வாஷிங்டனின் 7வது காங்கிரஷனல் மாவட்டத்துக்கு டெமாக்ரடிக் வேட்பாளராக நிற்கும் பிரமீளா ஜெயபால், சென்னையில் பிறந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர். அமெரிக்காவின் ஜார்ஜ்டௌன் பல்கலை (B.A.). கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், நார்த்வெஸ்டர்ன் பல்கலை (M.B.A.) ஆகியவற்றில் பயின்றபின் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் பணிசெய்தவர். பின்னர் சமூகப்பணிச் செயல்வீரராக உருமாறி, சியாட்டிலில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டார். 9/11 தாக்குதலுக்குப் பின்னர் Hate Free Zone என்ற அமைப்பைத் தொடங்கினார். அதுவே பின்னர் OneAmerica ஆனது. 2012ல் இவரை Champion of Change கௌரவத்துக்கு வெள்ளை மாளிகை தேர்ந்தெடுத்தது. வாஷிங்டன் மாநில செனட்டில் 37வது சட்டமியற்றும் மாவட்டத்தின் பிரதிநிதியாக ஜனவரி 2015லிருந்து பணியாற்றி வருகிறார். Pilgrimage to India: A Woman Revisits Her Homeland என்பது இவரெழுதிய நூல். வாருங்கள், அவரது செயல்பாடுகளின் உந்துசக்தியாக இருக்கும் எண்ணங்களை அறியலாம்....
*****
தென்றல்: உங்கள் இளமைக் காலத்தைப்பற்றிச் சொல்லுங்கள்... பிரமீளா: நான் பிறந்தது சென்னையில். என் தாத்தா பாலகிருஷ்ண மேனன், பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னையில் போலீஸ்துறை தலைமை அதிகாரியாக (Chief of Police) இருந்தார். அவர் வீடு அண்ணாநகரில் இருந்தது. இளவயதில் அங்கு அடிக்கடி சென்றது நினைவிருக்கிறது. எனக்கு ஐந்து வயதாகும்வரை இந்தியாவில் இருந்தோம். மும்பை, பங்களூரு எனப் பல இடங்களில் இருந்தோம். பிறகு பெற்றோர் இந்தோனேஷியாவுக்கு இடம்மாறினர். அதனால் மழலையர் கல்விமுதல் 12ம் வகுப்புவரை பெரும்பாலும் அங்கே படித்தேன். நடுவில் இரண்டு வருடம் சிங்கப்பூரில். இந்தோனேஷியாவில் பள்ளிப்படிப்பு முடிந்து, 16வது வயதில் அமெரிக்கா வந்தேன்.
அம்மாவும் அப்பாவும் தங்கள் மொத்தச் சேமிப்பான 5000 அமெரிக்க டாலரையும் என்னை இங்கு படிக்க அனுப்பச் செலவழித்தனர். இங்குதான் எனக்கு நல்ல கல்வி கிடைக்கும் என நம்பினர். அந்த வயதில் அவர்கள் எனக்குச் செய்ததைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. என் மகனின் 16வது வயதில் அவனைக் கடல்தாண்டி அனுப்பும்போதுதான் அவர்கள் செய்த தியாகம் எனக்குப் புரிந்தது.
தென்றல்: உண்மைதான். உங்கள் பெற்றோர்பற்றிச் சொல்லுங்கள். பிரமீளா: அப்பா Esso எண்ணெய் நிறுவனத்தில் மெக்கானிகல் எஞ்சினியர். அது அப்போது அரசுடமை ஆகவில்லை. மிகக்குறைந்த இந்தியர்களே அதில் இருந்தனர். இது 1969ல்.
தென்றல்: அமெரிக்காவுக்கு வந்து பட்டம் பெற்று, MBA படித்தபின் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலைசெய்திருக்கலாம். நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கென ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம், அதைவிட்டுவிட்டு ஏன் அரசியலில் ஈடுபட்டீர்கள்? பிரமீளா: இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வளரும்போது நம்மைச் சுற்றியிருக்கும் வறுமையைக் கவனிக்காமல் இருக்கமுடியாது. நான் எப்போதும் என்னால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் சமுதாயத்திற்குச் செய்ய முயற்சித்தேன். வெளிநாட்டுக்குப் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும் எல்லா இந்திய அப்பாக்களும், தங்கள் பிள்ளைகள் மருத்துவம், சட்டம் அல்லது தொழில்துறை ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க அனுமதிப்பார்கள். என் அப்பாவும் இத்துறைகள்தான் எனக்கு பொருளாதாரப் பாதுகாப்பு கொடுக்கும் என நினைத்தார்.
பொருளாதாரத்தில் பட்டம் பெறும் நோக்கத்துடன்தான் இங்கு வந்தேன். ஆனால். எனது முதலாண்டில் எனக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே தொலைபேசி அழைப்பை நான் ஆங்கில இலக்கியத்தில் பட்டம்பெற விரும்பும் செய்தியைச் சொல்லத்தான் உபயோகித்தேன். பின்பு என்ன நடந்தது என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். நான் தொலைபேசியை என் காதிலிருந்து அதிகம் தள்ளிப்பிடிக்க வேண்டியிருந்தது (சிரிக்கிறார்). அப்பா 'நான் உன்னை ஆங்கிலம் படிக்க அமெரிக்காவுக்கு அனுப்பவில்லை' என்று கத்தினார். நான் பொருளாதாரம் படித்தால் என்ன வேலை கிடைக்குமோ அதே வேலையை ஆங்கில இலக்கியம் படித்தாலும் தேடிக்கொள்வேன் என உறுதிகூறினேன்.
நான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம். நிறையக் கற்றுக்கொண்டேன். வேலையும் பிடித்திருந்தது. ஆனால் சில நாட்களில் ஏனோ உற்சாகம் குறைந்துபோனது. அதனால் MBA படிக்கப்போனேன். முதலாண்டின் இறுதியில் எனக்குத் தாய்லாந்தின் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. லாவோஸ், கம்போடியா எல்லைப்பகுதிகளில் எனது பணி. அங்கு அகதிகள் முகாமில் வேலை செய்ததோடு, கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆய்வுசெய்தேன். உருப்படியான காரியம் செய்கிறோம் என்ற மனநிறைவு அங்கு கிடைத்தது.
படித்து முடித்ததும் உயிர்காக்கும் மருத்துவக்கருவிகள் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒன்றரை வருடத்துக்குப் பிறகு, அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. 1991ல் தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு சியாட்டிலுக்குக் குடிபெயர்ந்தேன். அங்கு சமூக நீதித்துறையில் என் பணிவாழ்க்கையைத் துவக்கினேன்.
முதலில் Program for Appropriate Technology & Health (PATH) அமைப்பில் வேலை செய்தேன். உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் திட்டம் அவர்களுடையது. சமூக அக்கறையுள்ள உடல்நலத் திட்டங்களுக்குக் கடன்தரும் பொறுப்பில் நான் இருந்தேன். எவருமே கடன்கொடுக்க முன்வராத திட்டங்களுக்குக் கடனுதவி வழங்கினோம். கிட்டத்தட்ட 6 மில்லியன் டாலர் என் பொறுப்பில் இருந்தது. காம்பியாவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டம், இந்தோனேஷியாவில் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம், மெக்சிகோவில் பெண்களுக்குக் கருத்தடை ஊசி எளிதில் கிடைக்கச்செய்யும் திட்டம் எனப் பல அருமையான திட்டங்களுக்குக் உதவினோம். யாருமே கடன்கொடுக்க மறுத்த திட்டங்கள் இவை. ஆனால் 98% கடன்களை திருப்பி அடைத்துவிட்டனர் என்பதுதான் இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம். இதுதான் லாபநோக்கற்ற துறையில் எனது முதல் முழுநேர வேலை. நான்கு வருடம் அங்கு வேலை செய்தேன். இந்தியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளில் வேலை செய்தேன். அப்போதுதான் எனக்கு இந்தியாவுக்குத் திரும்பவேண்டும் என்ற ஆசை வந்தது.
இந்தியாவின் கிராமங்களில் இரண்டு வருடங்கள் வாழ விரும்பினேன். அப்போது எனக்கு இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் வாழ The Institute of Current World Affairs உதவித்தொகை கொடுத்தது. கேரளத்தில் ஒரு மாதம் இருந்தேன். மீதிக்காலம் பெறும்பாலும் வடஇந்தியாவில் வசித்தேன்.
தென்றல்: சிறு தொழில்களுக்குக் கடன் வழங்கும் 'மைக்ரோஃபினான்ஸிங்' இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் நீங்கள் இதை சமூகத் திட்டங்களுக்காக 1991ம் ஆண்டே செய்துள்ளீர்கள், இல்லையா? பிரமீளா: ஆமாம். கவனித்துவிட்டீர்களே! இதைப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும், ஏனென்றால் பொதுவாக இதை யாரும் உணர்வதில்லை. 1991ல் எவரும் குறுநிதி வழங்கவில்லை. நாங்கள் செய்தது அபூர்வமானது என்றே சொல்லவேண்டும். Friends of Woman's World Banking அமைப்புடன் சேர்ந்து இந்தியாவில் ஓர் ஆச்சரியமான திட்டத்தைச் செயல்படுத்தினோம். விஜி தாஸ் என்ற தமிழர் அதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். நாங்கள் இணைந்து 'மகளிர் கடனுதவித் திட்டங்கள்' மூலம் பொதுசுகாதாரத்தை மேம்படுத்த முயற்சித்தோம். அது நல்ல வெற்றி பெற்றது. பல அமெரிக்க அமைப்புகள் நிதி உதவின.
தென்றல்: அருமை. இந்த அனுபவம் உங்களைப் புத்தகம் எழுதத் தூண்டியது, அல்லவா? பிரமீளா: ஆமாம். இந்தியாவிலிருந்து திரும்பியவுடன் புத்தகம் எழுதினேன். உண்மையில் எனது ஆய்வின் ஒரு பகுதியாக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருந்தேன். புத்தகத்தின் 50 சதவீதம் எனது ஆய்வுக்காக எழுதிய கட்டுரைகள். மீதம் புதிதாக எழுதியவை. 'Pilgrimage to India: A Woman Revisits Her Homeland' என்ற இந்தப் புத்தகம் 2000மாவது ஆண்டில் வெளிவந்தது.
தென்றல்: சரி. இந்தப் பயணத்தில் நீங்கள் கற்று கொண்ட வாழ்க்கைப் பாடம் என்ன? பிரமீளா: என்னில் அதிக மாற்றத்தை ஏற்படுத்திய அனுபவங்களில் இது ஒன்று. நான் தனியாக இந்தியாவில் வசித்தது அதுவே முதல்முறை. நான் எல்லா இடங்களுக்கும் பஸ்ஸில் போகிறேன், வட இந்தியாவில் வசிக்கப்போகிறேன் என்பதுபோன்ற விஷயங்கள் என் பெற்றோருக்குப் பெரிய அதிர்ச்சியை அளித்தன. நான் வறுமைமிக்க இடங்களில், கிராமங்களில் வசிக்க விரும்பினேன். களத்தில் என்ன நடக்கிறது என்று நேரடியாக அறிய விரும்பினேன்.
அங்கு சுகந்தகுமாரி போன்ற சமூக ஆர்வலர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கை அழிவிலிருந்து காத்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. வன்முறைக்கு ஆளான பெண்களுக்காக நிறையப் பாடுபட்டவர் அவர். வடஇந்தியாவில், நிறையப் பெண்களுடன் சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் கிராமங்களில் கிணறுகள் அமைப்பது, கல்வியை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளைச் செய்த ஆர்வலர்கள். குறைந்த நிதியில் பல சிரமங்களுக்கிடையே இவர்கள் தைரியமாக, பொறுமையுடன் செயல்பட்டனர். முன்னேற்றத்தைப்பற்றி நிறையத் தெரிந்து கொண்டதோடு, எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை அறிந்ததோடு, என் பிறந்தமண்ணைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன். இந்தியாவுடன் எனது தொடர்பு நெருக்கமாகிவிட்டது. நான் தென்னிந்திய மொழிகளைவிட ஹிந்தி நன்றாகப் பேசுவேன். இதில் என் அம்மாவுக்கு வருத்தம். நான் மலையாளம் நன்கு பேசினால் அவர் சந்தோஷப்பட்டிருப்பார். எனக்கு மலையாளம் புரியும். கொஞ்சம் தமிழும் புரியும். ஆனால்இவற்றைவிட ஹிந்தி நன்றாகப் பேசுவேன். என் அம்மா என்னை தென்னிந்தியாவின் துரோகி என்பார். (சிரிப்பு)
தென்றல்: மிகவும் சுவாரசியமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை உங்களது கனவுகளைப் பின்தொடர எவ்வாறு தைரியம் அளித்தது என்பதைச் சொல்லுங்கள்? பிரமீளா: 1990ல் திருமணத்திற்குப் பிறகு எனக்கு கிரீன்கார்டு கிடைத்தது. பின் இந்தியா சென்றேன். அங்கிருந்தபோது கர்ப்பமானேன். பிரசவத்திற்கு இங்கு திரும்பிவர முடிவு செய்திருந்தேன். எப்படியும் கிரீன்கார்டில் இருக்கும்போது வருடம் ஒருமுறை இங்கு கண்டிப்பாக வரவேண்டுமே. ஆனால் என் மகன் 26 1/2 வாரத்திலேயே பிறந்து விட்டான். எடை ஒரு பவுண்டு 14 அவுன்ஸ்தான். மருத்துவரீதியில் உயிர்பிழைத்திருக்கும் சாத்தியக்கூறுகளே இல்லை எனலாம். மும்பை, தில்லி இரு இடங்களில் மட்டும்தான் அவ்வளவு குறைந்த எடையுள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் NICU வசதி உண்டு.
அதனால் மும்பையில் என் பிரசவம் நடந்தது. மனவேதனை மிகுந்த காலம் அது. முதல் மூன்று மாதங்கள் அவன் பிழைப்பானா மாட்டானா என்றுகூடத் தெரியவில்லை. எனக்கு அங்கு அவனைத் தனியாக விட்டுவிட்டு விசாவுக்காக இங்குவர விருப்பமில்லை. அதனால் அங்கேயே தங்கினேன். என் கிரீன்கார்டு பறிபோனது. இங்கு திரும்பிவர முடியவில்லை. எப்படியோ பலரின் உதவியோடுதான் நான் அமெரிக்கா திரும்பமுடிந்தது. என் மகனின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. மூளையில் நீர் இருந்தது. பல பிரச்சனைகள். உயிர்பிழைப்பான் என்று தெரியும். ஆனால் நோயின் தீவிரம் என்ன என்பது தெரியவில்லை.
நான் இங்கு வந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தேன். ஆனால் நான் இதுவரை அமெரிக்காவில் வசித்தகாலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற புரிதலில்தான் அமெரிக்கா திரும்பிவர அனுமதிக்கப்பட்டிருந்தேன். எல்லாவற்றையுமே ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஓர் அமெரிக்கப் பிரஜையின் மனைவியாக இருந்த காரணத்தால் குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டு காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக 2000 ஆண்டில் குடியுரிமை கிடைத்தது.
அப்போதுதான் 9/11 நடந்தது. இந்தியக் குடியுரிமையைத் துறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்த நேரம். அமெரிக்க அரசு சீக்கியர்கள், முஸ்லீம்கள், தெற்காசியர்கள், அமெரிக்கர்கள் என எல்லோரையும் குறிவைப்பதைப் பார்த்தேன். ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்படித்தான் 'Hate Free Zone' தொடங்கியது. பின்னர் 'OneAmerica' ஆனது. நான் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய 12 வருட காலத்தில் குடிவந்தோருக்காக வாதாடும் அமைப்புகளில் இதுவொரு மிக முக்கியமான அமைப்பாக வளர்ந்தது.
தென்றல்: மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இந்தோனேஷிய நாட்கள் முதலே இருந்தது, இல்லையா? பிரமீளா: ஏதாவது தொழில் தொடங்குவேன் என்றுதான் நினைத்திருந்தேன். குழந்தைப்பருவத்தில் என்னுடைய திட்டங்களுக்கு எல்லோரிடமும் பணஉதவி கேட்பேனாம். அதனால் எல்லோரும் வருங்காலத்தில் பெரிய வியாபாரி ஆவேன் என்று கேலி செய்வார்கள். ஆனால் வால்ஸ்ட்ரீட்டில் வேலை செய்யும்போது என நினைக்கிறேன், ஏதாவது செய்யவேண்டும் என எண்ணம் வந்தது. சுற்றிலும் வறுமையைப் பார்த்தேன். ஏதாவது பயனுள்ளதை வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது அப்போதுதான். என் பணியும், செயலார்வமும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது.
தென்றல்: அருமையாகச் சொன்னீர்கள். நீங்கள் உங்களையே அறிந்துகொண்டு, அந்த வழியில் செல்ல, ஏதாவதொரு உரையாடலோ, அனுபவமோ காரணமாக இருந்ததுண்டா? பிரமீளா: தாய்லாந்தில் வசித்த நாட்கள் மிக, மிக முக்கியம் என நினைக்கிறேன். பிறகு கல்லூரியில் படிக்கும்போது மேரி ஹோல்டன் என்ற பெண்மணியைச் சந்தித்தேன். அவர் Salford வங்கியின் தலைவர். அது இந்தியாவின் 'கிராமீன வங்கி' போன்றது. அர்க்கன்சாஸில் 'Good Faith Fund' என்பார்கள். ஹிலரி க்ளிண்டன் அதன் நிர்வாகக்குழுவில் ஒருசமயம் அங்கம் வகித்தார். ஆனால் மேரி சிகாகோவின் தென்பகுதியில், பொருளாதாரத்தில் மிகத்தாழ்ந்தவர்கள் வசித்த பகுதியில் இயங்கிவந்தார். வியாபாரத் திறமையை வித்தியாசமாகப் பயன்படுத்த முடியும் என்று முதன்முதலில் எனக்கு உணர்த்தியவர் அவர்தான். சௌத்சிகாகோவில் மேரி அறிமுகப்படுத்திய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்தாம் தூண்டுகோல் என நினைக்கிறேன்.
தென்றல்: 'Hate Free Zone' அமைப்பை ஆரம்பித்த காலகட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். 9/11 நிகழ்ந்த சிறிது காலத்திலேயே இதைத் தொடங்கினீர்கள் இல்லையா? பிரமீளா: ஆமாம். இதுவோர் அமைப்பாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. 9/11 ஒரு செவ்வாயன்று நிகழ்ந்தது. அவ்வாரம் முழுவதும் எனக்கு பலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. சீக்கியர்கள் அவர்களது தலைப்பாகைக்காகத் தாக்கப்பட்டனர். இஸ்லாமியப் பெண்களின் பர்தாக்கள் கிழிக்கப்பட்டன. மதத்தின் காரணமாக இவர்கள் தாக்கப்பட்டனர். எனக்கு இது தவறு எனத் தோன்றியது. அப்போது எனக்கு காங்கிரஸ்மேன் மெக்டர்மாட்டைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து. அவர் காலிசெய்த இடத்திற்குத்தான் நான் இப்போது போட்டியிடுகிறேன். அவரிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா பெரிய அதிகாரிகளுடனும் இணைந்து பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்த ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். கவர்னரையும் அழைக்க விரும்பினோம். வெறுப்புக்கு எதிராகக் குரல்கொடுத்து வாஷிங்டனை வெறுப்பற்ற மாநிலமாக அறிவிப்பது எங்கள் நோக்கம். அவர் எனக்கு இதில் மிகவும் உதவினார்.
பின்னர் தனிநபர்களுக்கு எதிராக மட்டுமல்ல அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகவும் நாங்கள் போராடவேண்டும் எனப் புரிந்தது. ஏனென்றால், அரசாங்கம் ஒரு சில மத/இனத்தைச் சார்ந்தவர்களை கைதுசெய்து, நாடுகடத்தத் தொடங்கியது. எங்கள் அமைப்பு, பல மக்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் பங்கு கொள்ளும் பெரிய முயற்சியாக உருவெடுத்தது. எல்லோரும் ஜார்ஜ் புஷ், ஜான் ஆஷ்க்ராஃப்ட், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றை எதிர்த்தவர்கள். 4000 சோமாலியர்களை சோமாலியாவுக்குத் திருப்பியனுப்பும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். இது உண்மையிலேயே பெரிய விஷயம்.
தென்றல்: ஓ! இது அதிகம் வெளியே தெரியாத விஷயம். கேட்கச் சுவாரசியமாக உள்ளது. முதலில் 'Hate Free Zone' பின்னர் 'OneAmerica' காலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பல அமைப்புகளோடு ஊடாடத் தொடங்கிய இந்த அனுபவம் நீங்கள் அரசியலில் நுழைவதற்கு எப்படி உதவியது? பிரமீளா: அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும்போதும் சரி, மாநில, மத்திய அளவில் புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் போராடும் போதும் சரி, எங்கள் பேச்சு அதிகம் எடுபடவில்லை என்பது புரிந்தது. அதனால் புதிதாகக் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோரை வாக்காளர்களாகப் பதிய முடிவுசெய்தோம். மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய முயற்சியாக இது அமைந்தது. இருபத்து மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வாக்காளர்களாகப் பதிந்து கொண்டனர்.
பின் மாநில, மத்திய அளவில் முழுமையான குடிவரவுச் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முயன்றோம். முதலில் இதைக் காங்கிரஸுக்கு எடுத்துச் சென்று, பின் உள்ளூர், மாநில அளவில் அதிகாரிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சில முக்கியச் சட்டங்களை கொண்டுவர முயன்றோம். மாநிலம் முழுவதும் புலம்பெயர்ந்தோரின் அரசியல் பலத்தை மேம்படுத்தும் வேலையைச் செய்தோம்.
12 வருடங்கள் இதைச் செய்து வந்த காலத்தில், முக்கியமான அரசியல் பொறுப்புகளை நாமே ஏன் ஏற்கக்கூடாது என்ற எண்ணம் வந்தது. பதவியில் இருந்தால், தேவையான கொள்கை மாற்றங்களைக் கொண்டுவர வசதியாக இருக்கும் என உணர்ந்தேன். அதனால் மாநில செனட்டுக்கு 2014ல் போட்டியிட்டு வென்றேன். பின் இந்த இடம் காலியானதும் காங்கிரஸுக்குப் போட்டியிட முடிவு செய்தேன்.
தென்றல்: அருமை. அதிபரின் 'Champion of Change' என்ற அங்கீகாரம் கிடைத்தது பற்றிக் கூறுங்கள். பிரமீளா: இதில் ஆசிய அமெரிக்கப் பெண்கள் தத்தம் சமூகத்திற்கு, இந்த நாட்டுக்குச் செய்த சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர். நானும் இதில் ஒருத்தி. நான் 15, 20 வருடங்களாகப் பெண்களுக்காக, ஆசியா பசிஃபிக் தீவு மக்களுக்காக, குடிவரவுச் சட்டத் திருத்தம் கேட்டுப் போராடி வருகிறேன். இது மிகச்சிறந்த அங்கீகாரம்.
தென்றல்: நீங்கள் மாநில செனட்டுக்குப் போட்டியிட்டபோது சியாட்டில் மேயர் எட் மர்ரே (Ed Murray) உங்களை எவ்வாறு ஆதரித்தார்? பிரமீளா: நான் சியாட்டிலில் சமூக ஆர்வலராகப் பரவலாக அறியப்பட்டிருந்தேன். பல செயற்குழுக்களிலும், ஆணைக்குழுக்களிலும் இடம் பெற்றிருந்தேன். முந்தைய மேயர்கள் இவற்றில் என்னை நியமனம் செய்திருந்தனர். சியாட்டிலில் 'புலம்பெயர்ந்த அகதிகள் விவகார அலுவலகம்' அமைக்க உதவினேன்.
எட் மர்ரே மேயர் பதவிக்குப் போட்டியிட்டபோது அவரை ஆதரித்தேன். நாங்கள் ஏற்கனவே பல திட்டங்களில் இணைந்து செயல்பட்டிருந்தோம். அவர் என்னை சியாட்டிலில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கும் 'Income and Equality Task Force' குழுவுக்கு நியமித்தார். காவல்துறை தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் குழுவுக்கும் இணைத்தலைவராக என்னை நியமித்திருந்தார். நான் தேர்தலில் போட்டியிடப் போவது தெரிந்ததும் மிக மகிழ்ச்சியோடு எனக்கு ஆதரவுதர முன்வந்தார்.
தென்றல்: அவரது ஆதரவு உங்களுக்குப் பெரிதும் உதவியது என நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் கடும்போட்டியின் முடிவில் 51% ஓட்டுக்களை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினீர்கள். பிரமீளா: ஆமாம். சியாட்டிலில் என்னைக் கிட்டத்தட்ட எல்லாத் தொழிற்சங்கங்களும், எல்லா மகளிர் சங்கங்களும் ஆதரித்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பலரும் ஆதரித்தனர். நான் 23 வருடங்கள் அங்கு களப்பணி செய்துவந்ததால் எனக்கு ஆதரவாளர்கள் அதிகம். களப் பிரசாரத்தின் போது 25000 வீடுகளின் கதவைத் தட்டினோம்.
தென்றல்: ஓ! அருமை. கதவைத்தட்டி ஓட்டுக் கேட்பது மிகநல்ல வழி. எங்கெல்லாம் உள்ளூர்த் தேர்தல்களில் நம் இந்தியர்கள் போட்டியிடுகிறார்களோ, அங்கெல்லாம் நான் அவர்களுக்கு உதவுவது வழக்கம். உள்ளூர் கவுன்சில்வுமன் அனு நடராஜன். சாரடோகோ நகரின் சிட்டி கவுன்சிலுக்கு சூசி நாக்பால் ஆகியோருக்காக நான் வீடுவீடாகப் போய் பிரசாரம் செய்தேன். பிரமீளா: பணம் திரட்டுவதும், இந்திய அமெரிக்கர்களைப் பிரசாரத்தில் ஈடுபட வைப்பதும் மிக முக்கியம்.
தென்றல்: வரப்போகும் பிரைமரி எலக்ஷன் பற்றி சொல்லுங்கள். நமது சமூகத்தினர் எவ்வாறு உதவ முடியும்? பிரமீளா: மிகவும் கடினமான போட்டி இது. The seat hasn't been opened for 27 years. இது மிகவும் முற்போக்கான ஜனநாயக மாவட்டம். என்னைத் தவிர 4 பேர் களத்தில் உள்ளனர். மே 20ம் தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசித் தேதி. இன்னும் சிலர் களத்தில் இறங்கக்கூடும். மிகவும் கடுமையான போட்டி இருக்கும்.
ஆனால், மொத்தமுள்ள 8 தொழிற்சங்கங்களும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இங்குள்ள மத்தியத் தொழிலாளர் கவுன்சிலும் என்னை ஆதரிக்கப் பரிந்துரைத்துள்ளது. Emily's list, National Women's political caucus என்று பல அமைப்புகள் என்னை ஆதரிக்கின்றன. எங்களது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரைமரிகள் இங்கு வித்தியாசமானவை. அதில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல் இரு இடங்களில் வந்தால், அவர்களே ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிட நேரிடும்.
கலிஃபோர்னியாவிலும் இதேபோல்தான். இது ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலமாதலால் இங்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்தான் முதலிரண்டு இடங்களிலும் வருவார்கள். அதனால் பிரைமரியில் வெற்றி பெற்றால் பொதுத்தேர்தலில் நான் ஜனநாயகக் கட்சி வேட்பாளரையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் போட்டி கடினமானதாகவும், அதிகச் செலவுள்ளதாகவும் இருக்கும். அதனால் பெருமளவில் நிதி திரட்டுவது மிகவும் அவசியம். இது ஒரு பெரிய சவால். எல்லோருடைய ஆதரவும், பிரசார பலமும் எனக்கு உள்ளது. ஆனால் நிதி திரட்டுவது முக்கியம்.
தென்றல்: ஓ! மிகவும் சுவாரசியமாக உள்ளது. அப்படியானால் ஜனநாயகக் கட்சி எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லையா? பிரமீளா: இல்லை. கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை. அவர்கள் எவரையும் ஆதரிப்பதை நாங்களும் விரும்பவில்லை. ஒன்று அவர்கள் என்னை ஆதரிக்க வேண்டும் இல்லையேல் யாரையுமே ஆதரிக்கக் கூடாது. ஏனென்றால் எல்லோருமே ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்.
தென்றல்: அருமை. நாங்களும் எங்களால் இயன்ற உதவியைச் செய்ய முயற்சிக்கிறோம். பிரமீளா: ஆமாம். நன்கொடைகளை வரவேற்கிறேன். வாக்காளர்கள் மிக முக்கியம். வீடுதோறும் சென்று ஓட்டுக்கேட்க தன்னார்வத் தொண்டர்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
தென்றல்: உங்களை வழிநடத்தும் அடிப்படை நம்பிக்கைகள் என்ன? பிரமீளா: சுவாரசியமான கேள்வி. அச்சத்திலும் வறுமையிலும் அல்லாமல், வளமான நிலையில் பெருந்தன்மையோடு செயல்படுவதே சிறந்தது. இது எனது நம்பிக்கைகளில் ஒன்று. எல்லோரது குரலும், குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின், பலவீனமானவர்களின் (vulnerable) குரல் அரங்கில் கேட்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்கமுடியும். யாருக்கு அதிக உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு உதவும்போது நாம் நமக்கே உதவிக்கொள்கிறோம். அப்போது மொத்த சமூகமும் செழிப்பாக இருக்கிறது.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழில்: மீனாட்சி கணபதி
*****
நான் செய்ய விரும்புபவை முதலில், வருமானம் மற்றும் சமத்துவம் இவற்றில் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். ஒரே இடத்தில் செல்வம் குவிவதை நாம் கவனித்தாக வேண்டும். மத்தியதர, உழைப்பாளிகள் வர்க்கத்திற்கு மறுபடியும் வாய்ப்புக்கள் கிடைக்கச் செய்வது அவசியம். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, குழந்தைகளுக்கு மருத்துவ கவனத்தைச் சாத்தியமாக்குவது எல்லாவற்றிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்குவதும் அவசியம். வாரத்தில் 40 மணிநேரம் வேலைசெய்யும் ஒருவருக்கு இவை மிகவும் முக்கியமானவை.
இரண்டாவது, உயர்கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் உயர்கல்வி பெறமுடியும். கல்விக் கட்டணமே கூடாது என்பது எனது எண்ணம். உதாரணமாக முன்னர், 4 வருடப் பட்டப்படிப்பிற்கான கட்டணத்தில் 70 சதவிகிதத்தை அரசாங்கம் ஏற்றுவந்தது. தற்போது 30 சதவிகிதம்தான் வழங்குகிறது. இதனால் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோவதோடு, அவர்களது கடன்சுமை திருப்பிச் செலுத்தமுடியாத அளவு அதிகரிக்கிறது. இதனால் நிறையப்பேர் பட்டப்படிப்புக்குச் செல்வதில்லை. அவர்களால் நல்ல வேலைக்கும் செல்ல முடிவதில்லை. இது ஒரு விஷவட்டம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிக அவசியம். கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யும்போது சுற்றுச்சூழலுக்குத் தீங்குவராமல் பார்த்துக்கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.
கடைசியாக சமூகப் பாதுகாப்பும் (social security), மருத்துவ வசதியும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவாக்கப்பட வேண்டும். பெண்கள், இனப் பிரச்சனைகள் இவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் தேசிய அளவில், குடிவரவுச் சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்வதுதான் எனது முக்கிய குறிக்கோள்.
- பிரமீளா ஜெயபால் |