விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் ம. காமுத்துரை. இவர், செப்டம்பர் 16, 1960 அன்று தேனியில் பிறந்தார். ஐ.டி.ஐ. முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் இலக்கியம் அறிமுகமானது. தினந்தோறும் நூலகத்திற்குச் சென்று வாசிப்பது வழக்கமானது. அங்கிருந்த 'புதிய நம்பிக்கை', 'விடியும்' போன்ற சிற்றிதழ்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. சிறுவயது முதலே பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்டதும், புத்திலக்கியத் தாக்கங்களும் இவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டன. சிறு சிறு கதைகளைச் சிற்றிதழ்களில் எழுதத் துவங்கினார். தேனியில் இருந்த நாடக்குழுக்களுக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார். பிழைப்பிற்காக சேல்ஸ்மேன், மில் தொழிலாளி என்று தொடங்கி, ரொட்டிக்கடை ஏஜென்ஸி, செய்தித்தாள் ஏஜென்ஸி, ஹார்ட்வேர் கடைவரை பல தொழில்களை மேற்கொண்டார். தொடர் நஷ்டங்களினால் இறுதியில் சமையலுக்கு வாடகைப் பாத்திரங்கள் தரும் தொழிலை மேற்கொண்டார். அது குடும்ப வருவாய்க்கு உதவியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுடனான தொடர்பு இவரது படைப்பிலக்கிய ஆர்வத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது, சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் எனப் பலவற்றிலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.
காமுத்துரை கண்ட, கேட்ட செய்திகளும், சந்தித்த மனிதர்களும், வாழ்வியல் அனுபவங்களும் படைப்புகளாக முகிழ்த்தன. ஏழை விவசாயி, டீக்கடை வைத்திருப்பவர், கடைப் பணியாள், கூலித்தொழிலாளி, சமையல் பணியாளர் எனச் சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்களை, அவலங்களை, செய்துகொள்ளும் சமரசங்களைப் பேசும் குரலாக காமுத்துரையின் குரல் ஒலிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, அவர்கள் வருகையால் பாதிக்கப்படும் சிறு, குறு வியாபாரிகள், கடைசியில் அவர்களில் பலர் கூலியாட்களாகவும், குடிகாரர்களாகவும், கடன்காரர்களாகவும் ஆவது, கடைசியில் சிலர் தற்கொலை செய்துகொள்வது எனப் பலரது அவல வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தன் படைப்புகள் மூலம். அவை உரத்துக் கூவுவதில்லை; ஆனால் உண்மைகளுக்குச் சாட்சியாய் விளங்கி நெஞ்சைச் சுடுகின்றன.
'கப்பலில் வந்த நகரம்', 'விடுபட', 'நல்ல தண்ணிக் கிணறு', 'நாளைக்குச் செத்துப் போனவன்', 'கனா', 'பூமணி', 'குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை', 'புழுதிச் சூடு' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். இவரது சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'காமுத்துரை கதைகள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. 'முற்றாத இரவொன்றில்..', 'மில்', 'கோட்டை வீடு' போன்றவை இவரது நாவல்கள். 'முற்றாத இரவொன்றில்' நாவல் வீட்டைவிட்டு ஓடிவந்த காதலர்களின் அவலத்தையும், அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களையும், ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண ஏற்றத்தாழ்வினால் மனிதர்கள் நடக்கும் விபரீதங்களையும் உயிர்ப்புடன் சொல்கிறது. 2010ம் ஆண்டின் சிறந்த நாவலாக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுபெற்றது 'மில்'. அதே நாவலுக்கு உயிர்மை பதிப்பகத்தின் சிறந்த நாவலுக்கான சுஜாதா நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. ஏற்கனவே நூற்பாலை ஒன்றில் சில ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவத்தைக் கொண்டு அந்நாவலைப் படைத்திருக்கிறார். உழைப்பாளிகளின் உழைப்பை இரத்தமாக உறிஞ்சும் மில், அதன் முதலாளிகள், அதை எதிர்த்து உருவாகும் சங்கம், அதை நசுக்கப் பாடுபடும் நிர்வாகம், துரோகம் செய்யும் மனிதர்கள் என அதிகாரம், மிரட்டல், நெருக்கடி, ஆட்குறைப்பு, சுரண்டல் என அனைத்தையும் இந்நாவலில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார் காமுத்துரை. எளிமையான ஆனால் வலிமையான உரையாடல் எழுத்து காமுத்துரையின் பலம் எனலாம்.
குமுதம் வெள்ளிவிழாப் போட்டிப் பரிசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டிப் பரிசு, அமரர் ஜோதிவிநாயகம் நினைவுப் பரிசு, 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான (நல்ல தண்ணிக் கிணறு தொகுப்பு), திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது, நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது உட்படப் பல பரிசுகளும் கௌரவங்களும் பெற்றுள்ளார் காமுத்துரை. தன் படைப்புகள் பற்றிக் கூறும்போது, "சித்தாள், கொத்தனார், மீன்காரப் பெண், பொரிகடலை வியாபாரி, சமையல்கார்... இவங்ககிட்ட இருந்துதான் கதைகள் வருது" என்கிறார். காமுத்துரையின் எழுத்தைப்பற்றி, "எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்ட காமுத்துரை" என்கிறார் பா. செயப்பிரகாசம், முன்னுரை ஒன்றில்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கில் கலந்துகொண்டு திரும்பியிருக்கும், காமுத்துரை, "எதிர்பார்ப்புகளை குறைச்சுக்கிட்ட மனைவியும் மகன்களும் இல்லைன்னா, காமுத்துரைங்கிற எழுத்தாளன் சாத்தியமில்லை" என்கிறார் மனப்பூர்வமாக. மனைவி வேணி, மகன்கள் விக்னேஷ், நாகேந்திரனுடன் தேனியில் வசித்துவரும் இவர், தற்போது சமையல் தொழிலாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் நாவலொன்றை எழுதி வருகிறார்.
அரவிந்த் |