உதட்டசைவில்.....
அன்புள்ள ப்ரதீக்ஷ¡விற்கு,

ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம்.

அமெரிக்காவில் நீ என்னை நல்ல முறையில் கவனித்துக் கொண்டாய். என் மருமகளானாலும் மகள் ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்தாய். செய்து கொண்டிருக்கிறாய். 'Thanks' என்பது வெறும் சாதாரணமான, சம்பிரதாயமான வார்த்தை என்பது எனக்குத் தெரியும். எழுபது வருஷம் இந்தியாவிலேயே வாழ்ந்து, இந்த மண்ணின் கஷ்டநஷ்டங்களைச் சுகமாக உணரும் மனப்பக்குவம் வந்த எனக்கு அமெரிக்க வாழ்க்கை ஒட்டாதது விந்தையல்ல.

உங்களுக்குக் காலந்தவறாத அவசர வாழ்க்கை; எதையுமே பிரம்மாண்டமாய்ப் பார்த்து வாழும் அமெரிக்க மக்களுடன் வாழ வேண்டிய சூழ்நிலை. பேசக்கூட ஜீவனின்றி உழைத்து அப்பாடா என்று வீடு திரும்பி, வார இறுதியை எதிர்பார்க்கும் தாகம். இதில் எல்லாம் உள்ள உண்மை எனக்குப் புரிகிறது.

ஆனால், வருணின் அம்மா கோமதியை இழந்த என் மனத்திலுள்ள வெற்றிடத்தை அமெரிக்க வாழ்க்கை நிரப்பவில்லை. ப்ரதீக்ஷ¡! Of course, பேரன் தீபக்கும், பேத்தி ப்ராஹ்மியும் தாத்தா, தாத்தா என்று அன்புடன் இருந்து கையைப் பிடித்துக் கொண்டு தோட்டத்தில் உலாவியது. அங்குள்ள புல்வெளி போல இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. என மனம்தான் ஊனமுற்று நொண்டுகிறது, உடல் அல்ல என்று அச்சின்னஞ் சிறுசுகளுக்கு எப்படிப் புரியும்!

மனைவியை இழந்த துக்கம் இவ்வளவு கொடுமையானதா என்று நீ கேட்பாய். கணவன், மனைவி உறவைவிட இது தூய்மையான ஒரு தோழியை இழந்த சோகம். அதன் கனம், எல்லாம் உற்ற நண்பனை இழந்தவர்களுக்குத்தான் தெரியும்.

வாழ்க்கைத்துணை என்ற பெயரைச் சூட்டியவனுக்குத் தேனாபிஷேகம் செய்ய வேண்டும். என் வாழ்க்கைத்துணை, வழித்துணை எல்லாம் கோமதிதான். உங்களுக்காக ஒரு முடிவு எடுக்கும் திறனோ, புத்திசாலித்தனமோ இல்லையா, எல்லாவற்றிற்கும் மனைவிதானா என்று நீ கேட்பாய். அங்கு உங்களுடன் இருந்தபோது டிவியில் பார்த்த Everybody loves Raymond-ல் வரும் வயதான தம்பதிகளின் அன்னியோன்யம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் 'Two heads are always better than one' என்பது உனக்குத் தெரியுமே!

வருணை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசை. அன்று எங்கள் குடும்பப் பொருளாதார நிலை ஆதாரமில்லாத நிலையில் இருந்தது. என் அலுவலகத்திலும் ஏகப்பட்ட சிக்கல். தேவையில்லாமல் விசாரணையில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்க முழித்துக் கொண்டிருந்தேன். எனவே அலுவலக சொசைட்டியிலோ, ஓய்வூதியக் கடனோ வாங்க முடியாத நிலை. 'நம் ப்ரவீணா கல்யாணத்துக்குத்தானே இந்த நகைகளை வைச்சிருந்தோம். வருண் வேலைக்குப் போய்ச் சம்பாதிச்சு நகையை மீட்டுக்கலாம். ப்ரவீணா சின்னப்பொண்ணு தானே. இன்னும் காலம் இருக்கு. இதைக் கொண்டு போய் வைச்சுப் பணம் புரட்டுங்க'ன்னு கோமதி துன்பம் வரும் போது துணை நின்றாள்.

வருண் TOEFL/GATE எழுதியதும், அமெரிக்கா வில் வேலை கிடைத்ததும் பழங்கதையாக இருக்கலாம்.

வாழ்க்கையில் பல நிலைகளில் நான் மனம் தளர்ந்தபோது நம்பிக்கை ஊட்டி, துணை நின்றவள் கோமதி. அப்படிப்பட்ட என் மனைவி இன்று தாயாக, சிநேகிதியாக என்னை, உன்னை, நம் குடும்பத்தை வழிநடத்த இல்லையே என்று நினைக்கையில் என் இழப்பின் கனம் உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன் ப்ரதீக்ஷா.

சென்னையில் முதியோர் இல்லத்தில் என்னை சேர்க்க நீங்கள் இருவரும் பட்ட மன வேதனையின் பரிமாணம் எனக்குத் தெரியும் மகளே! தவறான விலாசத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லும் மகன், மகள் நடுவே முதியவர் காலமானால் இறுதிக் கடன்களை நீங்களே செய்து விடுங்கள் என்று எழுதிக்கொடுத்துவிட்டுப் போகும் குழந்தைகளின் நடுவே நீங்கள் இருவரும் இனிய நீரோடையில் பூத்த நன்மலர்கள்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வந்து இருந்தும், வாழ்ந்த பாசத்தால் பிணைந்து விட்ட சென்னையை மறந்துவிட இயலாத என் ஏக்கம், எனது அமெரிக்க வாழ்க்கையை உங்களுக்கு பாரமாகிவிட்டதற்காக நான் வருந்துகிறேன்.

மன்னித்துவிடு, ப்ரதீக்ஷ¡!

இதோ இங்கே சுட்டெரிக்கும் வெயில் தான். கசகசக்கும் வேர்வைதான். மரியாதையில்லாத தமிழ்தான்! ஆனால் இந்த வாழ்க்கையின் இனிமையை உனக்கு எப்படிப் புரிய வைப்பேன் ப்ரதீக்ஷ¡. இது உணர்வுபூர்வமானது. 'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம்' கண்ட பாரதி போல. இது உணர வேண்டிய ஒன்று.

'இப்போ சந்தோஷமாக இருக்கீங்களா அப்பா' என்று நீ கேட்பது புரிகிறது. உங்களைப் பிரிந்த துக்கத்தைத் தவிர, சந்தோஷம்தான். வயது காரணமாகக் காது சரியாகக் கேட்பதில்லை. அடுத்தமுறை சென்னை வரும் போது உங்களை முதியோர் இல்லத்தில் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் வாய் அசைவிலிருந்து என்ன பேசுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வேன். இந்த அப்பாவுடன் வெப்காமில் சாட் பண்ணும் போது உதடுகளின் இயக்கத்தைப் புரிந்து கொள்கிறேனே. நேரில் பீறிடும் உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளமாட்டேனா? வருண், குழந்தைகளுக்கு ஆசிகள்.

அன்புடன் அப்பா

சிவப்ரியா ராமகிருஷ்ணன்

© TamilOnline.com