ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 8)
முன் கதை

சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யாவும் கிரணும் சுமிடோமோவைச் சந்திக்க அங்கே செல்கின்றனர். ரோபோட்கள் பற்றிய விரிவான அறிமுகத்திற்குப் பிறகு விஷயத்துக்கு வருகிறார் சுமிடோமோவின் கூட்டாளி ராபர்ட்.

தங்கள் ரோபாட்கள் வெளி உலகில் தவறுகள் செய்கின்றன என்றும் அவற்றின் ப்ரோக்ராம் மாற்றப் பட்டிருப் பதாகவும் அவர்கள் கூறினர். அந்த ரோபாட்கள் சாதாரண கம்ப்யூட்டர்கள் போலல்லாமல் செயற்கை மூளையால் இயங்குவதாகவும் வெளி உலகில் அந்தப் ப்ரோக்ராமை மாற்ற முடியா தென்றும் தெரிவித்தனர். அவர்களின் நான்கு தலைமைப் ப்ரோக்ராமர் களுடன் சூர்யா பேசியதில் ஆராய்ச்சி சாலையிலும் ப்ரோக்ராமை மாற்றிய தடயமே இல்லையென்றும், ரோபாட் களின் மூளையில் நேரடியாக மாற்றி யிருக்க முடியாதென்றும் தெரிய வந்தது. பிறகு...

இது என்ன அவிழ்க்க முடியாத சிக்கலாகி விட்டதே என்ற எண்ணத்தில் சூர்யா சில நொடிகள் ஆழ்ந்திருந்தார்.

ஆனால், அவிழ்க்க முடியாத கார்டியன் முடிச்சை மாவீரன் அலெக்ஸாண்டர் தன் வாளால் ஒரே வெட்டில் துண்டாக்கி வேறு விதத்தில் தளர்த்தியதுபோல், திடீரென சூர்யாவின் கூரிய மூளையில் ஓர் எண்ணம் உதித்தது. ஒரு வேளை இப்படி இருக்கலாமோ! அந்த எண்ணம் யாரும் நினைத்திருக்க முடியாத ஒரு புது திக்கில் இருந்ததாலும், அது தற்போதைய பிரச்சனையின் பல சிக்கல்களையும் விளக்கக் கூடியதாக இருந்ததாலும் ஏற்பட்ட உற்சாகத்தால், சாதாரணமாக எதற்கும் பரபரப்படையாத சூர்யாவும் தன்னிலை மறந்து "ஓ இப்படி இருக்கலாமோ!" என்று உரக்கக் கூவி விட்டார்.

அவருடைய பரபரப்பை உணர்ந்த மற்றவர்கள் ஆவலுடன் அவர் அடுத்துக் கூறப் போவதை எதிர்பார்த்தனர். குறிப்பாக, தன் பிரச்சனைக்கு சூர்யா விடிவு தரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சுமிடோமோவும், சூர்யாவை நன்கு அறிந்திருந்ததால் ஏதோ பிரமாதமான தீர்வு அவருக்கு உதித்திருக்க வேண்டும் என்று உணர்ந்த கிரணும் தங்கள் உணர்ச்சி களையும் அடக்க முடியாமல், "என்ன? என்ன சொல்லுங்க!" என்று சூர்யாவைத் தூண்டினர்.

ஆனால் சூர்யா அவர்களின் ஆசையைத் தீர்த்து வைக்கவில்லை. வெறுமனே தலையசைத்துப் பதிலளிக்க மறுத்தார். "அது இப்பவே சொல்றதுக்கில்லை. இன்னும் சில விஷயங்களை தீர விசாரிச்சுட்டுத்தான் சொல்லணும்."

சுமிடோமோவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாததால் அதைப் பூசி மறைக்க எதோ சொல்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மனத்தில் துளிர் விட்டது. இருந்தாலும் சூர்யாவின் மேல் இருந்த அபரிமிதமான நம்பிக்கையால் அதை அடக்கிக் கொண்டு சூர்யா மேற் கொண்டு என்ன செய்கிறார் என்று கவனிக்க ஆயத்தமானார். ராபர்ட்டுக்கும் ப்ரோக்ராமர்களுக்கும் சூர்யாவிடம் அவ்வளவு பரிச்சயமோ நம்பிக்கையோ இல்லாததால் அவர்கள் மனதுக்குள் ஒரு இகழ்ச்சி தங்கவே செய்தது.

ஆனால் சூர்யாவின் கண்களில் பளிச்சிட்ட ஒளி கிரணுக்கு வேறு செய்தியைத் தெரிவித்தது. வேட்டையில் சரியான குறி வைக்கும் வேடனின் கூரிய கவனம் சூர்யாவின் முகத்தில் குடியேறியதைக் கண்டுகொண்டான். பிரச்சனையின் தீர்வும் வெகுதூரத்தில் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து, அடுத்தது என்ன என்று மிக ஆவலுடன் எதிர்பார்த்தான்.

சூர்யா கூடியிருந்தோரிடம் வினவினார், "இந்த ரோபாட்களை வெளி உலகில் யார் யாரெல்லாம் போய்ப் பார்த்தாங்க?"

ராபர்ட் இகழ்ச்சியுடன் பதிலளித்தார், "எதுக்குக் கேட்கறீங்க? வெளி உலகத்துல தான் மாத்தியிருக்க முடியாதுன்னு பலமுறை விளக்கிட்டோமில்லே? இங்க இருக்கற எல்லாருந்தான் போய்ப் பாத்தோம், ஆனா, நீங்களே தான் சொல்லிட்டீங்களே ரொம்ப அவிழ்க்க முடியாத சிக்கல்னு. முடியலைன்னா ரோபாடிக்ஸ் பத்தி இன்னும் நல்லாத் தெரிஞ்சவங்களைக் கூப்பிட்டு விசாரிக்க வைக்கலாமா?"

கிரண் சூடாக "ராபர்ட்! வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசுங்க" என்றான்.

சூர்யா இடைமறித்து, அமைதியாக ஆனால் ஒரு வித அழுத்தத்துடன், "பரவாயில்லை கிரண், அவர் சொல்றது சரிதான். ராபர்ட், நீங்க அப்படியே செய்யுங்க. ஆனா அதுக்கு முன்னால என் திருப்திக்காக இன்னும் முக்கியமான சில விஷயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. அதைப்பத்திப் பேசினதுக்கப்புறம் நீங்க யாரை வேணா கூப்பிடுங்க, அது உங்க உரிமை." என்றார். ராபர்ட் "ஹ¥ம்" என்று ஓர் அலட்சியத்துடன் அமைதியானார்.

சூர்யா தொடர்ந்தார். "சரி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. தவறு செஞ்ச ரோபாட்களை யாரெல்லாம் போய்ப் பார்த்தாங்க?"

சுமிடோமோ பதிலளித்தார். "ராபர்ட் சொன்னா மாதிரி, ரோபாட்கள் தவறு செஞ்சுதுன்னு தெரிஞ்சவுடனே நாங்க எல்லாருமே உடனே போய் விசாரிச்சோம். ஆனா சூர்யா, அப்பத்தான் தவறு ஏற்கனவே ஆயிடுச்சே, நீங்க அதைப் பத்தி ஏன் கேக்கறீங்கன்னு எனக்கும் விளங்கலையே?!"

சூர்யா பொறுமையின்றித் தலையாட்டினார். "அதுனாலதான் நான் கேக்கறது, தவறு நடக்கறதுக்கு முன்னால யாரெல்லாம் போய் அந்த ரோபாட்களைப் பார்த்தீங்கன்னு."

ராபர்ட் மீண்டும் இகழ்ச்சியுடன் புகுந்தார். "ஏன்? அதுவும் நாங்க எல்லாருந்தான் போய்ப் பாத்தோம். இதோ இளிச்சுகிட்டு நிக்குறானே இந்த ஜீவ்ஸ் கூடத்தான்! அதான் ஏற்கனவே சொல்லிட்டோ மில்லையா? வெளி உலகில ரோபாட்களை யாரும் மாத்தியிருக்க முடியாதுன்னு. அப்புறம் என்ன? திரும்பத் திரும்ப அதையே கேட்டுக்கிட்டு. நேரத்தை வீணடிக்காதீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு."

ராபர்ட்டின் பதிலால் சூர்யாவின் பரபரப்பு இன்னும் அதிகரித்ததை கிரண் உணர்ந்து கொண்டான். ஆனால் அது எதற்கு என்று அவனுக்குப் புரியவில்லை. "ரோபாட்கள் தவறு செய்யும் முன்னும் எல்லாரும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். தவறிய பிறகும் எல்லாரும் போயிருக்கிறார்கள். மேலும் வெளி உலகில் மாற்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். சூர்யா எதற்கு இந்த விஷயத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றும் பிரமாதமாகச் சொல்லா விட்டாலும் பரபரப்படைகிறாரே... ஹ¥ம், ஆனா மனுஷன் எதோ காரணமில்லாமல் மட்டும் செய்ய மாட்டார், கவனிக்கலாம்" என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். சூர்யாவின் அழைப்பு கிரணை அவனுடைய யோசனையிலிருந்து மீட்டது!

சூர்யா "கிரண் என்னோட வா. மீதிப் பேரெல்லாம் இங்கயே இருங்க நான் ஒரு ·போன் கால் செஞ்சுட்டு வரேன்" என்று கூறிவிட்டு, கிரணையும் அழைத்துக் கொண்டு ஆராய்ச்சிச் சாலையின் ஒரு மூலைக்குச் சென்றார். ராபர்ட் "இன்னும் நேரம் வீண்!" என்று புழுக்கத்துடன் சீறிவிட்டுத் தொப்பென்று ஒரு நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டு தன் கைக் கம்ப்யூட்டரில் மின்னஞ்சல் படிக்க ஆரம்பித்தார்.

சூர்யா ஷாலினிக்கு ·போன் செய்தார். அவளுக்கு ரோபாட் பிரச்சனையை விளக்கினார். அவளுக்குத் தன் யூகத்தையும் கூறி, அவளிடம் அதை எவ்வாறு நிரூபிக்கலாம் என்று ஆலோசனை கேட்டார்.

அவர்களுடைய உரையாடலை ஒரு பக்கமாகக் கேட்டுக் கொண்டிருந்த கிரண் இரு விதங்களில் அளவிலாத, அடக்க முடியாத புளகாங்கிதத்தில் ஆழ்ந்து, உற்சாகப் பரபரப்பில் குதிக்க ஆரம்பித்தான்.

முதலாவதாக, பிரச்சனையின் ஒரு தீர்வாக சூர்யா ஷாலினிக்கு அளித்த விளக்கத்தைக் கேட்டு, "பாஸ், பாஸ்! யூ ஆர் த க்ரேட்டஸ்ட்! மறுபடியும் அசத்திட்டீங்க. நிச்சயமா இந்தக் கேஸின் புதிரை அவிழ்த்துட்டீங்க. அப்படித்தான் இருக்கணும்" என்று கத்த ஆரம்பித்தவனை, சூர்யாவின் தீர்க்கமான பார்வையும் அவரது "உஷ்!" என்ற எச்சரிக்கை ஒலியும் தடுக்கவே படக்கென்று வாயை மூடிக் கொண்டு மேலும் உரையாடலைக் கேட்கலானான்.

ஆனால் கிரண் வெளிப்படையாக மௌனமாக இருந்தாலும் வேறொரு காரணத்துக்காக, அவன் மனம் குதூகலக் குற்றால நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டுதான் இருந்தது. அது சூர்யா ஷாலினியுடன் பேசிய கருத்துக்களால் அல்ல, பேசிய தோரணையினால். இதற்கு முன் சூர்யா பலமுறை ஷாலினியுடன் பேசியதைக் கிரண் பார்த்தும் கேட்டு மிருந்ததால், இம்முறை பேசியதில் மிகுந்த வித்தியாசம் இருந்ததை அவன் கண்டு கொண்டான். அந்த வித்தியாசமே அவனுக்குத் தேனில் தோய்த்த பலாச் சுளையைச் சுவைத்ததைப் போல இனித்தது.

இதற்கு முன் ஷாலினியுடன் ஒரு தூரத் தன்மையுடனேயே பேசி வந்த சூர்யாவின் குரலில் இப்போது ஒரு மென்மை இழையோடியதை உணர்ந்து கொண்டான் கிரண். சுமிடோமோவின் ஆராய்ச்சி சாலைக்கு வருவதற்கு முன் தன் தாய் சூர்யாவிடம் எழுப்பிய கேள்வி, அவர் உள்மனத்தைப் பாதித்திருக்க வேண்டு மென்றும் அதனால் அவரது மனமெனும் பாறை இளகி, தன்னை அறியாமலேயே ஷாலினியிடம் பேசுகையில் ஒரு நெருக்கம் தோன்றி மென்மையைக் கூட்டியிருக்க வேண்டும் என்று அனுமானித்தான். இந்த நேரத்துக்காக வெகு காலமாகக் காத்திருந்த கிரணின் உள்ளத்திலும் உற்சாகம் பொங்கியது.

கிரணுக்கே அப்படியென்றால், முதன் முறையாகச் சூர்யாவின் குரலில் ஒலித்த மென்மையை உடனே உணர்ந்து கொண்ட ஷாலினிக்கோ, கேட்கவே வேண்டாம். சித்திரை மாத சென்னைப் பகலவனின் உஷ்ணத்தில் வைக்கப் பட்ட பனிக்கட்டி போல் உருகிவிட்டாள். மகிழ்ச்சியில் அவளது மனம் இறக்கை கட்டிக் கொண்ட இலவம் பஞ்சுபோல் வானத்தில் பறந்தது. இருந்தாலும் சூர்யாவுக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவரது கேள்வி களுக்குச் சாதாரணமாகவே பதிலளித்தாள்.

மனோதத்துவம் மூலமாகத் தீர்வு காண்பதற்கு ஷாலினியின் கருத்துக்களை கேட்டுக் கொண்ட சூர்யா மீண்டும் அனைவரும் குழுமியிருந்த மேஜைக்கு வந்தார். யாவரும் அவரை கேள்விக் குறியுடன் ஏறிட்டுப் பார்த்தனர். அதைக் கண்டு கொள்ளாதவர் போல் சூர்யா புதிதாக ஒரு கேள்வி எழுப்பினார். "சுமிடோமோ-ஸான் உங்க ஆராய்ச்சிசாலையிலேயே உருவாக்கியிருக்கற ரோபாட்ல மிகவும் சக்தி வாய்ந்த, புத்தி வாய்ந்த ரோபாட் எதுன்னு சொல்ல முடியுமா? நான் இது வரைக்கும் பார்த்ததுல வாசல்ல இருக்கற ரிசப்ஷனிஸ்ட் ரோபாட்னுதான் தோணுது. கிரண் மொத்தமா ஏமாந்தே போயிட்டான். இல்லைன்னா இதோ இங்க கிட்சன் வேலை செய்யற அந்த ரோபாட்டா இருக்குமோ?" என்றார்.

ராபர்ட் சூர்யாவுக்கு கிறுக்கேறிவிட்டது என்ற முடிவுக்கே வந்து விட்டார். அவர் முகபாவனை போன விதம் சகிக்கவில்லை. சுமிடோமோவும் குழப்பத்துடன் விளக்கம் கேட்க ஆரம்பித்தார். "ஏன் கேட்கறீங்க சூர்யா? உங்க தீர்மானம் ரொம்ப ஆச்சர்யமா இருக்கே? இங்க எவ்வளவோ..." அவர் முடிப்பதற்குள் மேஜையிலிருந்து ஜீவ்ஸ் எடுத்துக் கொண்டிருந்த கண்ணாடிக் கோப்பைகளில் ஒன்று சுக்கு நூறாகச் சிதறவும் அந்தச் சத்தம் யாவரையும் மேஜையிலிருந்து விரைவாக எழுந்து விலகச் செய்தன. ராபர்ட், "என்ன ஜீவ்ஸ் இப்படித் தட்டிட்டயே, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா செய்யணும். அதிக ப்ராக்டிஸ் குடுக்கறேன்" என்றார்.

சூர்யா மட்டும் அசையவே இல்லை. அமைதியாக, "ஜீவ்ஸ், அதுனால என்ன பரவாயில்லை. நீ போய் ஒரு வேக்குவம் க்ளீனர் கொண்டு வந்து இதை எல்லாம் எடுத்துட்டு போ" என்று அனுப்பிவிட்டு, ராபர்ட்டைப் பார்த்து "என்ன ராபர்ட், இப்ப என்ன சொல்றீங்க, என் அனுமானம் சரிதானே?" என்றார்.

சுமிடோமோவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ராபர்ட்டைப் பார்த்தார். ராபர்ட்டின் முகத்தில் கோபமும் வருத்தமும் கொந்தளித்தன. ஆனால் அவர் ஒன்றும் பேசவில்லை. தொப்பென்று ஒரு நாற்காலி யில் அமர்ந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டார்.

சுமிடோமோ புயலாகச் சீறினார். "சூர்யா என்ன இது? ராபர்ட் மேலயே எதோ பழி சுமத்தறீங்க போலிருக்கு... அவர் என்னோட எவ்வளவு நாளா உழைச்சிருக்கார் தெரியுமா? இந்தப் பிரச்சனையினால என்னைவிட அவர்தான் இன்னும் முடங்கிப் போயிருக்கார். அவரைப் போய்... சே, சே! என்னால அந்த மாதிரி ஒண்ணும் நம்ப முடியாது. பாருங்க நீங்க ஜாடைமாடையா எதோ சொல்லப் போக எப்படி இடிஞ்சு போயிருக்கார். அந்த எண்ணத்தை உங்க மனசிலிருந்து சுத்தமா நீக்கிட்டு வேற திக்கில யோசியுங்க."

சூர்யா அமைதியாக பதிலளித்தார். "நான் ராபர்ட் மேல பழி சுமத்தலை, சுமிடோமோ-ஸான். இந்தப் ரோபாட் ரகளைக்கெல்லாம் வேற யார் காரணம்னு நான் நினைக் கிறேன்னு ராபர்ட்டுக்குப் புரிஞ்சுடுச்சு. அதுனாலதான் இடிஞ்சு போயிட்டார்."

ராபர்ட் வருத்தம் தோய்ந்த முகத்தை கைகளில் இருந்து விலகி நிமிர்ந்து பார்த்து விட்டு சுமிடோமோவை நேரில் நோக்க முடியாமல் மீண்டும் கைகளில் புதைத்துக் கொண்டார். சுமிடோமோ ஒன்றும் புரியாமல் விழித்தார்.

ராபர்ட்டையும் சூர்யாவையும் மாறி மாறிப் பார்த்தார். பல முறை எதோ பேச வாய் திறந்தவர் ஒன்றும் சொல்ல முடியாமல் மூடிக் கொண்டார். கடைசியாக, தன் மனத்திலும் ப்ரோக்ராமர்கள் மனத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்விகளைச் சரமாரியாக அள்ளி வீசினார். "என்னதான் சொல்றீங்க? வேற யாரோன்னா அது யார்? அதுக்காக ராபர்ட் ஏன் இப்படி வருத்தப் படணும்? இந்தப் ப்ரோக்ராமர்கள்ல ஒருத்தர்ங் கறீங்களா? இருக்கவே முடியாது? விளக்குங்க சூர்யா, உடனே விளக்குங்க."

கிரண் "உங்கள் விளக்கமென்னும் துன்ப வெள்ளத்தில் மூழ்கக் காத்திருக்கும் என்னை ஏமாற்றாதீங்க; சொல்லுங்க சூர்யா, சொல்லுங்க" என்று தனக்குள் தமிழ் சினிமா வசனமாக நினைத்துக் கொண்டு விட்டு, அடக்க முடியாமல் வெளிப்படையாக "இன்க்குயரிங் மைன்ட்ஸ் வான்ட் டு நோ!" என்று நேஷனல் இன்குயரர் பத்திரிகையின் விளம்பரம் போல் முத்தாய்ப்பு வைத்தான். சுமிடோமோ அவனை எரித்து விடுவது போல் முறைத்துப் பார்க்கவே "ஸாரி, அடக்கிக்க முடியலை!" என்று வருத்தம் தெரிவித்துவிட்டு வாயைக் கையால் பொத்திக் கொண்டான்.

சுமிடோமோ மீண்டும் தன்னைப் பார்க்கவும், சூர்யா பிரச்சனையின் முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்தார். "சுமிடோமோ-ஸான், நினைச்சுப் பாருங்க. யாருக்கு அந்த ரோபாட்கள் சரியா வேலை செய்யக் கூடாதுன்னு எண்ணம் இருந்திருக்கலாம். இங்க இருக்கற எல்லாருக்கும் அதெல்லாம் ஒழுங்க நடக்கணுங்கறதுதானே ஒரே லட்சியம்? யாருக்கு மாறுபட்ட குறிக்கோள்?"

சுமிடோமோ விழித்தார். "யாரா இருக்கும், அதானே தெரியலை?"

சூர்யா தொடர்ந்தார். "அந்த ரோபாட்கள் மனித அளவுக்குத் திறனாக நடக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டது யார்? ராபர்ட்டுக்கு மிகமிக நெருக்கமாகி, ராபர்ட்டின் பெருமைக்கு உரித்தானது யார்?"

சுமிடோமோ கோபத்துடன், "யார், யார், அது யார்? மனித அளவுக்கு ரோபாட் வேலை செய்யக் கூடாதுன்னு இங்க நினைச்சு இதெல்லாம் செஞ்ச கயவன் யார்? ராபர்ட்டுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? சீக்கிரம் சொல்லுங்க சூர்யா, என் தலையே வெடிச்சுடும் போலிருக்கு."

மூச்சை இழுத்துக் கொண்ட சூர்யா, ஒரு பெரிய வெடியை எடுத்து வீசினார். "அவன் இல்லை, அது! இதுக்கெல்லாம் காரணம் ரோபாட் பட்லர் ஜீவ்ஸ்!"

ஒரு சில நொடிகள் மயான அமைதி நிலவியது. பிறகு சுமிடோமோ கலகலவென அசம்பாவிதமாகச் சிரித்தார். "சே, சே, நான் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்தே போயிட்டேன். ஜோக் அடிக்கற சமயமா இது? ஜீவ்ஸ் ஏன் அப்படிச் செய்யணும். மேலும், இது எப்படி நடக்க முடியும்? இந்தப் பெரிய ப்ரோக்ராமர்களாலேயே ரோபாட் களின் மூளையைத் தடயம் இல்லாம மாத்த முடியாது. ஜீவ்ஸால எப்படி முடியும்?"

சூர்யா தலையசைத்துவிட்டு விளக்கினார். "ஜோக் இல்லை சுமிடோமோ-ஸான்! ரொம்ப ஸீரியஸ். ஏன்கறதை நான் சொல்றேன். எப்படிங்கறதை ராபர்ட்டால விளக்க முடியும். ராபர்ட் தன் கைப்பட உருவாக்கிய ரோபாட் ஜீவ்ஸ், மற்ற ரோபாட்களை விட வித்தியாசமா, ஏன் அவற்றைவிட ஒரு படி மேலாகவே உருவாக்க நினைச்சு அந்த முயற்சியில வெற்றியும் பெற்றிருக்கார். தான் உருவாக்கிய ரோபாட் மற்றதைவிட மனிதப் பண்பு பெற்றிருக்கணுங்கறதுக்காக ஜீவ்ஸ¤க்கு ஒரு மனித குணாதிசயம் இருக்கறா மாதிரி ப்ரொக்ராம் செஞ்சிருக்கார். பர்ஸனாலிட்டி இருக்கற முதல் ரோபாட் ஜீவ்ஸ்தான். என்ன ராபர்ட்?"

ராபர்ட் பெருமையுடன் தலையாட்டி விட்டு நிமிர்ந்து அமர்ந்து சூர்யா சொல்வதைக் கவனிக்கலானார். சூர்யா தொடர்ந்தார். "ராபர்ட் ஜீவ்ஸ¤க்குக் குடுத்த குணாதிசயம் பெருமை. அதாவது தனக்கு மனிதத்தன்மை இருக்குங்கற பெருமை. அதோட தான் செய்யக் கூடிய வேலைகளை ஸ்டைலோட செஞ்சு பார்க்கும், மனிதர்களை அசர வைக்கும் பெருமை. ஆனா அந்தப் பெருமை எங்கே போய் முடியும்னு ராபர்ட் கணக்குப் போடலை..." சூர்யா ஒரு நொடி நிறுத்திவிட்டு ராபர்ட்டை மீண்டும் பார்த்தார்.

ராபர்ட் துயரத்துடன் மௌனமாகத் தலையசைத்து ஆமோதித்து, தொடருமாறு சைகை செய்தார். சூர்யா மேலும் விளக்கலானார். "...ஆனா, ஜீவ்ஸோட தற்பெருமை கட்டுக்கு அடங்காமப் போயிடுச்சு. இன்னொரு மனிதத்தன்மையும் வந்திடுச்சு, அதாவது பொறாமை. தன்னைவிட மனிதத்துவம் அதிகமிருக்கற ரோபாட் எதுவுமில்லை, இருக்கவும் கூடாதுங்கற வெறி வளர்ந்திடுச்சு. அதே சமயம், ராபர்ட் பர்ஸனாலிட்டி குடுக்கற முயற்சியில ஜீவ்ஸ¤க்கு செயற்கை மூளையைத் தானே மாற்றக்கூடிய திறனையும் தற்செயலா குடுத்துட்டார். தன் மூளைக்கும் மற்ற மூளைக்கும் தொடர்பு குடுக்க டேட்டா கேபிள் இருந்தாப் போதும்னு நினைக்கிறேன். அதை மட்டும் தன்னோட எடுத்துக் கிட்டு போயி, வெளி உலகில வெற்றி பெறுகிறமாதிரி இருக்கற ரோபாட்களின் ப்ரோக்ராம்களை, தோல்வி அடையற மாதிரி ஜீவ்ஸ் மாத்த ஆரம்பிச்சது. ராபர்ட்டுக்கும் இது கொஞ்ச நாள் கழிச்சுத் தெரிஞ்சு போச்சு. அதை உறுதி செஞ்சுக்கத்தான் யார் ரோபாட்களைப் போய்ப் பார்த்தாங்கன்னு கேட்டேன். நான் வெளிப்படையாக் கேட்கறத்துக்கு முன்னாடி ராபர்ட்டே படபடப்பிலே ஜீவ்ஸ் போய்ப் பார்த்ததை தன்னை அறியாம சொல்லிட்டார்."

சுமிடோமோ அதிர்ச்சியுடன் இடை புகுந்தார். அவருக்குள் இருந்த விஞ்ஞானி அடக்க முடியாமல் ஆரவாரித்தார். "ராபர்ட் இதெல்லாம் என்ன நிஜமா? ஒரு ரோபாட்டுக்கு மனித பர்ஸனாலிட்டியும், செயற்கை மூளையை மாத்தற அளவுக்குத் திறமை குடுத்திருக்கீங்களா! பிரமாதம்! ஆனா என்னால இதைத் துளிக்கூட நம்ப முடியலை சூர்யா. அப்படியே இருந்தாலும் இத்தகைய பெரும் சாதனையை ராபர்ட் என்கிட்ட சொல்லாம ஏன் மறைக்கணும்?"

சூர்யா தொடர்ந்தார். "சொல்லாததக்குக் காரணம் தான் உருவாக்கிய ரோபாட்டான ஜீவ்ஸைத் தன் மகன் போலவே கருத ஆரம்பிச்ச ராபர்ட் இது வெளியில தெரிஞ்சா அவனுடைய மூளையை மாத்தி வெறும் இயந்திரமாக்கிடுவீங்க, தன் மகனை இழந்துடுவோமோன்னு நினைச்சு மறைச் சுட்டார். தானே அதை மாத்திடலாம்னு ஆராய்ச்சி செய்யறார்னு நினைக்கிறேன்."

சுமிடோமோ தலையசைத்து மறுத்தார். "இன்னும் என்னால நம்ப முடியலை. ஒரு ரோபாட் இந்த அளவுக்குச் செய்ய முடியுங்கறது அசாத்தியமாத்தான் தோணுது."

கிரண் கிண்டலாக, "இதோ ஜீவ்ஸ் வருதே, அதையே செஞ்சு காட்டச் சொல்லிட்டாப் போச்சு!" என்றான். சூர்யா சிரிக்காமல் ஆமோதித்தார். "அதுதான் சரியான வழி. நான் அதைத்தான் ஷாலினி கிட்ட பேசினேன். மனோதத்துவ ரீதியில் நிரூபிக்க இந்த வழிதான் சொல்லியிருக்கா. ஜீவ்ஸ்தான் காரணங்கறதைச் சந்தேகித்தாலும் அதை நிரூபிக்கத்தான் மற்ற ரோபாட்களைப் பத்தி உயர்த்திப் பேசினேன். அதுனாலதான் ஜீவ்ஸ் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பையை கோபத்தில இறுக்கிப் பிடிச்சு உடைச் சுட்டான். அதைக் கவனிச்ச ராபர்ட் தட்டி விட்டதாக மழுப்பிட்டார். ஆனா நான் அதை ஓரக் கண்ணால கவனிச்சுட்டேன்."

சுப்பு புகுந்து "ஜீவ்ஸ் ஏன் இதை ஒத்துக்கணும்?" என்றார்.

சூர்யா விளக்கினார். "ஜீவ்ஸ் இன்னும் ஒரு ரோபாட்தான். அதுக்கு பெருமை இருக்கே ஒழிய தற்காப்பு உணர்ச்சி இருக்காதுன்னு நினைக்கிறேன். தான் செஞ்சதைத் தம்பட்டம் அடிக்கத்தான் அதுக்குத் தோணும், மறுக்கத் தோணாது. இப்ப பாருங்க" என்று கூறிவிட்டு, ஜீவ்ஸிடம், "ஜீவ்ஸ், நீ செயற்கை மூளையைக் கம்ப்யூட்டர் இல்லாமயே மாத்த முடியும்னு ராபர்ட் சொன்னார். எங்களால நம்ப முடியலை. இதோ இருக்கற கிட்சன் ரோபாட்டுக்கு மாத்தி துணி எரிக்கறா மாதிரி செஞ்சு காட்டேன் பார்க்கலாம்" என்றார்.

ஜீவ்ஸ் பெருமையுடன் கம்ப்யூட்டரில் இருந்த டேட்டா கேபிளை மட்டும் அவிழ்த்து தன் மூளைக்கும் அந்த இன்னொரு ரோபாட் மூளைக்கும் பொருத்திச் சில நொடிகளில் கழட்டியதும் அந்த கிட்சன் ரோபாட் கிட்சன் துவாலையை எடுத்து அடுப்பின் நெருப்பின் பக்கத்தில் நகர்த்திக் கொளுத்தி விட்டது.

சுமிடோமோ "பிரமாதம்!" என்று கூவவே, ஜீவ்ஸ் பாராட்டை ஏற்றுக் கொள்ள பவ்யமாகக் குனிந்து ஒரு கையால் எரியும் துணியைக் காட்டியது.

டனாகா, "என்ன ஆச்சுன்னு தெரிஞ்சு போச்சு. அது ரொம்ப நிம்மதிதான். ஆனா ஜீவ்ஸை இப்ப என்ன செய்யறது?" என்றார்.

சூர்யா தன் கருத்தைக் கூறினார். "இத்தகைய விஞ்ஞான சாதனையை வீணடிக்கறது ரொம்பத் தவறுன்னு எனக்குத் தோணுது. இதுவரைக்கும் ராபர்ட் ஒருத்தர்தான் இதுல வேலை செஞ்சிருக் கார். இப்ப இங்க இருக்கற அத்தனை விஞ்ஞானிகளும் சேர்ந்து முயற்சி செஞ்சா, ஜீவ்ஸோட திறனை நல்ல விதமா மாத்திப் பயன் படுத்தலாம்னு தோணுது."

ராபர்ட் ஆரவாரித்தார். "ஆஹா! என்ன அருமையான யோசனை. எனக்கு அப்பவே தோணாமப் போச்சே. பிரச்சனையை முளையிலேயே கிள்ளியிருக்கலாம். என் மூடத்தனமான பாசத்தால பெரிசா வளர விட்டுட்டேன். நீங்க சொல்றதுதான் சரி சூர்யா. நான் இதை ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டு இவங்க எல்லாரோட உதவியோட ஜீவ்ஸின் திறனை விஞ்ஞானத்தின் நன்மைக்கு மாத்திக் காட்டறேன். ரொம்ப நன்றி சூர்யா!"

சுமிடோமோ தழுதழுத்த குரலோடு சூர்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினார். "சூர்யா உங்களுக்கும் கிரணுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இருந்தாலும் சொல்றேன். எங்க நிறுவனத்துலேர்ந்து உங்களுக்குச் சேவை செய்ய ஒரு விசேஷ ரோபாட் தயாரிச்சு குடுத்தே தீருவேன். மறுக்காதீங்க!"

கிரண், "எனக்கும் ஒண்ணு குடுங்க. ஆனா, உங்க ஆ·பீஸ் ரிஸப்ஷனிஸ்ட் மாதிரி இருக்கணும்!" என்றான்.

எல்லோரும் ஓஹோவெனச் சிரித்தனர். சுமிடோமோ கிரணின் முதுகில் பலமாக ஒரு ஷொட்டு விட்டு, கண் சிமிட்டிக் கொண்டு "அதுக்கென்ன அதைவிடப் பிரமாதமாவே செஞ்சாப் போச்சு!" என்றார்.

ரோபாட் ரகளையின் ரகசியம் விளங்கி விட்டதால், ஆராய்ச்சி சாலையில் ஒரு ஆனந்தக் கொண்டாட்டம் ஆரம்பித்தது.

கதிரவன் எழில்மன்னன்

(முற்றியது)

© TamilOnline.com