சூடாக உண்ண மாட்டேன்!
சென்ற கட்டுரையில் காமத்துப்பாலைக் குடும்பமும் சமுதாயமும் தயங்கி மறைக்காலாகாது என்று கண்டோம். இங்கே காமத்துப்பாலை இன்னும் அறியச் சில குறள்களைக் காண்போம்.

காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில் தலைவனும் தலைவியும் பேசுவதாகத்தான் இருக்கும். இது திருக்குறளின் அகப்பாடலுக்கு மட்டுமன்றி எல்லாச் சங்க இலக்கியங்களின் குறுந்தொகை, அகநானூறு போன்ற அகப் பாடல்களூக்கும் பொருந்தும்.

மேலும் இன்னொரு முக்கியமான ஒரு நுணுக்கம் என்னவென்றால் அகப்பாடல்களில் முக்கால் வாசிக்குமேல் தலைவியின் குரலாகத்தான் இருக்கும்; சிறுபான்மைதான் தலைவன் குரல். இது பெண்மைக்குத் தமிழிலக்கியத்தில் தொன்றுமுதல் இருந்துள்ள முதன்மையைக் காட்டுகிறது; அது மட்டுமன்றித் தமிழ்மரபு பெண்மையின் நுண்ணிய உணர்வுகளைப் புரிந்து மதித்துள்ள தையும் காட்டுகிறது. மேலும் தமிழ்ப்பெண்கள் இத்தைகைய குணமும் உணர்வும் உள்ளவர்கள் என்பதையும் தெரிவிக்கிறது.

அடுத்துச் சில குறள்களை ஆய்வோம்.

உறவா சினமா?

தலைவன் களவில் தலைவியைப் பார்க்க அடிக்கடி முயல்வதைத் தலைவியும் தோழியும் கடுமையாகப் பேசித் தவிர்ப்பதைக் கண்டு தலைவன் "என்ன இது உறவில்லாதவள் போல இவள் கடுமையாகப் பேசுகிறாளே!" என்று அவள் காதலை ஐயப்பட்டு ஆழ வருந்தவில்லை. ஏனெனில்:

உறாஅதவர் போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
(குறிப்பறிதல்: 1096)
[செறாஅர் = கோபித்தவர்; ஒல்லை = விரைவில்]

“உறவில்லாதவர்போலச் சொல்லினாலும் அந்தக் கடுஞ்சொல் உள்மனத்திலே கோபிக்காதவர் சொல் என்பது மற்ற வழிகளில் விரைவில் உணரப்படும்” என்னும் அன்பின் உண்மையை அவன் உணர்ந்தவன். இது காமத்தின் அன்புக்கு மட்டுமன்றி மற்ற குடும்ப நட்பு உறவுகளுக்கும் பொருந்துமென்பதை நாம் உணரவேண்டும்.

நெருங்கினால் குளிர்விக்கும் தீ!

தலைவியோடு கலந்துறவாடும் தலைவன் அவளை அணுகும் பொழுதும் நீங்கும் பொழுதும் நேரும் விந்தையைத் தெரிவிக்கிறான்:
நீங்கின் தெறூஉம்! குறுகுங்கால் தண்ணெனும்!
தீ யாண்டுப் பெற்றாள் இவள்?
(புணர்ச்சி மகிழ்தல்: 1104)
[தெறு = சுடு; குறுகு = அணுகு; தண் = குளிர்; யாண்டு = எங்கே]

“இவளை நீங்கினால் சுடும் நெருங்கினால் தண்ணென்று குளிரும், இத்தகைய தீயை எங்கே பெற்றாள் இவள்?” என்று வழக்கமான தீக்கு எதிர்மாறாக இருக்கும் காதல்தீயைப் பற்றி வியக்கிறான்.

அறிவு கூடக் கூட அறியாமை தெரிகிறது!

நாம் பலமுறை கேட்டிருப்போம்: அறிவு கூடுந்தோறும் ஒருவருக்குத் தம் அறியாமை இன்னும் பெரிதாகக் காணும், அதனால் ஆழ்ந்த அறிஞர்கள் மிகவும் அடக்கமுடன் இருப்பர் என்று. அதை நாம் கல்வி என்னும் பொருட்பால் அதிகாரத்தில் காண்பதில்லை. இங்கே காமத்துப் பாலில் காண்கிறோம்:

அறிதோறு அறியாமை கண்டற்றால், காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
(புணர்ச்சி மகிழ்தல்: 1110)

“மேன்மேலும் அறியுந்தோறும் ஒருவன் தன் அறியாமை கண்டதுபோல் இந்தச் செம்மையான நகையணிந்த பெண்ணிடம் கலக்குந்தோறும் காமம் இன்னும் காணாததுபோல் புதுமை மிகுகிறது!” என்று தலைவன் நினைக்கிறான்.

கண்ணுக்கு மையும் தீற்றமாட்டேன்!

தலைவியோ கண்ணுக்கு மைகூடத் தீற்றமாட்டாளாம், ஏன்? அவள் சொல்லும் காரணத்தைக் கேட்போம்:

கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து
(காதற்சிறப்புரைத்தல்: 1127)
[கரப்பாக்கு = கரத்தல், மறைதல்]

“எம் காதலவர் எம் கண்ணுக்குள் எந்நேரமும் இருப்பவர்; அவ்வாறாக மைதீற்றப் போனால் அந்த சமயத்தில் கண்ணிலிருந்து அவர் மறையவேண்டியிருக்குமே என்று அஞ்சி யாம் கண்ணுக்கு மை எழுதமாட்டோம்!”

சூடாக உண்ணமாட்டேன்!

அடுத்து அந்தத் தலைவி சூடான பண்டத்தையோ பானத்தையோ உண்ணமாட்டாளாம், காரணம்?

நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து
(காதற்சிறப்புரைத்தல்: 1128)
[வெய்து = வெப்பமானது; வேபாக்கு = வேதல்]

எம் காதலர் எப்பொழுதும் எம் நெஞ்சத்தில் இருப்பவர்; அவ்வாறிருக்கச் சூடானதை யாம் உண்டால் அது வயிற்றுக்கு இறங்கும்பொழுது நெஞ்சில் இருக்கும் அவரைச் சுட்டுவிடும் என்று அறிந்து சூடானதை உண்ண அஞ்சுகிறோம்!” என்கிறாள்!

இவ்வாறு திருக்குறளின் காமத்துப்பாலில் காணும் காதலும் கவிதை நயமும் ஈடு இணையற்றது என்று நாம் உணரலாம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்,
அட்லாண்டா

© TamilOnline.com