மார்ச் 12, 2016 அன்று விரிகுடாப்பகுதி தமிழ்க் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டி ஃப்ரீமான்டிலுள்ள ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 210 குழந்தைகள் பங்கேற்று 5800க்கும் அதிகமான குறட்பாக்களைப் பொருளோடு கூறினர்.
5 வயதுக்குக் கீழ் பிரிவில் இரண்டரை வயதுக் குழந்தை வைபவி கண்ணன் பதினோரு குறள்களைக் கூறி வியப்பிலாழ்த்தினார். நாலரை வயதான சாய் கிருஷ்ணா ஸ்ரீனிவாசா 80க்கும் மேற்பட்ட குறள்களை ஒப்பித்ததும், 6-10 வயது பிரிவில் 9 வயதான விக்னேஷ் செந்தில்குமார் 212 குறள்களைப் பொருளோடு கூறியதும் அசரவைத்தது. பெரியவர்கள் பிரிவில் திருமதி. ஈஸ்வரி பாண்டியன் 1330 குறள்களை எண்பத்தெட்டே நிமிடங்களில் கூறி குறளரசி பட்டம் வென்றார். பின் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேட்ட குறள்களுக்குப் பொருள் விளக்கினார்.தன் மனதை மிகக்கவர்ந்த குறள்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
திருக்குறள் போட்டி மூன்றாண்டுகளாகத் தன்னார்வத் தொண்டர்களின் துணையுடனும், புரவலர்களின் ஆதரவுடனும் வெற்றிகரமாக நடந்து வருகின்றது.
பரிசளிப்பு விழா இந்தப் போட்டியின் பரிசு வழங்கும் விழா மார்ச் 26ம் நாளன்று டப்ளின் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலைமாமணி, சொல்வேந்தர் திரு. சுகி சிவம் மற்றும் அவரது துணைவியார் திருமதி ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
குழந்தைகளின் நான்கு பிரிவுகள் மற்றும் பெரியவர்கள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுக் கோப்பைகளும் சுகி சிவம் அவர்களால் வழங்கப்பட்டது. ஈஸ்வரி பாண்டியன், மின்னசோட்டா தமிழ் மன்றத்தின் பிரசன்னா சச்சிதானந்தன், ஏழு வயதில் அனைத்துக் குறள்களையும் கூறி அதிசயம் நிகழ்த்திய அத்விகா சச்சிதானந்தன் ஆகிய மூவருக்கும் சொல்வேந்தர் சுகி சிவம் விரிகுடாக் கலைக்கூடம் அளித்த "குறளரசி" பட்டத்தை வழங்கினார்.
கட்டுரைகள் மற்றும் குழந்தைகளின் ஓவியங்கள் தாங்கிய திருக்குறள் விழா மலர் சுகி சிவம் வெளியிட, ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார்.
திருக்குறள் கூறிய குழந்தைகள் அனைவருக்கும் ஆச்சி ஆப்பக்கடை நிறுவனர் திரு. காளிதாஸ் அன்பளிப்பாகக் கொடுத்த திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. தென்றல் பத்திரிக்கையின் நிறுவனர் திரு. C.K. வெங்கட்ராமன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற குழந்தைகளுக்கு இசையமைப்பாளர் திரு. பரத்வாஜ் அவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட "உள்ளம் தோறும் வள்ளுவம்" என்ற ஒலிப்பேழையை வழங்கினார்.
குறளரசியர் மூவர் ஈஸ்வரி பாண்டியன் அத்விகா சச்சிதானந்தன் பிரசன்னா சச்சிதானந்தன்
பட்டிமன்றம் விழாவின் சிறப்புப் பகுதியாக சொல்வேந்தர் தலைமையில் "என்றும் மகிழ்ச்சி நம் கையிலா பிறர் கையிலா" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கலைக்கூடத்தின் நிறுவனர் திரு. திருமுடி துளசிராமன் வரவேற்புரை வழங்கினார். நடுவருக்கும் சிறப்புப் பேச்சாளர்களுக்கும் மரியாதை செய்ய அழகாக நிகழ்ச்சி தொடங்கியது.
நடுவர் திருக்குறளின் பெருமைகளை மிக எளிமையான முறையில் நகைச்சுவையாகப் பேசினார். மகிழ்ச்சி என்றும் பிறர் கையிலே என்ற அணி மணிகண்டன் தலைமையில் கெளரி சேஷாத்திரி, ராஜாமணி வலுச் சேர்த்தனர். கையிலே என்ற அணியில் சுமதி கஸ்தூரி தலைமையில் சாந்தி புகழ் நாச்சம்மை ஆகியோர் வாதாடினர். நடுவர் அழகாக வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உதாரணமாகக் காட்டி சாதாரண மனிதர்களுக்கு மகிழ்ச்சி பிறர் கையிலே என்றும் ஞானிகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி தன் கையில் என்றும் தீர்ப்புக் கூறினார்.
திருமுடி துளசிராமன் |