மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி
சூதர் குலமென்கிற தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு விடை கண்டுகொண்டிருந்தோம். இடையில் சஞ்சயனாகிய தேரோட்டியைப் பற்றிய சில விளக்கங்களையும் பார்த்தோம். தேரோட்டிகளுக்கே பொதுவாகப் போர்ப்பயிற்சி மிகவும் அவசியமானதொன்று. போர்க்களத்தில் அவன் தேரோட்டும்போது, வில்லாளிக்கு மிக முக்கியமான கருவிகளில் மிகமுக்கியமான ஒருவனாக விளங்குகிறான் என்பதால் இந்தப் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. போர்க்காலத்தில் அறுபட்டுக் கிடக்கின்ற உடலங்களும் உடைபட்டுக் கிடக்கின்ற ஆயுதங்களும் இறைபட்டுக் கிடக்கின்ற களத்தில் அவன் தேரை ஓட்டுகிறான். வில்லாளி தன் அம்பைக் குறிதவறாமல் எய்யவேண்டுமானால், போருக்காகத் தேரை நிறுத்தும் தரை சமதளமாக இருக்கவேண்டும் என்பது முக்கியமான ஒன்று தேர் சற்றே சாய்வுபட்டு நின்றாலும், தேரில் சமநிலையோடு நிற்பதே சிரமமாகிவிடும். அடுத்ததாக, வில்லாளி தன் அம்பைத் தொடுக்கும்போது, தேரில் பூட்டியுள்ள நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகளும் அசைந்துவிடாமல்-புல்லை மேய்ந்தபடி ஒரு எட்டு முன்னே வைத்துவிடாமல்-கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியதும் அவனுடைய கடமையாகிறது. இந்த அசைவினால் வில்லாளியுடைய குறி தவறும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமேயல்லாமல், பலசமயங்களில், 'எதிராளி இன்ன அம்பை அல்லது அஸ்திரத்தை எடுக்கிறான். அதற்கு மாற்றாக நீ இன்ன அம்பை அல்லது அஸ்திரத்தைப் பிரயோகிக்கலாம்' என்று ஆலோசனை கூறுவதும் அவனுடைய வேலைதான். இதை பாரதம் நெடுகிலும் பல போர்களில் காண்கிறோம்.

இந்த ஆலோசனைகள் பலவகைப்பட்டவை. சொன்னபடி யுதிஷ்டிரனை துரோணர் பிடிக்காததால் வருந்துகின்ற துரியோதனிடம், "இன்று ஒரு மகாரதனைக் கொல்வேன்" என்று சபதம்செய்த துரோணர், பதின்மூன்றாம் நாள் போரில் பத்மவியூகம் வகுக்கிறார். அதை உடைக்கக்கூடிய ஒரேயொருவனான அர்ச்சுனன் அருகில் இல்லாததால், உடைக்கமட்டுமே அறிந்த, உடைத்து உள்ளே போனால் வெளியே வருவதைப் பயிலாத அபிமன்யுவை, பத்மவியூகத்தை உடைக்கும்படி தர்மர் பணிக்கிறார். அவன் உள்ளே போனதும் தொடர்ந்து பீமன் உள்ளே வந்துவிடுவான் என்பதால் இதில் பிரச்சனையிருக்காது என்பது அவரது கணிப்பு. இது கடுமையான பணி. இதிலே சிக்கிக்கொண்டு, எதிர்பாராதது நடந்துவிட்டால் வெளியே மீள்வது முடியவே முடியாது என்பதால், 'இதைச் செய்யவேண்டாம்' என்று அபிமன்யுவின் தேரோட்டி சொல்கிறான். "ஆயுஷ்மன்! பாண்டவர்களாலே உம்மிடத்தில் இந்தப் பெரும் பாரம் வைக்கப்பட்டுவிட்டது. புத்தியினால் க்ஷணகாலம் (ஆலோசித்து) நிச்சயம் செய்துகொண்டு பிறகு நீர் யுத்தம் செய்யவேண்டும். ஆசாரியரான துரோணரோ ஸமர்த்தர்; சிறந்த அஸ்திரங்களில் விசேஷமாகப் பயின்றவர்; நீரோ பாலர்; அவரோ பலசாலி; நீர் யுத்தங்களை அறியாதவர்' என்று கூறினான்." (துரோண பர்வம், தொகுதி 5, பக்: 141) 'நீண்டகாலம் வாழவேண்டியவனே' என்று அபிமன்யுவை அழைத்து அவன் சொன்ன இந்த ஆலோசனை சிந்திக்கத் தக்கது. (இந்த நெருக்கடியான நிலையில் தருமபுத்திரர் இப்படியொரு பெரிய செயலில் அபிமன்யுவை ஏன் இறக்கினார்; களத்துக்குள் பிரவேசித்த அபிமன்யு எத்தனை வேகமாகப் போரிட்டான்; அவனைத் தடுக்க முடியாமல் ஆறுபேர் அவனைச் சூழ்ந்துகொண்டு போரிட்டும் அவனை நிறுத்தமுடியவில்லை என்பதும் இன்னொருநாள் விவரிக்க வேண்டியவை.) இங்கேயும், அபிமன்யுவின் வில்லை, அவனுடைய முதுகுக்குப் பின்னால் நின்றபடி அறுத்தவன் கர்ணன்தான் (துரோண பர்வம், பக்: 176) என்பதை இப்போதைக்கு நினைவில் கொள்வோம்.

வில்லாளி போரிட முடியாத நிலையை அடையும்போதும், மயக்கமடையும்போதும், இதுபோன்ற மற்ற இக்கட்டான தருணங்களிலும், தேரைப் போரிலிருந்து விலக்கி வேறு பக்கத்துக்குக் கொண்டுசெல்வதும் தேரோட்டியின் சமயோசிதமான கடமைகளுள் ஒன்று. ஜயத்ரத வதம் முடிந்து பதினான்காம் நாள் போர் இரவிலும் தொடர்கிறது. அரக்கனான கடோத்கசனுக்கு இரவில் ஆற்றல் பெருகுகிறது. அவனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் போர் நடக்கிறது. கடோத்கசன் தன் தேரை இழந்திருந்ததால் அப்போது அவனுக்கு (பாஞ்சாலியின் சகோதரனான) திருஷ்டத்யும்னன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். அஸ்வத்தாமனுடைய அம்பு அடிப்பாகம் மறையும்படி கடோத்கசனுடைய மார்பில் தைத்தது. நினைவிழந்த கடோத்கசன் இறந்ததைப் போல விழுந்தான். தேரோட்டிக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் தேரை உடனே அங்கிருந்து விலக்கிக் கொண்டுபோனான். இது ஒரு நிகழ்வென்றால், தசரதருக்கும் சம்பராசுரனுக்கும் நடந்த போரில் கைகேயி தசரதனுக்குத் தேரோட்டியதை வால்மீகி ராமாயணம் சொல்கிறது. இந்தப் போரில் தன்னை இருமுறை காத்ததற்காக கைகேயிக்கு அளித்த இரண்டு வரங்களைக் கேட்கும்படி கூனி அவளுக்கு நினைவூட்டுகிறாள். அந்தப் போரைக் கூனி இப்படி விவரிக்கிறாள்: "முன்னொரு காலத்தில் திமித்துவசன், சம்பராசுரன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட அசுரனோடு, இந்திரனுக்காக, போர்புரிய தசரதர் சென்றார். மிகக்கொடிய அந்த அசுரனோடு தசரதர் போரிட்டார். நீங்கள் தேரோட்டினீர்கள். அந்தத் திமித்துவசனுடன் தசரதர் பெரும்போர் புரிந்தார். அதில் அவர் விரணப்பட்டு (பெரிய காயமடைந்து) மூர்ச்சை அடைந்திருக்கும்பொழுது அவரை நீங்கள் போர்க்களத்திலிருந்து எடுத்துப்போய் ரக்ஷித்தீர்கள். அவர் மூர்ச்சை தெளிந்ததும் கண்விழித்துப் பார்த்து, தம்மைக் காப்பாற்றினதற்காக சந்தோஷமடைந்து, உங்களுக்கு இரண்டு வரங்கள் வேண்டிக்கொள்ள விடைகொடுத்தார். 'அவைகளை எனக்கு வேண்டியபொழுது நான் கேட்டுக்கொள்கிறேன்' என்றும் 'அப்பொழுது நிச்சயமாகக் கொடுக்கவேண்டும்' என்றும் நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்". (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், ஸர்க்கம் 9, ஸ்லோகம் 16, 17. பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்ட அதே கும்பகோணம் பதிப்பினருடைய மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில்) இங்கே. தசரருடைய அச்சு முறிந்துபோக, கைகேயி தன் ஆள்காட்டி விரலை நுழைத்து அதையே அச்சாகப் பயன்படுத்தி, தேரை ஓட்டினாள் என்பதெல்லாம் வால்மீகியிலும் இல்லை; கம்பனிலும் இல்லை. போரில் மூர்ச்சையடைந்த தசரதனை சமயோசிதமாக யுத்தகளத்திலிருந்து விலக்கியதற்கான வரங்கள் அவை.

இதையெல்லாம்விடப் பெரிய 'கடமைச் சுமையை' வேறொருவன் சொல்கிறான். ராவணனுடைய சாரதிதான். ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் மூர்ச்சிக்க, சாரதி அந்த இடத்தைவிட்டுத் தேரை விலக்கிக் கொண்டு சென்றுவிடுகிறான். நினைவு தெளிந்ததும் கோபம் கொள்ளும் ராவணன், சாரதி தன்னை அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி அவனைக் கொல்வதற்காகத் தன் வாளை ஓங்குகிறான். அப்போது சாரதி சொல்வனவற்றில் பின்வரும் பாடல் குறிப்பிடத்தக்கது.

ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர்பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்,
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால்.


"சாரதி செய்யவேண்டிய தொழில் (தன்னுடைய வில்லாளி) ஓய்ந்து போனதையும் வலிமையுடன் இருப்பதையும் கவனித்து அறிந்து மாய்வு நிச்சயமாக வந்திட்டபோது (வருமென்று தோன்றியபோது) (அவனது) உயிராகிய பாரத்துக்குத் தளர்வு நேராமல் அப்பால் கொண்டு வைத்தல் ஆகும். (ஆதலால் என்மீது) சினங்கொண்டு வாளினால் கொல்லுதல், தக்கதன்று. முடிவாக (தீர) ஆலோசித்துப் பார்க்கவும்." (யுத்த காண்டம், ராவணன் வதைப்படலம், பாடல் 182 - வைமுகோ உரை)

போரை, வில்லாளிக்கு நிகராக அலசி ஆராய்ந்து அவனுடைய முக்கியமான கருவியாகச் செயல்படும் தேரோட்டிக்குப் போர்ப்பயிற்சியும் ஆயுதப்பயிற்சியும் மிகமிக முக்கியமானவையல்லவா? ஆயுதப்பயிற்சி இருந்தாலும் தேரோட்டிகள் போரில் நேரடியாக (வில்லாளியின் வீழ்ச்சிக்குப் பிறகு) கலந்துகொள்வது பெரும்பாலும் இல்லையென்றாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இப்போதைக்கு அதைத் தவிர்க்கிறேன்.

எனில், சூரியபுத்திரனாகவே இருந்தாலும், சூதபுத்திரன் என்ற காரணத்தால் கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி தரப்படாததும், அவன் அதற்காக என்னென்னவோ பொய்களைச் சொல்லி கற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுவது எந்த வகையில் பொருந்தும்? சூதபுத்திரனாகவே பெரும்பாலோர் அறிந்திருந்த சமயத்திலும் துரோணரிடத்திலும் பயின்றிருக்கிறான். ஆகவே, அவன் வளர்ப்பு அவனுடைய தேர்ச்சியைத் தடுத்தாலும் அவன் பெரிய வில்லாளியாக வளர்ந்தான் என்ற பேச்சு எடுபடவில்லை.

கர்ணனைப்பற்றி இன்னும் சில சொல்லவேண்டியிருக்கிறது. தொடர்வோம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com