இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள்போல் நீண்டு விட்டது அவருக்கு.
வராண்டாவில் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு சாலையைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். முகத்தில் அத்தனை சோகம். அது தெரிகிறதோ இல்லையோ மனதில் அப்பியிருந்தது. வெறித்துக் கிடக்கும் வீதி. மயான அமைதி.
உள்ளே தேவகி ஹாலில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறாள். பொழுதை மிகச் சுலபமாக நகட்டி விடுகிறாள் அவள். தனக்கு மட்டும் ஏன் அப்படி இருக்க மாட்டேனென்கிறது? கிடந்து ஏன் இப்படி அலைபாய்கிறது?
அங்கிள்… பந்து விழுந்திருச்சி...
"போய் எடுத்துக்கோடா கண்ணா..." - வாசல் கேட்டை மடால் என்று திறந்துகொண்டு திடுதிடுவென்று மாடிப்படியில் குதித்து ஓடும் அந்தக் குட்டிப்பையனை நினைத்துக் கொள்கிறார்.
டே… டேய்… மெதுவா… மெதுவா… சடக்குன்னு படி தவறிடுச்சின்னா பல்லு போயிரும்… அடி பட்டிடும்… பார்த்துடா ராஜா… விழுந்துடுவப்பா… உண்மையான வருத்தத்தில் வரும் வார்த்தைகள்.
ஓ.கே. அங்கிள்…
அடப் பெரிய மனுஷா… பதிலப் பாரு… ஓ.கே.யாமே? புள்ளிமானாய்த் துள்ளி ஓடும் அந்தப் பொடிப்பயல் விதுரைப் பார்க்கிறார். அவன் பெயர் விதுர் என்பதே இவருக்கு ரொம்பவும் புதுமையாய் இருந்தது. மகாபாரதத்தில் விதுரர் கதாபாத்திரம் எத்தனை உன்னதமானது? இந்தப் பெயர் வைக்கவேண்டும் என்று இவன் பெற்றோர்களுக்கு எப்படித் தோன்றியது?
கேட்டைத் திறந்துகொண்டு வெளியேறித் திரும்பவும் சத்தமில்லாமல் கேட் கொண்டியைப் போடும் அவனின் பதவாகத்தை உற்று நோக்குகிறார். நல்ல, அமைதியான பயல். சமத்து… அவர் வாய் தானே முனகுகிறது.
இது ஐந்தாவது முறை. பசங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடுவதும், பந்து மாடியில் விழுந்துவிட்டது என்று அவன் ஓடோடி வருவதும்…
உள்ளேயிருந்து தேவகி பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். அதை ஜன்னல் வழியாக நோக்குகிறார்.
சும்மா சும்மா அந்தக் கதவுக் கொண்டியைத் தூக்கறதும், டொம்முனு போடுறதும், கதவைத் திறக்கறதும் மூடுறதும்னா அந்தக் கதவு என்னத்துக்காறது? வாயிருந்தா அழும்... சொல்ல மாட்டீங்களா…?
அவள் அப்படித்தான். சிலதுக்கு பதிலே சொல்லமாட்டார் இவர்.
அங்கிள்… .பந்து… மாடியைக் காண்பித்து விதுர் கேட்க ம்… ம்… என்று இவர் மேல்நோக்கி சைகை காண்பிக்க, ஆன்ட்டீ… .என்று அவன் பயந்தவன் போல் பம்மிப்பம்மி மாடியேற... இவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.
இத்தனை முறை பந்து மாடியில் விழ, ஒவ்வொரு முறையும் கேட்டே அவன் உள்ளே நுழைவதும், அனுமதியோடே பணிவோடு மாடிக்குச் சென்றதும், இவரைச் சங்கடப்படுத்தியது. அது அந்தச் சிறுவனுக்கான ஒழுக்கத்தின் அடையாளம்தானே என்று தோன்றி அவன் தாய் தந்தையரை நினைக்க வைத்தது. நல்ல வளர்ப்பு.
"ஒவ்வொரு வாட்டியும் பர்மிஷன் கேட்க வேண்டாம்… நீபாட்டுக்குப் போய் எடுத்துக்கோ… .ஓ.கே" மனதில் தோன்றிய சங்கடத்தைத் தீர்த்துக் கொண்டார்.
விதுரின் முகத்தில் மகிழ்ச்சி. தேங்க்யூ அங்கிள்… என்று முகம்மலரச் சொல்லிவிட்டு ஓடுகிறான். இவர் உட்கார்ந்தமேனிக்கே அவர்கள் விளையாடுவதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று ஒரு யோசனை. எழுகிறார் ராமமூர்த்தி. வாசல் கேட்டை நன்றாகத் திறந்து வைக்கிறார். திரும்பவும் வந்து அமர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு முறையும் அவன் எதற்காகத் திறந்து திறந்து மூடவேண்டும்? யார் வரப்போகிறார்கள் இங்கே? பேசாமல் திறந்தே கிடக்கட்டுமே இந்தப் பசங்கள் விளையாடி முடிக்கும்வரை…
இப்போது அவர்களின் விளையாட்டு அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தது. ஓங்கி அடித்தால் நேராகப் பந்து இவரை நோக்கிக்கூட வரக்கூடும். நெற்றிப் பொட்டில் பட்டால் அம்பேல். கதை முடிந்தது. நினைத்தபோது சிரிப்பு வந்தது. அது எதற்கு அப்படி நினைக்கவேண்டும். பறந்து வரும் பந்தைக் கபால் என்று கேட்ச் பிடித்தால் ஆச்சு…! முடியாதா? நினைத்ததுதான் தாமதம். தன் நினைவலைகள் அதற்குள்ளுமா போய்த் தாக்கிவிட்டது?
ஏய்ய்ய்ய்... என்று எழுந்தவர் கையை நெடுக மேலே உயர்த்தி தலைக்குமேல் பறந்துவந்த அந்தப் பந்தை வலதுகையால் சக்கென்று பிடித்தார். எல்லாம் கணநேரம்தான். பிடித்தாரா அல்லது அதுவாகவே அப்படி வந்து அவர் கையில் பாங்காக உட்கார்ந்து கொண்டதா? என்ன ஆச்சரியம்? துளியும் தடுமாற்றம் இல்லையே…!
"ஹாய்ய்ய்ய்…" என்று துள்ளிக் குதித்தார்கள் சிறுவர்கள். "அவுட்டு, அவுட்டு" என்று கத்தினார்கள்.
"அதெல்லாம் முடியாது. அங்கிள் பிடிச்சது. நான் ஏத்துக்கமாட்டேன்… நா ஆட்டைக்கு வரலை… போங்கடா…"
"அழுகுணி ஆட்டம்... அழுகுணி ஆட்டம்… அங்கிளென்ன நம்மகூட விளையாடுறாரா? இல்லேல்ல… அப்றம் எப்டி நா அவுட்டாக முடியும்? போடா... இதுக்கு நா ஒத்துக்க மாட்டேன்…"
கொஞ்சநேரம் அந்தப் பையனை அழவிடும் அவர்களின் கொட்டம்.
"சர்றா… வாடா… சர்றா வாடா… சும்மா சொன்னம்டா…" அவனையும் கட்டியிழுத்துக் கொண்டு திரும்பவும் ஸ்டம்பை நோக்கிப் போகும் அவர்கள்.
கையில் மெல்லிய அதிர்வு இன்னும் ஓயவில்லை இவருக்கு.
"இப்டி மட்ட மல்லாக்கத் திறந்துபோட்டா எப்டி? நாய், மாடுன்னு உள்ளே நுழைஞ்சிறப் போகுது..." கத்திக்கொண்டே கதவை மூடவருகிறாள் தேவகி. இவர் தடுக்கிறார்.
"நான்தான் திறந்து வச்சேன். நாந்தான் இங்க இருக்கனே பிறகென்ன… போ உள்ளே… ஒவ்வொரு தடவையும் அந்தப் பசங்க திறந்து திறந்து மூட வேண்டாமேன்னுதான்…"
"அக்கடான்னு திறந்தே போட்டுட்டீங்களாக்கும்… உங்களுக்கும் ஒரு விவஸ்தையில்ல… .பொடிப்பசங்க விளையாடுறதப் போயி வேடிக்கை பார்த்திட்டுப் பழி கிடக்கீங்களே…" நொடித்துக்கொண்டு உள்ளே போனாள்.
அவளுக்கு அந்த சுகானுபவம் தெரியவில்லைதான். சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கெல்லாம் ஒரு தனி ரசனை வேண்டும். அது உடம்போடு ஊறியதாக இருக்க வேண்டும். தெருவென்றிருந்தால் அங்கே நாலு பசங்கள் விளையாட வேண்டும்., யார் மேலாவது பந்தடிக்க வேண்டும், அவர் சத்தம் போடவேண்டும், எந்த வீட்டுக் கண்ணாடியாவது உடையவேண்டும், யார் என்று தெரியாமல் அவர்கள் கத்தவேண்டும். இதெல்லாம்தானே அழகு. விளையாடக் குழந்தைகளே இல்லாத தெரு என்ன தெரு? தூங்க விடாமல் பக்கத்து வீட்டில் கசமுசா கசமுசா என்று குழந்தைகளின் காச்சுப்பூச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால்தானே மனதுக்கு சந்தோஷம். இந்த உலகத்தில் நிறைய விஷயங்களைப் பேசமுடியாது. அனுபவிக்கத்தான் முடியும். அந்த அனுபவ யோகமே தனி. யாருக்குத் தெரிகிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…!
குழந்தையில்லை அவளுக்கு. அதனால் மனதில் மண்டிப்போன ஒரு அசாதாரண வெறுப்பு. அதற்கு நேர்மாறாய் எல்லா ஆசையும் அண்டிப் போனவர் இவர். குட்டிப் பசங்களோடு பசங்களாய் ஒன்றி விடுவார் பல வேளைகளில். எத்தனையோ நாள் மாடியிலேயே நின்றுகொண்டு பந்தெடுத்துப் போட்டிருக்கிறார். பந்து எகிறி வராதா என்று காத்துக் கிடப்பார். ‘கேட்ச், கேட்ச்’ என்று சொல்லி அவர்களைப் பந்தைப் பிடிக்கப் பழக்குவார். பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்கும் கண்கள். பொருட்படுத்தமாட்டார்.
அடுத்த வீட்டு மாடியிலிருந்து பேப்பர்களைப் பிய்த்துப் பிய்த்துப் பறக்க விடும் அந்த வீட்டுக் குழந்தைகள். அதில் ஒருவன்தான் அந்த விதுர். அவனுக்குத்தான் எத்தனை சகோதரிகள்? தம்பிகள். குழந்தைச் செல்வங்கள் நிரம்பித் ததும்பும் வீடு அது. அந்தப் பேப்பர் பிசிறுகள் இவர் வீட்டு காம்பவுண்டுக்குள் விழும்… குப்பை சேரும்…
"எல்லாம் வானரங்கள்… சொன்னா கேட்காது… யாரால தெனம் பெருக்க முடியுது… நீங்களும் சொல்ல மாட்டீங்கிறீங்க…"
"போகட்டும் விடு…" என்றார் இவர். அவள் இவரையே பார்த்தாள். ‘இவருக்கென்ன கிறுக்கா?’ என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.
தாளை பிட்டு பிட்டாகப் பிய்த்துக் காற்றில் பறக்க விடும்போது அது அசைந்து அசைந்து இறகுபோல் பறந்து செல்வதைப் பார்த்துக் குதூகலிக்கும் அந்தக் குஞ்சுகள். அவைகளின் அளவிட முடியா மகிழ்ச்சி.
"என்னுது இன்னும் பறக்குது... இன்னும் பறக்குது…"
"உன்னுது கீழ விழுந்திருச்சி… .பாரு…"
"என்னோடது மேலே போயிட்டேயிருக்கு அங்கே… பாரு அந்த வீட்டு மாடியைத் தாண்டிடுச்சி…"
குழந்தைகளின் மகிழ்ச்சி பொங்கும் முகங்களைக் காணும்போது தெய்வத்தைக் கண்டது போலிருக்கிறது இவருக்கு. என்ன ஒரு களங்கமில்லா முகங்கள். மாசு மறுவற்ற இந்தக் குழந்தைகள் இந்த தேசத்தின் வருங்காலச் சொத்துக்கள்.
சந்தோஷத்தில் முழ்கிக் கிடப்பார். மாடியில் இவர் நடை பயில்வதே அந்தப் பிஞ்சுகளின் கொஞ்சும் முகங்களைப் பார்க்கத்தான். "கடவுளைப் பார்க்க வேண்டுமா… குழந்தைகளைப் பாருங்கள்" என்பார்.
"இனிமே பந்தை எடுக்க நீ வரவேண்டாம்… மாடிக்கு வந்திச்சின்னா, நான் எடுத்துப் போடுறேன்… .ஓ.கே…"
எதிர்பாராத மகிழ்ச்சியில் துள்ளி ஓடினான் விதுர். "அங்கிள்… .தேங்க்யூ ஸோ மச் அங்கிள்… .தேங்க்யூ…"
அடேங்கப்பா… என்னா இங்கிலீஷ்...!
அன்றிலிருந்து மாடிக்குப் பந்து வந்தால் இவர்தான். அது அவருக்கும் அந்தச் சிறுவன் விதுருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அங்கு பந்து வந்தால் அது சிக்சர். தெருவே அலறுவது போல் கத்துவார்கள்.
"இப்டி நடக்குற நேரத்துல இந்தப் பக்கம் பக்கத்துப் ப்ளாட்டுல இருக்கிற மரத்துலர்ந்து ரெண்டு கிளைகளையாவது ஒடிச்சுப் போடலாம்ல… எவ்வளவு செத்தை குப்பை விழுது தினமும்? நம்ம வீட்டுப் பக்கம் நீட்டிக்கிட்டு இருக்குதே… அதுகளை மட்டுமாவது எட்டி ஒடிச்சு விடுங்க… அந்த ஓனர் வர்றபோது வீட்டுக்குள்ள சும்மா இருக்காம, மரத்தை வெட்டச் சொல்லுங்க… வருஷக் கணக்கா குப்பை பொறுக்கி மாளலை..."
மரத்தை வெட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்? கிளைகளை வெட்டு என்று வேண்டுமானால் சொல்லலாம். மரம் வைத்ததும், வளர்த்ததும், இன்றுவரை பராமரிப்பதும் அவரின் இஷ்டமல்லவா? உரிமையல்லவா? எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறாள். அமைதி காத்தார் இவர்.
அவளுக்கென்ன தெரியும் அந்த மரத்தால் இவர் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார் என்று? எந்த ரசனையுமே இல்லையே அவளுக்கு? வாழ்க்கையை எப்படி ருசிப்பது? எப்படிப் புதுப்பித்துக் கொள்வது தினமும்? அதில் வந்து அமர்ந்த அந்த சாம்பல் குருவியை என்றாவது இவள் பார்த்திருக்கிறாளா? கழுத்திலே பல வண்ணமுள்ள மரங்கொத்தியை என்றாவது கண்ணுற்றிருக்கிறாளா? யாரும் அறியாமல் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே ரகசியமாய் அமர்ந்து கொட்டக் கொட்ட தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆந்தையை அறிவாளா இவள்? அவ்வப்போது காதுக்குக் கேட்கும் கிளியின் கொஞ்சுமொழியையாவது கேட்டிருக்கிறாளா? தினசரி ஓடி ஓடிப் பாயும் அணில்களையாவது பார்த்திருக்கிறாளா? அட அதுதான் வேண்டாம்… அனுதினமும் கா… கா… கா… என்று கத்திக்கொண்டு வந்து சூடான சாதம் வைக்கிறாளே… அந்தக் காக்கைகளையாவது சற்று நிதானமாய் நின்று நோக்கியிருக்கிறாளா? அந்தக் கழுத்தில்தான் என்ன ஒரு கருமைப் பளபளப்பு? ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் தெரியுதடா நந்தலாலா…’ என்ற பாரதியின் பாடல் வரிகளை என்றாவது உணர்வு பூர்வமாய் உணர்ந்திருக்கிறாளா? இப்படியும் அப்படியுமாய் சடக் சடக்கென்று திரும்பி நோக்கி சுற்றத்தை அழைக்கும் அந்த வேகம்தான் என்ன? நம்மைச் சுற்றி இவைகளெல்லாம் இருப்பதே என்னவொரு சந்தோஷம்…! மரங்களும் செடி கொடிகளும் இருந்தால்தானே இவையெல்லாம் கண்ணில் படும்… வாசம் செய்யும்? எல்லாத்தையும் வெட்டு என்றால்…?
இந்த மரங்கள் அழிந்தால் இந்தச் சந்தோஷங்களும் சேர்ந்து அழிந்து விடுமே? அப்புறம் இந்தப் பறவைகள் எங்கு போகும்? இந்த அணில்கள் எங்கு போய் சோற்றுப் பருக்கை தேடும்? அந்தக் காக்கைகள் எப்படி இங்கு அன்னத்திற்காகக் காத்திருக்கும்? வெறும் வெட்டவெளியைப் பார்த்து ஓவென்று நிற்க முடியுமா? மரங்களால் கிடைக்கும் சுகமான காற்று கிடைக்குமா? குளிர்ச்சி கிடைக்குமா? நிழல் கிடைக்குமா?
"வெட்டச் சொல்லுங்க… வெட்டச் சொல்லுங்க…" என்று ஒரே ஓலப் பாட்டுத்தான். வெட்டுவதென்றால் அரைமணி நேரம்தான். மேற்கிளையில் கயிற்றைக் கட்டி இழுத்து நாலுபேர் பிடித்துக்கொள்ள கீழே ரம்பம் போட்டால் முடிந்தது கதை. ஆனால் அதை வளர்க்க? அது வளர? வானுயர்ந்து நிற்க? எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன? மரங்கள் காற்று சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும், மாசு நீக்குவதற்கும், மழைக்கும் என்று எப்படியெல்லாம் பலபடப் பயன்படுகின்றன? வைப்பது எளிதா? வெட்டுவது எளிதா? என்னதான் மனது விலகி நின்றாலும் இத்தனை வெறுப்பு ஆகுமா?
தேவகி இப்படியாகச் சொன்னவை எதையுமே செய்ததில்லை ராமமூர்த்தி. காற்று சலசலவென்று அவர் உடம்பைத் தழுவியபோது தன் நினைவுக்கு வந்தார். தெருவை உற்று நோக்கினார். வெறிச்சோடிக் கிடந்தது.
பள்ளி திறந்தாயிற்று. குழந்தைகள் முதுகில் புத்தக மூட்டையைச் சுமந்து கொண்டு பறந்து விட்டன. பாவமாய்த்தான் இருக்கிறது பார்க்க. வீதியில் துளிச் சத்தமில்லை. மனசே என்னவோ போலிருக்கிறது இவருக்கு.
பக்கத்து வீட்டிலாவது கொஞ்சம் சத்தமிருக்கும். இப்போது அதுவுமில்லை. வீடு மாறிக்கொண்டு போய் விட்டார்கள். படிக்கும் பள்ளிக்கு அருகில் வேண்டுமென்று. பஸ் கட்டணம் கொடுத்து மாளவில்லை என்று.
"நீ சொல்லிச் சொல்லிதான் போயிட்டாங்க போலிருக்கு…" வேண்டுமென்றேதான் கடிந்துகொண்டார் மனைவியை. "தப்பாவே பேசிட்டிருந்தா என்னைக்காவது ஒருநாள் பலிக்கத்தானே செய்யும். அதான் போயிட்டாங்க…" என்றார்.
தன்னையறியாமல் மாடி ஏறி வந்திருந்த இவரின் பார்வை பக்கத்து மாடியில் பதிந்தது. அங்கிருந்து பிய்ந்த காகித இறகுகள் இனிப் பறக்காது. அதைக் கண்டு குதூகலிக்கும் பிஞ்சுகளின் கரவொலி இனி அங்கே எழாது. தன் வீட்டுக் காம்பவுன்டில் இனிக் குப்பைகள் விழாது. தேவகிக்குத் தெரியக் கூடாது என்று இனி அவைகளைத் தான் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை.
மனம் விரக்தியில் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்.
"வரும்போது ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க…" .தேவகியின் சத்தம் அரைகுறையாய்க் காதில். அவள் காரியம் அவளுக்கு.
எப்படித்தான் அவ்வளவு தூரம் வந்தாரோ அவருக்கே தெரியாது…
"அங்கிள்...ராம் அங்கிள்…"
அந்தப் பெரிய பொட்டலின் நடுவே விஸ்தாரமாய் விளையாடும் சிறுவர்கள். சத்தமிட்டுக் கொண்டே ஓங்கி அந்தப் பந்தை அடித்த சிறுவன் விதுரின் பழக்கமான குரல். அவனைப் பார்த்து விட்ட குஷியில், தன்னை நோக்கி ராக்கெட் வேகத்தில் வந்த அந்தப் பந்தை ஒரு குதி குதித்து எவ்விப் பிடித்த ராமமூர்த்தி அப்படியே கையைச் சுழற்றி ஸ்டம்பிற்கு முன்னே தள்ளி நிற்கும் விதுரின் பேட்டைக் குறி வைத்து வேகமாய் வீசுகிறார்.
விதுரின் மின்னலான மறு சுழற்சியில் பந்து வந்த வேகம் தெரியாமல் விண்ணை நோக்கிப் புயலெனக் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கிறது.
பேட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன்னை நோக்கிப் பாய்ந்தோடி வரும் அந்தக் குழந்தைச் செல்வத்தை அப்படியே வாரி எடுத்து அணைத்து உச்சி மோந்து களிக்கிறார் ராமமூர்த்தி.
"அதோ… தெரியுது பாருங்க அங்கிள்… அதுதான் எங்க வீடு… வீட்டுக்கு வாங்க அங்கிள்… இப்பவே வாங்க… போவோம்."
சிறுவனின் பாசமான அழைப்பில் சிலிர்த்துப் போகிறார் இவர். அந்த நிமிடம் அவர் வாழ்வின் பொன்னான நேரமாக மெய்ப்படுகிறது.
உஷாதீபன் |