பத்மஸ்ரீ D.K. ஸ்ரீநிவாஸன்
2016ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் டி.கே. ஸ்ரீநிவாஸன். தாம்பரத்திலுள்ள ஹிந்து மிஷன் மருத்துவமனையில் அவரது அலுவலக வளாகத்திற்குள் நுழையும்போதே கைகூப்பி வணங்கி அங்கே அமர்ந்திருப்பவர்களிடம் அன்போடு "சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?" என்று மென்மையாக விசாரிக்கிறார். "தென்றல்" என்கிறோம். "வாருங்கள்" என்று தன் அறைக்கு அழைத்துச்செல்கிறார். அவர் புகழ்பெற்ற ஹிந்து மிஷன் மருத்துவமனையின் நிறுவனர், செயலாளர். வள்ளுவர் குருகுலம் பள்ளிகளின் செயலாளர், தாளாளர். இந்த 73 வயது இளைஞர் ஆஸ்தீக சமாஜம், ஒமேகா ஸ்கூல், ஸ்ரீ காயத்ரி ட்ரஸ்ட், திருநற்பணி ட்ரஸ்ட் உள்படப் பல சேவை அமைப்புகளின் புரவலர், ஆலோசகர், வழிகாட்டி. 'சேவாரத்னா', 'சம்ஸ்கார ரத்னா', 'நவ்ஜீவன் புரஸ்கார்', 'டாக்டர் கே.வி. திருவேங்கடம் விருது' உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவற்றுக்கெல்லாம் மகுடமாகத் தரப்பட்டுள்ளது இந்திய அரசின் 'பத்மஸ்ரீ'. தமிழகத்தில் சுனாமி பாதித்தபோது இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. வெயில் தகிக்கும் ஒரு காலை வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து....

*****


தென்றல்: சமூகசேவையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
டி.கே.எஸ்: நான் பிறந்தது காஞ்சிபுரத்தில் இருக்கும் தாமல் கிராமத்தில். ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சமளித்த திருப்புட்குழிக்குப் பக்கத்தில் இது உள்ளது. அப்பா செங்கல்பட்டில் பெரிய வக்கீல். டி.கே. வரதாச்சாரியார் என்றால் அந்தக் காலத்தில் எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கும் பார் அசோஷியேஷனில் அவரது படம் உள்ளது. செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்தபோதே எனக்கு சமூகசேவையில் ஈடுபாடு இருந்தது. அந்த வயது அதற்கு ஒரு முக்கிய காரணம். பிறகு விவேகானந்தா, லயோலா கல்லூரிகளில் படித்தேன். எம்.பி.ஏ. சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். சிலகாலம் தொழில் செய்தேன். பின்னர் 1965ல் தாம்பரத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வைத்தேன். அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை. 1974ல் தாம்பரத்திலிருக்கும் செல்வவிநாயகர் கோயிலில் சிவாலயம் அமைத்தார்கள். அதன் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டேன். அதுதான் ஆரம்பம். தொடர்ந்து கோயில் மற்றும் பொதுக்காரியங்கள், லயன்ஸ் க்ளப், சமூகசேவை என்று செய்துகொண்டு இருந்தேன்.



தென்றல்: ஹிந்து மிஷன் மருத்துவமனையைத் தொடங்கக் காரணமாக அமைந்தது எது?
டி.கே.எஸ்: 1976ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாம்பரத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் ஒரு ஸ்கூலில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நேரம். அவர் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அது என்ன என்று பெரியவர் விசாரித்தார். அங்கே வசிக்கும் ஏழை மக்களுக்காக 10 பைசா வாங்கிக் கொண்டு நடத்தப்படும் ஒரு ஆஸ்பத்திரி. டாக்டர். ஷர்மா என்பவருடன் இணைந்து அதை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் ஆஸ்பத்திரி அது. கையில் இருக்கும் மருந்துகள் தீரும்வரை நோயாளிகளுக்குக் கொடுப்போம். தீர்ந்துவிட்டால் தேவைப்படும் மருந்துகளை வாங்கிக்கொள்ளச் சொல்லி பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிடுவோம். அதற்கு வேறு பெயர் இருந்தாலும் 'பத்து பைசா ஆஸ்பத்திரி' என்ற பெயரில் அப்போது ரொம்பப் பிரபலம்.

ஒருநாள் பெரியவர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். நானும் டாக்டர். ஷர்மாவும் சென்றோம். "நாம வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஏழை, எளிய மக்களுக்காக நிறையத்தொண்டு செய்யவேண்டும். மருத்துவமும் கல்வியும்தான் இப்ப ரொம்ப முக்கியம். நீங்க இந்தமாதிரி ஞாயித்துக்கிழமை ஆஸ்பத்திரி நடத்தறது ரொம்ப சந்தோஷம். இதை எல்லாநாளும் நடத்தறதுக்கு என்ன செய்யணும்னு பாருங்கோ" என்றார். அது மிகுந்த உத்வேகத்தைத் தந்தது. இப்படிஅவர் குரோம்பேட்டை, நங்கநல்லூர் என்று போகுமிடத்திலெல்லாம் அங்குள்ள பொறுப்பானவர்களிடம் இதேமாதிரி விஷயங்களை வலியுறுத்தி வந்தார். பின்பு மைலாப்பூரில் தங்கியிருந்தபோது அதுவரை தான் சந்தித்த அத்தனை டாக்டர்களையும் கூப்பிட்டு அவர்களிடம் மீண்டும் அதே விஷயத்தை வலியுறுத்திச் சொன்னார். அப்படி உருவானதுதான் சங்கர நேத்ராலயா.

அதுபோலப் பல இடங்களில் பல மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன. தாம்பரத்தில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றை நாங்கள் தொடங்கினோம். அப்போது தாம்பரம் சின்ன ஊர். இந்தியாவிலேயே பெரிய லெப்ரஸி டாக்டர் ஷர்மா. அதனால் அதைத் தொடங்கினோம். 1988க்குள் தாம்பரத்தில் லெப்ரஸி மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது தமிழ்நாட்டில் லெப்ரஸி மிகவும் குறைந்துவிட்டதென்றால் அதில் டாக்டர் ஷர்மாவின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

பின்னர் அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டோம். பாபு ஜகஜீவன்ராம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அரை ஏக்கர் நிலம் கொடுத்தார். சிம்ப்ஸன் க்ரூப் சிவசைலம் 25000 ரூபாய் கொடுத்தார். அதில் கட்டப்பட்டு, 1982ல் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டதுதான் ஹிந்து மிஷன் மருத்துவமனை. இவ்வளவு பெரிதாக வளரும் என்று நாங்கள் கனவுகூடக் கண்டதில்லை. காரணம், ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு உதவவேண்டும் என்று மக்களுக்கு இருக்கும் தர்மசிந்தனை, டாக்டர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுதான். எல்லாவற்றிற்கும் மேலாக குரு கடாட்சத்தையும், இறைவனின் அருளையும் சொல்லவேண்டும்.

தென்றல்: மருத்துவமனையின் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
டி.கே.எஸ்: ரொம்பவே கஷ்டப்பட்டோம். இந்த இடத்தை டிஃபன்ஸ் கொடுத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய 65000 ரூபாயை எங்களால் வசூல் செய்யமுடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு நிதி திரட்டி, கடன் வாங்கித்தான் கொடுத்தோம். அப்போது ஆள்பலமும் இல்லை; பணபலமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் போய் பல இடங்களிலிருந்தும் நிதி திரட்டி முதல்தளத்தைக் கட்டிமுடித்தோம். பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதமரானபோது 1.75 ஏக்கர் நிலம் கிடைத்தது. அதில் கட்டடம் கட்ட ஆரம்பித்தோம். அவ்வப்போது பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருந்தன. எல்லாவற்றையும் சமாளித்துச் செயல்பட்டோம். இப்படிப் படிப்படியாக பல்வேறு காலகட்டங்களில் பலரது உழைப்பில், தர்மசிந்தனையில் தான் இதெல்லாம் உருவாகியிருக்கிறது. 35A/C, 123A/C பிரிவுகளில் வருமான வரிவிலக்கு கொடுத்து உதவியது மத்திய அரசு. பலரும் பலவிதங்களில் உதவியுள்ளார்கள். எங்கள் பணியாளர்களில் நிறைய கிறிஸ்துவர்கள்; சில இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். இங்கே மனிதநேயத்துக்கு, சேவைக்குத்தான் முக்கியத்துவம்.

தென்றல்: ஹிந்து மிஷன் செய்து வரும் மற்ற சேவைப்பணிகள் பற்றி...
டி.கே.எஸ்: நிறையச் செய்கிறோம். அவற்றில் ஒன்றுதான் 'பக்தஜன சேவா'. எங்கள் டாக்டர்கள், நர்ஸ்கள் கொண்ட ஒரு குழு தேவையான மருந்துகள், பணியாளர்களுடன் ஒரு வேனில் சுற்றுப்புற கிராமங்களுக்குச் செல்லும். எந்தநாள் எப்போது வரும் என்று மக்களுக்குத் தெரியும். மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெற்று மருந்துகள் வாங்கிச் செல்வர். தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகளைச் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரநாட்களில் டாக்டர்கள் குழு செல்லும். 1990ல் ஆரம்பித்த இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1982-90 காலத்தில் மருத்துவமனையின் உருவாக்கம், நிலைபெறச் செய்வதில் கவனம் செலுத்தினோம். அது முடிந்தவுடன் இந்த இலவசச் சேவையை ஆரம்பித்து நாள்தவறாமல் செய்து வருகிறோம். இதனை பக்தியுள்ள ஜனங்களுக்கு நாங்கள் செய்யும் சேவை என்றும் எடுத்துக்கொள்ளலாம். பக்தியோடு ஜனங்களுக்கு நாங்கள் செய்யும் சேவை என்றும் எடுத்துக் கொள்ளலாம். இங்கே முக்கியம் சேவை, ஜனங்கள், கடவுள் பக்தி.



அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தோறும் எங்கள் டாக்டர் குழு ஒரு கிராமத்திற்குச் செல்லும். எங்கள் பணியாளர்கள் இரண்டு, மூன்று நாட்கள் முன்னமேயே சம்பந்தப்பட்ட கிராமத்தில் வீடு வீடாகச் சென்று யாருக்கு என்ன மருத்துவசேவை தேவை என்பதைக் கேட்டறிந்து பட்டியல் தயாரித்து வைத்திருப்பார். அதன்படி 100, 150 பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு 'நாராயண சேவா' என்று பெயர். அதுபோல தேர்ந்தெடுத்த மக்களுக்கு கண்சிகிச்சை செய்ய ஆரம்பித்தோம். இரண்டு பேர், ஐந்து பேர் என்று ஆரம்பித்து வாரத்திற்கு 15-20 பேர் ஆகிவிட்டது. சுற்றியுள்ள ஏழைகள் பயன்படும்படி கண்சிகிச்சை முகாம்கள் நடத்துகிறோம். இந்தத் திட்டத்திற்கு 'கண்ணப்பர் இலவச கண்சிகிச்சைத் திட்டம்' என்று பெயர். மாதந்தோறும் 150 பேருக்கு மேல் இலவசமாகக் கண் அறுவை சிகிச்சையைக் கடந்த 20 வருடங்களாகச் செய்து வருகிறோம். நிறையப் பேருக்கு 'செயற்கைக் கை/கால்' இலவசமாகக் கொடுத்திருக்கிறோம். திருநெல்வேலி ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் இருந்தெல்லாம் பள்ளி விடுமுறைக் காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இங்கு வந்து தங்கி, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, சந்தோஷமாகத் திரும்பிப் போவார்கள். தவழ்ந்து வந்தவர்கள், நிமிர்ந்து நடந்து போவதைப் பார்க்கும்போது மனதுக்கு மிக நெகிழ்ச்சியாக இருக்கும்.

கடந்த சில வருடங்களாக காது கேட்காத, வாய் பேசமுடியாத சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சைகளைச் செய்கிறோம்; அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கிறோம்; அந்தக் குழந்தைகள் தானே சட்டை போட்டுக்கொள்வது, தானே போய்ச் சிறுநீர் கழித்து வருவது என்று தங்கள் வேலைகளைத் தாமே பார்த்துக்கொள்ளும் அளவுக்குப் பயிற்சி அளிக்கிறோம். தினமும் மாலை ஐந்து மணிக்கு இங்கே வந்தால் அத்தகைய குழந்தைகள் ஓடி, ஆடுவதைப் பார்க்கலாம். அவர்களைப் பராமரிக்கும் தாயார்களின் முகத்தில் புன்னகையையும் பார்க்கலாம்.

அதுபோல சிறுநீர் பிரிப்பு (டயாலிசிஸ்) செய்யும் நிலை வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் செலவாகும். நாங்கள் ஏழை நோயாளிகளுக்கு 200 ரூபாய்க்கு டயாலிசிஸ் செய்கிறோம். பத்தாண்டுகளாக இதைச் செய்து வருகிறோம். எங்களிடம் இருக்கும் 11 டயாலிசிஸ் யூனிட்கள் மூலம் தினமும் 30 பேர்வரைக்கும் டயாலிசிஸ் செய்கிறோம். சமீபத்தில் ஏற்பட்ட சென்னை பெருமழை வெள்ளத்தின்போது அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்து டயாலிசிஸ் யூனிட்கள் பழுதாகிவிட்டன. தெய்வத்தின் அருளால், நாங்கள் அந்தக் காலத்தில் கட்டிடங்களை உயர்த்திக் கட்டியிருக்கவே இங்கே தண்ணீர் உள்ளே வரவில்லை. அங்கிருந்த நோயாளிகள் பலர் இங்கே டயாலிசிஸ் செய்துகொண்டு சென்றனர்.

புற்றுநோய்க்குச் சிறிய அளவிலான சிகிச்சை மையம் ஒன்றும் இங்குள்ளது. 2010ல் எனக்கே கேன்சர் வந்துவிட்டது. ஆரம்பகட்டம் என்பதால் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமானேன். அப்போதுதான் இங்கும் கேன்சர் சிகிச்சை மையம் அமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. இதிலும் குறைந்த செலவில் சிகிச்சை தருகிறோம்.

தென்றல்: உங்கள் சிகிச்சை முறைகள் பற்றி...
டி.கே.எஸ்: எங்கள் மருத்துவமனையில் பணம் கொடுத்துச் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிந்தால் அப்படிச் செய்யலாம். வசதி இல்லாதவர்களுக்கு எது முடியவில்லையோ அதற்குச் சலுகையில் அல்லது இலவசமாகச் சிகிச்சை அளிக்கிறோம். முன்பெல்லாம் 25%, 30% நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்துவந்தோம். தற்போது தமிழக முதல்வரின் இலவசக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்கு எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது. நாங்கள்செலவழிக்கும் தொகையில் அரசிடமிருந்து 75% - 80% எங்களுக்குக் கிடைக்கும், கொஞ்சம் நஷ்டம்தான். ஆனால் நிறையபேருக்குச் சேவை செய்யமுடிவதில் ஒரு சந்தோஷம்.

ஆனால் இங்கே மருந்துகள் இலவசம் கிடையாது. எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதை இருப்பதில்லை. எல்லாம் இலவசமாக இருந்தபோது ஊசி போடவில்லை என்பதற்காக இலவசமாகக் கொடுத்த மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாக்கடையில் கொட்டுகிற ஆசாமிகளைப் பார்த்திருக்கிறேன். அன்றுமுதல் மருந்து, மாத்திரை இலவசமாகத் தருவதில்லை என்று முடிவுசெய்தோம். பணம் வாங்கிக்கொண்டு நாங்கள் சிகிச்சை செய்தாலும் தரம் நன்றாக இருப்பதால்தான் எங்களைத் தேடி வருகின்றனர். 80% பேர் பணம் கொடுத்துச் சிகிச்சை பெறுகிறார்கள். எஞ்சியவர்களுக்கு நாங்கள் இலவச சிகிச்சை செய்கிறோம்.

தென்றல்: உங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து...
டி.கே.எஸ்: அரசாங்க நிதி ஒதுக்கீடு எதுவும் எங்களுக்குக் கிடையாது. தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம், மாவட்டப் பார்வையிழப்புத் தடுப்புத் திட்டம் (District Blindness Control Scheme) ஆகிய உதவிகள் மட்டுமே அரசிடமிருந்து கிடைக்கும். மற்றபடி மருத்துவக்கருவிகள் வாங்க வரிவிலக்கு உண்டு. முதன்முதலில் மருத்துவமனைக்கு தென்னிந்தியாவில் வருமான வரியில் 35A/C விலக்கு வாங்கியது நாங்கள்தான் என்று சொல்கிறார்கள்.

இருப்பவர்களிடம் வாங்கிக்கொண்டு இல்லாதவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறோம். அதேசமயம் அந்த வருவாயைக் கொண்டு மருத்துவமனையை நடத்தியாக வேண்டும். அதைக் கௌரவமாகவே செய்து வருகிறோம். தர்மசிந்தனை உள்ளவர்கள் எங்களுக்கு உதவிவருகிறார்கள். யார் எவ்வளவு கொடுத்தார் என்பதிலிருந்து எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. எதிலும் ரகசியம் காப்பதில்லை; அது தேவையுமில்லை.



தென்றல்: வள்ளுவர் குருகுலத்தின் பின்புலம் என்ன?
டி.கே.எஸ்: 1939ல் நடந்த இரண்டாம் உலகப்போரை அடுத்து பர்மாவிலிருந்து பலர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களில் சிலர் பெற்றோர் தனியாக, குழந்தைகள் தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்படி அலைந்துகொண்டிருந்த தமிழ்க் குழந்தைகளைச் சிலர் ஒன்றுசேர்த்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை முத்துரங்க முதலியார் என்னும் காந்தியவாதி அழைத்து வந்தார். அந்தக் குழந்தைகளுக்காக 1940ல் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிதான் வள்ளுவர் குருகுலம். அதற்கு ஓ.வி. அளகேசன், பக்தவத்சலம், ராஜாராம் நாயுடு, பாலசுப்பிரமணியன் எனப் பலர் உறுதுணையாக இருந்தனர். 1985ல் பலரும் கேட்டுக்கொண்டதால் அதன் செயலராகப் பொறுப்பெற்றேன்.

தென்றல்: நீங்கள் செயலர் ஆனபின் பள்ளி என்ன முன்னேற்றம் கண்டது?
டி.கே.எஸ்: அந்தப் பள்ளியை அந்தக் காலத்தில் 'கொட்டாய் பள்ளிக்கூடம்' என்பார்கள். நான் பொறுப்பெற்ற பிறகு அதன் வளர்ச்சிக்கு முயற்சி எடுத்தேன். 1995ல் உயர்நிலைப்பள்ளி ஆக்கினோம். பின்னர் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆக்கினோம்; பின்னர் தனியாக மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றைத் தொடங்கினோம். துவக்கப்பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தோம். தற்போது மூன்று பள்ளிகளும் அங்கே இயங்கி வருகின்றன.

லேப், கம்ப்யூட்டர், கருவிகள் என்று எல்லாம் லேட்டஸ்ட் டெக்னாலஜியைக் கொண்டதாக அமைத்திருக்கிறோம். ஸ்மார்ட் க்ளாஸ் திட்டத்தில் அப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. தாம்பரம் பகுதியில் 3,000த்திற்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பெரும்பாலும் கீழ்நடுத்தட்டு மாணவர்கள். ஆனால் படிப்பில் மிக மிக கெட்டிக்காரர்கள். குறிப்பாக ஆட்டோ டிரைவர் மகள், பூவிற்பவரின் மகன், காய்கறிக் கடைக்காரரின் மகள், மளிகைக்கடைக்காரரின் மகன் போன்றவர்கள்தாம் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று சாதனை படைக்கின்றனர்.

அதாவது முதல் தலைமுறைக் குழந்தைகளை நாங்கள் அந்த அளவுக்குப் படிக்க வைக்கிறோம். அவர்கள் மேற்படிப்பிற்கும் வங்கி நிதியுதவி பெற்றுத் தருகிறோம். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்று எல்லாரும் இணைந்து கற்கும் பள்ளி எங்களுடையது. எங்கள் வளர்ச்சிக்குக் காரணம் எமது ஆசிரியர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் சொல்லித்தரும் கல்வியால் மாணவர்கள் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றனர். 95%க்குக் குறையாமல் தேர்ச்சி பெறுகின்றனர். 1940ல் ஆரம்பித்த அந்தப்பள்ளிக்கு 2015ல் பிளாட்டினம் ஜூபிலி. ஆனால் சென்னை பெருமழை வெள்ளப் பாதிப்பால் அதைக் கொண்டாட இயலவில்லை. 2016-17 கல்வியாண்டில் பள்ளிகள் திறந்த பின்னர் அதனைச் சிறப்பாகக் கொண்டாட உத்தேசித்திருக்கிறோம். (வள்ளுவர் குருகுலம் பள்ளி பற்றி விரிவாக அறியவும், நிதி அளிக்கவும் பார்க்க: gurukulammatricschool.com)

தென்றல்: உங்கள் குடும்பம்பற்றிச் சில வார்த்தைகள்...
டி.கே.எஸ்: எனது மனைவி ஹேமா ஸ்ரீநிவாஸன். அவரும் வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். எனக்கு இரண்டு மகன்கள். பெரியவர் டி.கே. ஹரி, ரிசர்ச் ஸ்காலர். இரண்டாவது மகன் டாக்டர் டி.கே. ஸ்ரீராம். 17 வருடங்கள் இங்கிலாந்தில் பணியாற்றிவிட்டு தற்போது நான்கு வருடங்களாக ஹிந்து மிஷன் மருத்துவமனையின் மெடிகல் டைரக்டராக இருக்கிறார். டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ சிகிச்சை போன்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறார். நிதி, நிர்வாகம், கணக்கு, வழக்குகள், மக்கள்நலம் போன்றவற்றை மாத்ருபூதம் (ரிடயர்டு ஐ.ஏ.எஸ்.) பார்த்துக் கொள்கிறார். நிதி திரட்டுதல், கார்டனிங், போக்குவரத்து போன்ற மற்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் என் முதல்மகன் டி.கே. ஹரி மிகவும் உதவியாக இருந்து நிர்வகிக்கிறார்.

தென்றல்: உங்களுடைய பிற ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் பற்றி...
டி.கே.எஸ்: ஆர்வம், பொழுதுபோக்கு எல்லாமே சேவைப்பணிதான். நேரம் இருந்தால் மாலையில் தொலைக்காட்சி பார்ப்பேன். சினிமா பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிறது. செஸ் விளையாட்டில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. அது பாரதம் உலகுக்கு அளித்த கொடை. சதுரங்கம்தான் இன்றைக்கு 'செஸ்' என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் செஸ் அசோசியேஷன் தலைவராக இரண்டு வருடமாகப் பணியாற்றி வருகிறேன். எல்லாப் பள்ளிகளிலும் செஸ்விளையாடப்பட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினேன். இன்று அது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோல எல்லாப் பூங்காங்களிலும் வெளிநாடுகளில் உள்ளதுபோல் செஸ் விளையாடும் மேடை அமைக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். எங்கள் பராமரிப்பில் தாம்பரத்திலுள்ள பூங்காவில் அதனை அமைத்திருக்கிறேன்.

"சமூகசேவைக்கு முடிவே கிடையாது. அது வளர்ந்துகொண்டே செல்லும். அவன் அருள்படிதான் எல்லாம் நடக்கிறது" புன்சிரிப்புடன் சொல்லி முடிக்கிறார் டி.கே. ஸ்ரீநிவாஸன். அரிய மனிதர் ஒருவரைச் சந்தித்த நிறைவில் இருகரம் கூப்பி நன்றிசொல்லி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


ஹிந்து மிஷன் மருத்துவமனை
கார்டியாலஜி, டெர்மடாலஜி தொடங்கி யூராலஜி, கேஸ்ட்ரோ என்டராலஜி வரை கிட்டத்தட்ட 30 துறைகள். 220 படுக்கைகள், 9 ஆபரேஷன் தியேட்டர்கள், 95க்கும் மேல் டாக்டர்கள், 450க்கும் மேல் மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ்கள், 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவு என்று ராப்பகலாகச் சேவை ஆற்றிவருகிறது ஹிந்து மிஷன் மருத்துவமனை. டிசம்பர் 5, 1982ல் துவங்கப்பட்ட இம்மருத்துவமனை இன்றைக்கு டயாலிசிஸ், கீமோதெரபி, ஸ்பைனல் சர்ஜரி யூனிட், ரேடியாலஜி, ஆர்த்தோ, நியூரோ சிகிச்சைகளுக்கான நவீன சிறப்பு உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகள் என்று நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறது. ஸ்பீச் தெரபி, ஜிம் என்று பல வசதிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தினமும் வெளிநோயாளிகளாக 500 பேரும், உள்நோயாளிகளாக நூற்றுக்கு மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். மாணவர்களுக்கு நர்ஸிங் பயிற்சி அளித்து டிப்ளமா/டிகிரி வழங்குவதுடன் வேலைவாய்ப்பும் அளிக்கிறது. அமெரிக்காவில் நிதி வழங்குவோருக்கு வரிவிலக்கு உண்டு.

விவரங்களுக்கு: hindumissionhospital.in

*****


பிறந்தவீட்டு நினைவு
1989, 90 என்று நினைக்கிறேன். சனிக்கிழமை கண் அறுவை சிகிச்சை என்றால் வெள்ளிக்கிழமையே நோயாளிகளை அனுமதித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவிடுவோம். டாக்டர் கோபால்சாமிதான் அப்போது செய்துவந்தார். பக்கத்து கிராமத்திலிருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் வந்திருந்தனர். அவர்களுக்கான சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அனுப்பும்போது அவர்களுக்கு கண்களைப் பாதுகாப்புக் குறித்த அறிவுரைகளைச் சொல்வோம். சிகிச்சை, கவனிப்பு எல்லாம் திருப்தியாக இருந்ததா என்று கேட்போம். அன்று கேட்டபோது 80, 85 வயதான ஒரு பெண்மணி, "நான் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து கண் ஆபரேஷன் பண்ணிக்கிட்டு வீட்டுக்குப் போறேன். எனக்கு பிறந்த வீட்டுக்கு வந்து தங்கி ஆபரேஷன் பண்ணிக்கிட்டு போறமாதிரி ரொம்ப திருப்தியா இருக்கு" என்று சொன்னார்.

நான் அதற்கு, "பாட்டிம்மா, 85 வயது ஆச்சு. இன்னும் உனக்குப் பொறந்த வீட்டு ஞாபகம் போகலையா?" என்று கேட்டேன். "அப்படி இல்லங்க. இங்க வந்தததுக்கப்புறம் கிடைச்ச திருப்தியும், சந்தோஷமும் எனக்குப் பொறந்த வீட்டு ஞாபகத்தைத் தந்திரிச்சு" என்றார். இதைவிடச் சிறந்த பாராட்டு என்ன இருக்க முடியும்?

டி.கே. ஸ்ரீநிவாஸன்

*****


எல்லாம் கடவுள் செயல்
நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். எதிரே வந்தவர் வணக்கம் சொல்லிவிட்டு, "எங்க பக்கத்து வீட்டுக்காரர் உயிரைக் காப்பாத்தி மறுபிறவி கொடுத்திட்டீங்க சார்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவரையே பார்த்ததில்லை. பின் அவர் பக்கத்து வீட்டுக்காரரை எப்படித் தெரியும்? "எனக்கு ஒண்ணும் புரியலையே சார்" என்றேன்.

அதற்கு அவர், "அன்றைக்கு என் பக்கத்து வீட்டுக்காரருக்கு டயாலிசிஸ் செய்யவேண்டிய நாள். அன்று செய்யாவிட்டால் பிழைப்பது ரொம்பக் கஷ்டம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். எல்லா ஆஸ்பிடலிலும் தண்ணீர் புகுந்துடுச்சி, யூனிட் வேலை செய்யலைன்னு சொன்னாங்க. தெய்வம்போல உங்கள் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து அவர் உயிர்பிழைத்தார். அவருக்கு மறுபிறவி இது" என்றார்.

"எல்லாம் கடவுள் செயல்" என்றேன் அவரிடம்.

டி.கே. ஸ்ரீநிவாஸன்

*****


இறைவனுக்கொரு மலர்வனம்
காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் ஒரு நந்தவனம் அமைத்திருக்கிறேன். பெருமாளுக்கு புஷ்பமாலைகள் சாற்றவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே எனக்கு ஆவல் இருந்தது. அது வேதாந்தராமன் என்ற நண்பர்மூலம் சாத்தியமானது. இன்றைக்கு அவரது மகன் நாராயணன் அதை நிர்வகிக்கிறார். அந்தப் பூக்களைக் கொண்டு விதவிதமான புஷ்பமாலைகள் பெருமாளுக்கும், தாயாருக்கும் சாற்றப்படுகிறது. 33 விதமான பூச்செடிகள், மரங்கள் அந்த நந்தவனத்தில் உள்ளன. 2000த்துக்கு மேலான செடிகள் அங்கே உள்ளன. 365 நாளும், நான்கு வேளையும் அந்தப் பூக்களிலிருந்து தொடுக்கப்பட்டு பெருமாளுக்கு மாலை சாற்றப்படுகிறது. இதில் எனக்கு ஒரு மனத்திருப்தி, ஆனந்தம். அதுபோல தாம்பரத்தில் பூங்கா அமைக்கப்பட்டபோது அதை என்.ஜி.ஓ.தான் நடத்தவேண்டும் என்று சட்டம் போட்டுவிட்டார்கள். நான் அதற்குப் பொறுப்பேற்று, நடைபாதைகள் அமைத்து, வயதானவர்கள் ஓய்வெடுக்க, வெளிநாடுகளில் இருப்பதுபோல் செஸ் மேடைகள் அமைத்து, குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் என்று எல்லாத் தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் அமைத்திருக்கிறோம். மூன்று வாட்ச்மேன், இரண்டு தோட்டக்காரர்கள் போட்டு மாதம் ரூபாய் 50000க்கு மேல் அதன் பராமரிப்புக்காகச் செலவழிக்கிறோம். ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் அங்கு வந்து செல்கின்றனர். இதுவும் சமூக சேவைதானே.

டி.கே. ஸ்ரீநிவாஸன்

*****


தூய்மையான சுடுகாடு
மற்ற மக்களுடைய க்ரிமடோரியங்கள் சுத்தமாக இருக்கும்போது, ஹிந்துக்களின் க்ரிமடோரியம் மட்டும் சுத்தமாக இல்லையே என்று நான் வருத்தப்பட்டதுண்டு. ஒருமுறை முனிசிபல் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் வந்து என்னிடம் க்ரிமடோரிய நிர்வாகத்தை ஏற்குமாறு கேட்டுக்கொண்டனர். மருத்துவமனையையும் செய்துகொண்டு இதையும் செய்தால் நன்றாக இருக்காதே என்று நினைத்தேன். பிறகு ட்ரஸ்ட் ஒன்று அமைத்து நண்பர்களுடன் இணைந்து அதைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது அது சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. குரோம்பேட்டையில் இறுதிச் சடங்குகள் மற்றும் கர்ம காரியங்களுக்கு உதவும் காயத்ரி ட்ரஸ்ட்டை எனது நண்பர் ராகவன் நடத்தி வருகிறார். அவருக்கு நாங்கள் கூட இருக்கிறோம் என்பது பலம். எல்லாவற்றையும் நானே செய்கிறேன் என்பதில்லை. குழு உறுப்பினராக இருந்து பணியாற்றுகிறேன். இது ஒரு டீம் வொர்க். பத்மஸ்ரீ விருது பெற்றபோதுகூட "I dedicate the award to my family, doctors and staff of the Hospital" என்று சொன்னேன். எல்லாமே டீம்வொர்க்தான்.

டி.கே. ஸ்ரீநிவாஸன்

© TamilOnline.com