்போ இருக்கா?" டேவிடின் குரலில் பேராசை தெரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவுசெய்து அருணை வசப்படுத்த முயன்றார்.
"தம்பி, அந்த விதையை என்கிட்ட காட்டு. நான் கட்டாயம் அனுமதி தருவேன்."
கீதா தன்னையறியாமல், தன் கால்சட்டையில் இருந்த விதைகள் கொண்ட பாக்கட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.
"தம்பி, உன் செல்லநாய் பிழைக்கணும் இல்லையா? நீ விதையை என்கிட்ட கொடு. நான் இப்பவே அனுமதி கொடுக்கறேன்." டேவிடின் ஒவ்வொரு சொல்லிலும் விஷம் இருந்தது. எப்படியாவது அருணையும் கீதாவையும் ஏமாற்றி விதையைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்.
அருண் அம்மாவைப் பார்த்தான். அவள் கண் ஜாடையாக "வேண்டாம்" என்றாள். அருண் சற்று யோசித்தான். தைரியமாக டேவிடைப் பார்த்து, "ஐயா, நான் என் அம்மாவை விதையைக் கொடுக்கச் சொல்லமாட்டேன்" என்றான். ஒரு வீரன்போல் திரும்பி, அம்மாவைப் பார்த்து, "அம்மா, வாங்க அம்மா. நாம் மேயர்கிட்ட போய் சொல்லி அவரை அனுமதி கொடுக்க வைப்போம்" என்றான்.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |