"அது திட்டமிட்ட படுகொலை!" என்று கத்தினான் மாணிக்கம். அதைக் கேட்ட சந்திரா அதிர்ந்துபோனாள். அவள் ஒரு பத்திரிகை நிருபர். சிறைக்கம்பிக்குப் பின்னாலிருந்த மாணிக்கத்தின் முகத்தில் குரூரம் இருந்தது.
"நான் ஏன் அவனைக் கொன்னேன் தெரியுமா?" மாணிக்கம் குரலில் எந்த உணர்வும் இல்லாமல் சொன்னான், "அவனிடம் ஏராளமாப் பணம் இருந்தது. உன் கிட்டே இருக்கா?"
ஒரு கைதியின் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கச் சந்திரா தயங்கினாள்.
அவனே பதில் சொன்னான், "பாத்தா பணக்காரி மாதிரித்தான் தெரியுது. உன்னையும் கொல்லப் போறேன்" என்று சீறிக்கொண்டு தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான்.
சந்திரா கனவிலிருந்து விழித்து சடக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். மேலெல்லாம் வியர்த்திருந்தது. மனதில் இன்னும் அச்சம் இருந்தது. அருகில் இருந்த அவளது கணவன் சங்கர் பதறிப் போனான். "என்ன ஆச்சு சந்திரா? இப்படித் தூக்கி வாரிப் போட்டு எழுந்தே. கெட்ட கனவா? ஒரு டம்ளர் தண்ணி குடி" என்றான்.
"பயங்கரக் கனவு. மாணிக்கம் என்னைக் கொல்ல வந்தான்" என்றாள் சந்திரா கொஞ்ச நேரம் கழித்து.
"ஓ! போன வாரம் நீ பேட்டி எடுத்தயே, அந்தக் கொலைகார மாணிக்கமா?"
"ஆமாம். அவன் தன்னோட முதலாளியையே கொன்னுட்டான். ஏன் தெரியுமா? அவனுக்கு வீட்டுக் கடனை அடைக்கப் பணம் இல்லை. அவனை விவாகரத்துச் செய்த பொண்டாட்டிக்கு ஏராளமா ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியிருந்தது. கிரெடிட் கார்டு பில் நெறய பாக்கி. கன்னாபின்னான்னு கடன் தொல்லை. என்னதான் என் நிருபர் உத்தியோகத்தை நான் ரசிச்சாலும், இந்த மாதிரி விஷயம் என்னை அதிரத்தான் வைக்குது."
"தூங்குடா தங்கம். எல்லாம் சரியாப் போயிடும்."
மறுநாள் காலையில் சந்திரா எழுந்தபோது கலகலப்பாக இருந்தாள்.
"பரவாயில்லையே, நிகழ்காலத்துக்கு வந்துட்டே போல இருக்கே" சங்கர் சீண்டினான்.
"போ சங்கர். ஒருத்தனுக்கு ஏராளமாக் கடன் இருக்குன்ற ஒரே காரணத்துக்காக அவன் இன்னொருத்தனைக் கொலை செய்யமுடியும்னு என்னால நெனச்சுக் கூடப் பாக்க முடியலே" என்றாள் சந்திரா.
"மனித மனம் எப்படி வேலை செய்யும்னு யாராலயும் சொல்லமுடியாது. ஏராளமா தரவேண்டியது இருக்கும் போதே மேலும் மேலும் கடன் வாங்கறது ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. பாரு, இதனால வங்கிகளுக்கு எவ்வளவு பிரச்சனை!"
"அதானே. ஊம்.. சொல்ல மறந்துட்டேன். என் தம்பிக்கு வால் ஸ்ட்ரீட்டிலே வேலை கெடச்சிருக்கு."
"நல்லதாப் போச்சு. அவனை ஆலன் கிரீன்ஸ்பானுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பச் சொல்லு" சங்கர் கிண்டலாகச் சொன்னான்.
"நான் இன்னும் தூக்கத்தில இருக்கேனா என்ன! என் தம்பி எதுக்கு பெடரல் ரிசர்வ் போர்டின் தலைவருக்கு ஏன் நன்றி சொல்லணும்? வேலை கிடைச்சது அவன் சாமர்த்தியம் இல்லையா?"
"இப்படி யோசிச்சுப் பாரு சந்திரா. பெடரல் ரிசர்வின் தலைவர் என்கிற முறையில் அவர்தான் பெடரல் நிதியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கறது. அதன் மூலம் நம்ம நாட்டுப் பொருளாதாரத்தின் விதியைத் தீர்மானிக்கறாரு. அதனாலதான் அவருக்கு உன் தம்பி நன்றி சொல்லணும்."
"நல்ல வேளை! எதோ புரியாத எதையோ சொல்லப் போறியோன்னு நெனச்சேன்" என்றாள் சந்திரா.
"அவசரமாப் புறப்படறயா? கொஞ்ச நேரம் இருந்தாச் சொல்லு, நான் அது எப்படின்னு விளக்கறேன்" என்று சொன்ன சங்கர் தொடர்ந்தான்.
"நிதிக் கொள்கை (Monetary Policy) மூலம் பெடரல் ரிசர்வ் மூணு விஷயங்களைச் சாதிக்குது: ஒண்ணு, பொருளாதார வளர்ச்சி. ரெண்டு, அதிக வேலை வாய்ப்பு. மூணு, நிலையான விலைவாசி.
"பெடரல் ரிசர்வுன்னா என்ன தெரியுமா? அது வங்கிகளின் வங்கி. நம்ம ஊர்ல ரிசர்வ் பாங்குன்னு சொல்றொமே, அதைப் போல. நாம வங்கிகளிலே நம்ம பணத்தைப் போட்டு வைக்கிற மாதிரி, பாங்க் ஆப் அமெரிக்கா, சேஸ் மாதிரி வங்கிகள் இந்த பெடரல் வங்கியில ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டு வைக்கணும்."
சந்திரா தலையை ஆட்டினாள்.
"எல்லா வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போதுமான அளவு பணத்தை பெடரல் வங்கியில் இருப்பாக வைக்கணும். உதாரணமா, நான்தான் பேங்க் ஆப் அமெரிக்காவின் சேர்மன்னு வச்சுக்கோ.."
"ஆஹா, கேக்கவே நல்லா இருக்கே..."
சங்கர் புன்னகைத்துவிட்டுத் தொடர்ந்தான், "எல்லாக் கிளைகளிலும் மொத்தமா 25 பில்லியன் டாலர் கையிருப்பு இருக்கறதா வைத்துக்கொள்வோம். அதாவது, வாடிக்கை யாளர் போட்ட பணத்தில், எடுத்த பணம் போக நிகரக் கையிருப்பு. பெடரல் வங்கி 10 சதவீதம் தன்னிடம் வைக்கணும்னு சொல்றதா வெச்சுக்குவோம். சேர்மன் என்கிற முறையில நான் என்ன செய்யணும்னா..."
"ரொம்ப ஈசி. 2.5 பில்லியன் டாலர் பெடரல் வங்கியில இருக்கற மாதிரிப் பாத்துக்கணும். அவ்வளவுதானே?" சந்திரா பட்டென்று சொன்னாள்.
"அவசரப்படாதே. என் வங்கி ஒரு பெரிய கடன் தொகையை ஒரு வாடிக்கையாள ருக்குக் கொடுக்கணும், ஆனால் கையிலே 2 பில்லியன் டாலர்தான் இருக்கு. அப்ப நான் என்ன செய்யறது?"
"கடன் வாங்கி ஆகணும். இல்லாட்டாத் திருடலாம்" என்றாள் சந்திரா.
"நான் இன்னொரு வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். சிடிகார்ப் கிட்டேயிருந்து கடன் வாங்கறேன்னு வச்சுக்கோ. அவங்க அதுக்கு ஒரு வட்டி போடுவாங்க இல்லையா? நான் மறுநாளே அந்தப் பணத்தைத் திருப்பிடு வேன். அதனால அந்த வட்டிக்கு 'ஓவர்நைட் வட்டி' அல்லது 'பெடரல் நிதி வட்டிவீதம்' அப்படீன்னு பெயர்."
"சரிங்கோவ். ஆலன் கிரீன்ஸ்பான் இந்த வட்டிவீதத்தை நிர்ணயிக்கிறார். அதுக்கும் என் தம்பிக்கு வேலை கெடச்சதுக்கும் என்ன சம்பந்தம்னேன்" என்றாள் சந்திரா கிண்டலாக.
"அங்கேதான் வர்றேன். இப்போ, வட்டி வீதம் கொறச்சலா இருந்தா, கடன் வாங்குகிற வாடிக்கையாளருக்கு அது நல்லது. வட்டிவீதம் ஏறினா, அவங்களுக்குக் கெட்டது. அதாவது, குறைந்த வட்டியில் பணம் கெடச்சா, மக்களுக்குப் பொருள் களை வாங்கும் சக்தி அதிகமாகுது. சரிதானே?"
"புரியுது. அப்போ கம்பெனிகளுக்கும் வணிகம் அதிகமாகுது; நிறையப் பேருக்கு வேலை கிடைக்குது" என்றாள் சந்திரா.
"இப்ப சொல்லு. உன் தம்பி ஆலன் கிரீன்ஸ்பானுக்கு நன்றிக்கடிதம் எழுதணுமா, வேண்டாமா?" கேலி செய்தான் சங்கர்.
தலையை ஆட்டியபடியே சந்திரா யோசனையில் ஆழ்ந்தாள். சங்கரின் வார்த்தைகள் குறுக்கிட்டன, "நீ ஒரு காரை 1999-ல் வாங்கினால் அதுக்கு 12 சதவிகிதம் வட்டி கொடுத்திருப்பாய். அதையே 2003-ல வாங்கினால், கிட்டத்தட்ட வட்டியே இல்லாமல் வாங்கியிருக்கலாம். ஏன் சொல்லு பார்க்கலாம்..."
"இதுக்கும் பெடரல் ரிசர்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நெனக்கறேன்"
"ரொம்பச் சரி. ஓவர்நைட் வட்டி 2000-த்திலே 6 சதவீதமா இருந்தது. 2003-04லே அது 1 சதவீதமாயிடுச்சு.
"இன்னும் கேளு. 2002-லே நம்ம பொருளாதாரம் மோசமா இருந்தது. மக்களுக்கு வேலையில்லே, கையிலே காசு கம்மி. பெடரல் ரிசர்வின் தலைவர் என்கிற முறையில் ஆலன் கிரீன்ஸ்பான் பொருளாதாரத்தை நிமித்தி வைக்க ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. பெடரல் நிதி வட்டியை 1 சதம் குறைக்கத் தீர்மானித்தார்.
"அதனால வங்கிகளும் நிதி நிறுவனங் களும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடிந்தது. வணிக நிறுவனங்கள் வளர்ச்சி யடைஞ்சுது. மக்கள் பொருள்களை வாங்கத் தொடங்கினாங்க. பொருளாதாரம் மெல்லத் தலையைத் தூக்கியது. அதனாலதான் 2002-ஐவிட 2004-ல் பொருளாதாரம் நல்லா இருந்துச்சு.
"நிதிக் கொள்கைங்கிறது வெறும் வட்டி விகிதம் மட்டுமல்ல. ஆனாலும் வட்டி விகிதம் மிக முக்கியமான அம்சம். இதைத் தீர்மானிக்க வருடத்தில் எட்டுத் தடவை பெடரல் வங்கி கூடுது. அவங்களுடைய முடிவை உலகமே கூர்மையா கவனிக்குது. ஏன்னா, இது பொருளாதாரத்தின் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
"பெடரல் ரிசர்வின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதி நியமிக்க, செனட் அங்கீகரிக்கிறது. ஆனால் அவர் ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டவரல்ல. வேலை வாய்ப்பு, பணவீக்கம், அன்னியச் செலாவணி, வீட்டுச் சந்தை என்று பல விவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர் அதற்கேற்பத் தீர்மானிக்கிறார்.
"அவரது பதவிக்காலம் நாலு வருஷம். கிரீன்ஸ்பான் 1987-ல் இருந்து இந்தப் பதவியை வகிக்கிறார். விரைவில் ஓய்வு பெறுவார்."
இப்படி சங்கர் சொன்னதும் சந்திரா கண்களை விரித்து அவனைப் பார்த்து விட்டு, "இப்பத் தெரியுதா நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்னு! உனக்கு எப்படி இவ்வளவும் தெரிஞ்சிருக்கு!" என்றாள்.
"தங்கள் பாராட்டுக்கு நன்றி சந்திரா அவர்களே" என்றான் சங்கர் கிண்டலாக. சந்திரா அவனை அணைத்துக் கொண்டாள்.
ஆங்கில மூலம்: சிவா நாரா மற்றும் ப்ரியா ராகவன் தமிழ் வடிவம்: மதுரபாரதி |