உஷாதீபன்
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் பல ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் உஷாதீபன். இயற்பெயர் கி. வெங்கடரமணி. இவர், டிசம்பர் 10, 1951 அன்று வத்தலகுண்டில் பிறந்தார். பள்ளிக் காலத்திலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. பி.யூ.சி. படித்ததும் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் வேலை கிடைத்தது. வத்தலகுண்டில் இருந்த நூலகத்தில் கல்கி, ஜெயகாந்தன், நா.பா. தேடித்தேடி வாசித்ததும், இலக்கியத் தேடலும் எழுதத் தூண்டின. 'தீபம்' நா. பார்த்தசாரதியின் படைப்புகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட இவர், மனைவி உஷாவின் பெயரையும் இணைத்துக்கொண்டு உஷாதீபன் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை 'வறட்டு கௌரவம்' 1982ல் ஆனந்தவிகடனில் வெளியானது. தொடர்ந்து கணையாழி, அமுதசுரபி, கலைமகள், தீபம், தினமணி கதிர், செம்மலர், தாய், பூவாளி, கல்கி, குமுதம், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, இதயம் - சிறுகதைக் கதிர், தாமரை, வண்ணக்கதிர், பாக்யா, தமிழ் அரசி, சுட்டி, சுனிதா, சதங்கை, சுதந்திரம், புதிய பார்வை, தினமலர்-வாரமலர், கமலம், பம்பாய், மங்கை, ராணி, கண்மணி, மின்மினி, ஜனரஞ்சனி, இன்று, அரும்பு, மனோரஞ்சிதம், ஓசை என்று இவர் எழுதாத இதழ்களே தமிழில் இல்லை என்னுமளவுக்கு எழுதிக் குவித்தார்.

முதல் சிறுகதைத் தொகுப்பான 'உள்ளே வெளியே' மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல பிரபல பதிப்பகங்கள் இவரது நூல்களை வெளியிட்டன. பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும். 'வெள்ளை நிறத்தொரு பூனை' என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்றதாகும். 'வாழ்க்கை ஒரு ஜீவநதி' திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு பெற்றது. இந்நூல் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கிறது.

இவரது 'தனித்திருப்பவனின் அறை' சிறுகதைத் தொகுதி முக்கியமானதாகும். அத்தொகுப்பு பற்றி எழுத்தாளரும், கடல்சார் பொறியாளருமான நரசய்யா, "உஷாதீபனின் கதைகளில் காணப்படும் மனிதாபிமானம் ஆசிரியரின் மனநிலையைக் காட்டுகிறது. சிறுகதைகளில் ஆளப்படும் சில சிறந்த யுக்திகளை அவர் கையாண்டிருப்பது மெச்சத்தக்கதாக உள்ளது. சுருங்கச் சொல்லித் தாம் ஸ்ருஷ்டித்திருக்கும் கதாபாத்திரங்களை படிப்பவர் மனதில் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் என்பது உண்மை... உஷாதீபனின் கதைகளில் காணப்படும் பாத்திரங்கள் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள்தாம்! ஆனால் அவர்களை நம்மிடையில் சிறந்த மனிதர்களாக உலவ விட்டிருக்கும் திறமை ஆசிரியரைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் சொல்லும் 'பாசிடிவ் அவுட்லுக்' இவரது கதைகளில் முற்றிலும் தெரிகிறது. படித்தவுடன் மன நிறைவையும் ஏற்படுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைகளுக்கு இத்தொகுப்பு ஒரு சிறந்த சேர்மானம்" என்று மதிப்பிடுகிறார்.

புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும். மாத இதழ்களுக்காகப் பல நாவல்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார். குறுநாவலும், சிறுகதைகளுமாக இதுவரை பதினோரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியிருக்கிறார். தீபம், மயன், ஆனந்தவிகடன் உட்படப் பல இதழ்களில் அவை வெளியாகியிருக்கின்றன. இவரது படைப்புகளை எம்.ஃபில். மற்றும் பிஎச்.டி. ஆய்வு மாணவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தான் பார்த்த வாழ்க்கை, வாழும் சமூகம், அதன் மக்களின் அவலம், அவர்களின் உழைப்பு, அதில் தெறிக்கும் கருணை, நேயம், கண்ணீர், தியாகம் இவற்றைத்தான் கதையாக்குவதாகச் சொல்கிறார் உஷாதீபன். தனது படைப்புலகம் குறித்து, "நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்கள், இவைதான் எனக்குக் கதைகளைத் தருகின்றன. என் படைப்புகளில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது" என்கிறார். "உஷாதீபனின் கதைகளில் தத்துவங்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இருக்காது. மிகவும் எளிமையான கதைகள். சிக்கலான உறவுகள், எதிர்மறைச் சிந்தனைகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால், யதார்த்தம் இருக்கும். ஒரு சராசரி நடுத்தரவர்க்க சிந்தனை அவரது கதைகளின் அடித்தளம். அதை சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கதைசொல்லி உஷாதீபன்" என்கிறார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

தனது படைப்புகளுக்காக கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, இலக்கியச்சிந்தனை பரிசு, அமுதசுரபி பொன்விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதைப் பரிசு, குங்குமம் இளைய தலைமுறை சிறுகதைப் போட்டிப் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு எனப் பரிசுகளை வென்றுள்ளார். 'தவிக்கும் இடைவெளிகள்' சிறுகதைத் தொகுப்புக்காக நியூசெஞ்சுரி புக்ஹவுஸின் சிறப்பு விருதும், பரிசும் பெற்றிருக்கிறார். உயிரெழுத்து, உயிரோசை, திண்ணை, சொல்வனம், நிலாச்சாரல் என்று இணையதளங்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். "எழுத்தும் இலக்கியமும் இந்தச் சமுதாயத்திற்காக" என்ற கொள்கை நோக்கில் எழுதிக் கொண்டிருகும் உஷாதீபன், குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். ushaadeepan.blogspot.in என்பது இவரது வலைப்பதிவு.

அரவிந்த்

© TamilOnline.com