அழுகாத வாழைப்பழம்
ஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன் ஒரு தாயும் மகனும் மிகவும் பசியோடு நிற்பதைப் பார்த்தான்.

பழங்களைப் பார்த்த சிறுவன், இவனை நோக்கி ஓடிவந்தான். அவனைப் பிடிப்பதற்காக அவன் பின்னால் அவனுடைய அம்மா ஓடிவந்தார். ஆனால் இருவரும் பசியில் மயங்கிக் கீழே விழுந்தனர். வீட்டுக்குக் கொண்டு போவதைவிட, இவர்களுக்குப் பழத்தைக் கொடுப்பது நல்லது என்று பையன் நினைத்தான். இருவருக்கும் பழங்களை உண்ணக் கொடுத்து, பருக நீரும் கொடுத்தான்.

பசியும் தாகமும் நீங்கிய தாயும் மகனும் கண்ணீர் உகுத்து, அவனுக்குப் பலவகையிலும் நன்றி தெரிவித்தார்கள். வெறுங்கையோடு மகன் வீடு திரும்பினான். பழம் வாங்கி வந்தாயா என்று தந்தை கேட்டபோது, அவன் ஆமாம் என்று கூறினான். "நான் வாங்கிவந்துள்ள பழங்கள் மிகப் புனிதமானவை, அவை அழுகிப் போகமாட்டா, அவற்றைக் கண்ணால் பார்க்கமுடியாது" என்று கூறினான்.

வழியில் நடந்ததை மகன் கூறியதும், தன் மகன் மிகவும் உயர்ந்தவன் என்பதையும், இறைவனுக்குச் செய்த பூஜைகள் அனைத்தும் அன்றைக்குப் பலன் தந்தன என்பதாகவும் தந்தை உணர்ந்தார். அன்றிலிருந்து தன் மகனை அவர் மிகவும் நேசிக்கத் தொடங்கினார்.

- நன்றி: சனாதன சாரதி, மே 2015

ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com