கலிஃபோர்னியா: ஸ்ரீமஹாருத்ர யாகம்
2016 மே 27 முதல் 29ம் தேதிவரை, கலிஃபோர்னியா மற்றும் விரிகுடாப்பகுதி மக்களின் நலன்கருதி ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் ஸ்ரீ மஹாருத்ர யாகம் நடைபெற உள்ளது.

சிவபெருமானை ஆராதித்து நடைபெறும் யாகமே ஸ்ரீருத்ரமாகும். ஸ்ரீருத்ரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் "நமோ" என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஈசனைத் துதிப்பதால் 'நமகம்' எனப்படுகிறது. "சமே", "சமே" என்று சொல்லி சிவனை வேண்டுவதால் இரண்டாவது பகுதி 'சமகம்' எனப்படுகிறது. ஒவ்வொன்றிலும் 11 அனுவாகங்கள் உள்ளன. மரத்தின் வேரில் ஊற்றும் நீரினால் கிளைகள் செழிப்பது போல், ஸ்ரீமஹாருத்ர யாகத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றன என்பது முன்னோர் வாக்கு.

ஸ்ரீமஹாருத்ர ஜபமே பாவங்களுக்குச் சிறந்த பிராயச்சித்தமாக விதிக்கப்பட்டுள்ளது. உலகநன்மை கருதி நடைபெறும் இந்த ஜப ஹோமத்தில் பங்கேற்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பிணிகள் நீங்கி, வாழ்க்கை வளம்பெறும். இதில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com