சிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா
மார்ச் 19, 2016 அன்று சிகாகோ நகரின் பரதம் நாட்டியப் பள்ளியின் ஆண்டுவிழா ஆஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தது. 117 குழந்தைகளும் பெண்டிரும் கண்கவர் ஆடையுடுத்தி அணியணியாக மேடையேறி 20 நடனங்களை வழங்கினர். நிகழ்ச்சியைப் பரதம் பள்ளி முன்னாள் மாணவி பிரியா ராஜன் அழகாகத் தொகுத்து வழங்கினார்.

புஷ்பாஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்ச்சி அடுத்து அலாரிப்பு, கணேச பஞ்சரத்னம், ஸ்வர கோர்வை மற்றும் நடேச கவுத்துவம் எனக் களைகட்டியது. மாணவர் நெவினும் பரதமணிகள் சுதிக்‌ஷனா மற்றும் சாத்விகா முருகன் ஷடாக்‌ஷரத்துக்கு மெய்மறக்க ஆடி அவையோரை ரசிக மணிகளாக்கினர். அடுத்து ஐதீஸ்வரம், நந்தி கவுத்துவம் என மேல்நிலை மாணவிகள் ஆடி அவையோரின் ஆரவாரத்தைப் பெற்றார்கள்.

அனுஸ்ரீ 'அழகு தெய்வம்' என்னும் காவடிச்சிந்துவுக்கும், ஸ்ரேயா மற்றும் நேகா "யார் ஆடினார்" பாடலுக்கும், சாத்விகா வீரவல்லி "மதுரா நகரிலோ" பாடலுக்கும் சிறப்பாக ஆடினார்கள். "ஏன் பள்ளி கொண்டீரய்யா" என 13 பேர் ஆடிய குழுநடனம் அன்றைய தினத்தின் சிறப்பு அம்சமாகும். பாடலின் இறுதியில் துயில்புரியும் ரங்கனாகவும், ஆதிசேஷனாகவும், பக்த கோடிகளாகவும் குழுவினர் அபிநயித்தது அவையோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

பரதம் பள்ளி நிறுவனர் குரு வனிதா வீரவல்லி "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" பாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். பின்னர் ராமர், தேவி, சிவன் புகழ்பாடி ஆடிய பின்னர் தில்லானாவுடன் நடனக்குழுவினர் விடைபெற்றார்கள்.

117 மாணவ மாணவியரும் மங்களம் பாடி, குருவின் ஆசிபெற ஆண்டுவிழா நிறைவெய்தியது.

குமார் சரவணன்,
அரோரா,இல்லினாய்

© TamilOnline.com