SATS: பொங்கல் விழா
சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிலம்பாட்டம், ஆத்திசூடி, தமிழ்ப் பாடலுக்கு நடனம், தமிழிசைப் பாடல்கள் என விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

உழவுத்தொழிலைப் பிள்ளைகள் அறிந்துகொள்ள நடன நிகழ்ச்சி தவிர அட்டையால் செய்யப்பட்ட மாட்டுவண்டி, வீடு, கரும்பு, பானை மற்றும் பல வண்ணக் கோலங்களால் அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 75க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர் சேர்ந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சிலம்பாட்டத்தினை முறைப்படிக் கற்ற மாணவர்கள் அதனை ஆடிக்காட்டியதும், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாடிய தமிழ்ப்பாடல்களும் நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டின.

நிகழ்ச்சியில், சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்டப்பட்ட நிதி குறித்த விவரங்கள் வாசிக்கப்பட்டு, நன்கொடை வழங்கியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பங்கேற்றோருக்கு சங்கத்தலைவர் திரு. விஜய் மற்றும் செயலாளர் திரு. இராஜகுரு ஆகியோர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல மாநிலத்தவர்களும் விழாவுக்கு வந்திருந்து கண்டுகளித்தார்கள்.

இராஜகுரு பரமசாமி,
சான் அன்டோனியோ, டெக்சஸ்

© TamilOnline.com