அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான். இதைக்கேட்டு அச்சம்கொண்ட ஜயத்ரதன், அப்போதே போரைவிட்டு விலகி ஊர்போய்ச் சேர நிச்சயித்தான். ஜயத்ரதன், துரியோதனாதிகளின் ஒரே சகோதரியான துஸ்ஸலையின் கணவன். இந்தக் காரணத்துக்காகத்தான் வனவாச காலத்தில் அவன் பாஞ்சாலியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற சமயத்தில், வெளியே சென்றிருந்த ஐவரிடம் பிடிபட்டு, 'தங்கையின் கணவனைக் கொல்ல வேண்டாம்' என்று தருமபுத்திரன் தடுத்ததால் ஐங்குடுமி வைத்து, சில நிபந்தனைகளை விதித்து பீமனும் அர்ச்சுனனும் அனுப்பி வைத்திருந்தார்கள். போர்நேரத்தில் இப்படியொரு கடுமையான சபதத்தை அர்ச்சுனன் மேற்கொண்டான் என்று கேள்விப்பட்டவுடனேயே ஜயத்ரதனுக்கு 'சாவு நிச்சயம்' என்பது புரிந்துவிட்டது. பீமார்ச்சுனர்கள் விதித்த நிபந்தனைகளில் 'எந்தச் சபைக்குச் சென்றாலும் அங்கே தர்மபுத்திரன் வாழ்க' என்பதை ஒத்து உரக்கச்சொல்லி கோஷமிட வேண்டும் என்பதும் ஒன்று. இது அவனுடைய மான உணர்ச்சியை ஐவருக்கு எதிராக எழுப்பியிருந்தது. (இந்த தண்டனை, தனியாக இருந்த பாஞ்சாலியைத் தூக்கித் தேரிலேற்றிக் கொண்டு, 'தனக்கு வசப்பட்டவளாக ஆக்கிக்கொள்ள' அவன் செய்த முயற்சிக்குக் கிடைத்த பரிசு என்பதை மறந்துவிடக்கூடாது.) ஆனால் தான் செய்ததை மறந்து, அவமான உணர்ச்சியால் மட்டுமே பாதிக்கப்பட்ட அவன் போருக்கு கௌரவர்களோடு சேர்ந்துகொண்டான். துரியோதனாதியர் அவனுடைய மனைவியின் நேரடி அண்ணன்மார்கள் என்பதும் ஒரு காரணம். பாண்டவர்களும் துஸ்ஸலையைத் தங்களுடைய சொந்த சகோதரியாகவே பாவித்தார்கள் என்பது வேறு விஷயம்.
இப்படி அவன் போரைவிட்டுக் கிளம்பும்போது, இந்தத் தருணத்தில் அர்ச்சுனனை வெகுசுலபமாக வென்றுவிடக்கூடிய (அவனையே தற்கொலை செய்துகொள்ள வைத்துவிடக்கூடிய) சந்தர்ப்பத்தைப் பார்த்த துரியோதனன், துரோணர் முதலானோர் அதைத் தடுத்தனர். இதை நம்முடைய 'காலமே நாளையைப் பற்றிச் சிந்தித்தால்' தவணையில் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறோம். "மறுநாள் போரில் அர்ஜுனன் ஒருவேளை ஜயத்ரதனைச் சென்றடையும் அளவுக்கு அவகாசம் கிடைக்காமல் போய்விட்டால், அது ஒன்றே அர்ஜுனன் இறப்பதற்குக் காரணமாகிவிடும். அர்ஜுனனுக்கு எதிராக ஒரேயொரு அம்பைக்கூட எய்யவேண்டியதில்லை. அவன் ஜயத்ரதனை வந்தடையும் கால எல்லையைச் சற்றே விரிவாக்கினால் போதும்; காலதாமதம் ஏற்பட்டாலே போதும். அவன் தானாகவே இறந்துபோவான்" என்பது அதிலே முக்கியமான ஒன்று.
அர்ச்சுனன் ஜயத்ரதனை அடையும் காலத்தை நீட்டிப்பதற்காகத்தான் துரோணர் அவ்வளவு விரிவான வியூகத்தை வகுத்தார். பதின்மூன்றாம் நாள், அபிமன்யு உடைக்க முயன்றது பத்மவியூகம். இது 'சக்கர வியூகம்' என்று தவறாகச் சொல்லப்படுகிறது. பத்மவியூக அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசவேண்டும். அந்தத் தாமரை வடிவம் எப்படி நண்டின் கொடுக்குகளைப் போல நெருக்கி, உள்ளே வருபவனை முழுக்கவே வளைத்துக் கொள்ளக்கூடியது என்பதையெல்லாம் சித்திரங்களின் உதவியோடு பேசவேண்டும். அதை இன்னொருமுறை செய்யலாம். பதினான்காம் நாளன்று அர்த்த-பத்ம, அர்த்த-சக்ர வியூகத்தை வகுத்தார். பாதி தாமரை, பாதி சக்கரம். இதைத்தான் சென்ற தவணையின் கடைசிப் பத்தி சொல்கிறது. அதாவது வெளிப்புறத்தில் சக்ரவியூகம்; சக்கரத்தின் உள்வட்டத்தில் பத்மவியூகம். இரண்டையும் பிளக்கவே வெகுநேரமாகும்-அதுவும் அர்ச்சுனைப் போன்ற வில்லாளிக்கு. உள்வட்டத்திலுள்ள பத்மவியூகத்தின் நடுவில் 'ஸூசீவ்யூகம்' அதாவது ஊசியைப் போன்ற வடிவமுள்ள வியூகம். இந்த ஊசியின் கண்ணுக்கு உள்ளே ஜயத்ரதன் நிறுத்தப்பட்டான். இவ்வளவு விரிவான ஏற்பாடு நடக்கும் சமயத்தில்தான் யுத்தமுனையில்-பதின்மூன்று நாள் யுத்தத்துக்குப் பிறகு எஞ்சியிருந்த-கௌரவ சேனையின் அளவு அவ்வளவு விரிவாகக் கூறப்படுகிறது. துரோணர் நிற்கும் முனைக்கும் ஜயத்ரதன் நிற்கும் முனைக்கும் இடையில் 'ஆறு குரோசம்' தூரமிருந்தது. ஜயத்ரதனிடம் துரோணர் சொல்கிறார், 'நீயும் ஸோமதத்தகுமாரனும் மஹாரதனான கர்ணனும் அஸ்வத்தாமாவும் சல்யனும் விருஷஸேனனும் கிருபரும் லட்சம் குதிரைகளோடும் அறுபதினாயிரம் தேர்களோடும் மதப்பெருக்கடைந்த பதினாலாயிரம் யானைகளோடும் கவசம் பூண்டிருக்கிற இருபத்தோராயிரம் காலாட்படைகளோடுங்கூடி என்னை அணுகாமல் ஆறு குரோசத்திற்கப்பால் விலகியிருங்கள். அங்கிருக்கின்ற உன்னை எதிர்த்து இந்திரனோடுகூடின தேவர்களும் போர்செய்து ஸஹிப்பதற்குச் சக்தியுள்ளவர்களல்லர். அவ்வாறிருக்க இந்த எல்லாப் பாண்டவர்களும் யாதுசெய்யப் போகிறார்கள்?' (துரோண பர்வம் அத். 87, ஜயத்ரதவத பர்வம்; தொகுதி 5, பக். 290). ஆறு குரோசம் விலகியிருக்கச் சொல்கிறார். ஒரு கவ்யூதி என்பது இரண்டு குரோசம் என்றும் குறிப்பு கிடைக்கிறது. அப்படியானால் ஒரு குரோசத்தின் அளவுதான் என்ன?
கிஸாரி மோஹன் கங்கூலி ஒரு பெரிய உபகாரத்தைச் செய்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் சமஇடம் இது: Bharadwaja's son, O king, said these words unto Jayadratha. 'Thyself, Somadatta's son, the mighty car-warrior Karna, Aswatthaman, Salya, Vrishasena and Kripa, with a hundred thousand horse, sixty thousand cars, four and ten thousand elephants with rent temples, one and twenty thousand foot-soldiers clad in mail take up your station behind me at the distance of twelve miles. There the very gods with Vasava at their head will not be able to attack thee, what need be said, therefore, of the Pandavas?' Book 7, LXXXVII) At the distance of twelve miles!
அங்கேயிருக்கிறது சாவி! ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்; ஒரு கவ்யூதிக்கு இரண்டு குரோசம்; எனவே ஒரு கவ்யூதிக்கு நான்கு மைல் அல்லது சுமார் ஆறேமுக்கால் கிலோமீட்டர். இந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று கங்கூலியின் மொழிபெயர்ப்பில் எங்கெல்லாம் மைல் என்று வருகிறதோ அங்கெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்ததில் கணக்கு சரியே என்பது உறுதியானது. அப்படியானால், துரோணர் வகுத்த பாதி பத்ம, பாதி சக்ர வியூகத்தின் அளவு, 'ஐந்து கவ்யூதி அகலம், பன்னிரண்டு கவ்யூதி நீளம்' என்பதை எளிதில் இருபது மைல் அகலம்; நாற்பத்தெட்டு மைல் நீளம்' என்று கணக்கிட்டுவிடலாம்.
இதில் சஞ்சயன் பார்த்துச் சொல்லவேண்டியதில் பாதிதான். ஏனெனில் இங்கே நிற்பது கௌரவ சைனியம் மட்டுமே. இத்தோடு பாண்டவ சைனியம் நிற்கும் பரப்பையும் கணக்கில் கொள்ளுங்கள். ஒவ்வொரு தனித்தனிப் போரையும் சஞ்சயன் விவரித்திருக்கிறான் என்றால் அவனுடைய பார்வைக்கான அவசியம் புரிகிறதல்லவா? இதைத்தான் அந்த ஞானதிருஷ்டி என்பது குறிக்கிறது. இனி சூதர்களைப் பற்றிய விவரங்களுக்குத் திரும்புவோம். கர்ணனைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதை மறக்கவில்லை. சூதர்களை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, கர்ணனைத் தொடர்வோம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |