தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட்டவரும், தமிழின் முதன்முதலில் திரைப்படத் தகவல் மையத்தை உருவாக்கியவருமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (90) மார்ச் 21 அன்று சென்னையில் காலமானார். மணி என்று இயற்பெயர் கொண்ட ஆனந்தன், சிறு வயதிலேயே நாடகங்களை எழுத, நடிக்க, ஆரம்பித்துவிட்டார். வளர்ந்ததும் பல நாடகக்குழுக்களில் பணியாற்றினார். சினிமாவில் ஆர்வம் வந்தது. கேமரா உதவியாளராகச் சேர்ந்து படம் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். முதன்முதலில் சிவாஜியைப் படமெடுக்க, வித்தியாசமான அந்தப் படம் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து நடிகர்களை நடிக்கும்போது மட்டுமல்லாமல் வேறு வித்தியாசமான சூழல்களில் எடுத்து இதழ்களில் வெளியிட ஆரம்பித்தார். ஃபிலிம்சேம்பர் மூலம் வெளிவந்த ஒரு இதழுக்காக திரைப்படங்கள், இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் பற்றியெல்லாம் பல்வேறு தகவல்களைச் சேகரித்தார். அன்று ஆரம்பித்தது அவரது இறுதிக்காலம்வரை தொடர்ந்தது. நண்பர் சி.டி. தேவராஜன் நடத்திவந்த ஃபிலிம்நியூஸ் பத்திரிகையில் இவர் எடுத்த படங்களும் தகவல்களும் வெளியாகின அதுமுதல் ஆனந்தன், ஃபிலிம்நியூஸ் ஆனந்தன் ஆனார். எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்திற்கு எடுக்கப்பட்ட ஸ்டில்களை பத்திரிகைகளுக்கு விநியோகித்தார். அதுவே முதன்முதலில் P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாகவும் காரணமானது.
சினிமாபற்றிய பல்வேறு தகவல்களை விரல்நுனியில் வைத்திருந்த ஆனந்தன், அதுபற்றிய பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்; நடிகர்களுக்கு சிறப்பான பல மலர்களைத் தயாரித்துள்ளார். கலைமாமணி, கலைச்செல்வம், கலை மூதறிஞர், திரைத்துறை அகராதி, திரையுலக உ.வே.சா. உட்படப் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் பெற்றிருக்கிறார். இவரது மனைவி சிவகாமி. மகன்கள் டயமண்ட் பாபு மற்றும் ரவி. மகள்கள் கீதா, விஜயா. முன்னோடி சாதனையாளருக்கு தென்றலின் அஞ்சலி.
ஆனந்தன் பற்றி விரிவாக அறிய |