டொமேட்டிலோ பிட்லா
தேவையான பொருட்கள்
டொமேட்டிலோ - 10 காய்கள்
பாதாம்பருப்பு - 30 (அல்லது) தேங்காய் - 1/2 மூடி
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்ப் பழம் - 8
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை
பச்சை டோமேட்டிலோவை அலம்பி நான்கைந்து துண்டங்களாக நறுக்கவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகாயை வாணலியில் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். பாதாமுடன் இவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பாதாமுக்கு பதிலாகத் தேங்காய்த்துருவலைப் பயன்படுத்தலாம்.

நறுக்கிய டொமேட்டிலோவை பாத்திரத்தில் போட்டு வேகவைக்கவும். குக்கரில் வெந்தால் கூழாகி விடும். பாத்திரத்தில் தேவையான தண்ணீர், மஞ்சள்பொடி, உப்பு போட்டு வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும். பின்னர் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு இவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லி பொடியாக நறுக்கிப் போடவும். அறுமையான பிட்லா தயார். சப்பாத்தி, சாதம், தோசையுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

பார்வதி ராமன்,
கலபாசஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com