ஆனந்தாசனம்
"Lipid Profile டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு. நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? உன்னோட கொலஸ்ட்ரால் கன்னாபின்னான்னு எகிறிருக்கு" யோகிதா, மூர்த்தியின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்தவாறு படபடத்தாள்.

"அதெல்லாம் சும்மா பயமுறுத்தறாங்க, இண்டியன்ஸ் எல்லாருக்குமே இது அப்படித்தானாம். நீ ஒண்ணும் கவலப்படாத."

"மண்ணாங்கட்டி. ஒழுங்கா இனிமே நான் சொல்றமாதிரி சாப்பிடு. மூர்த்தி, கொஞ்சம் சீரியஸா இரு" கணவனின் மீது கடுப்பாகத் தொடங்கினாள்.

"சரி சரி, ஆரம்பிக்காத. கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே ஒரு பெரிய சைஸ் பாப்கார்னை மைக்ரோவேவில் திணித்தான் மூர்த்தி.

"ஒனக்கு கொஞ்சங்கூட வெக்கமே இல்லையா மூர்த்தி? இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன், நீபாட்டுக்குத் தீனியிலேயே குறியா இருக்கியே? உன்னச் சொல்லி குத்தமில்ல. வேளா வேளைக்கு உனக்கு வகைவகையா சமைச்சுப் போட்டேன் பாரு, என்னச் சொல்லணும்."

"இதோ பாரு யோகி, எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். என் சாப்பாட்ட இதுல இழுக்காத.உலகத்துலேயே ஆண்டவன் படைச்ச ரெண்டு சிறப்பான விஷயம் - ஒண்ணு நீ, இன்னொண்ணு ஒன்னோட சாப்பாடு. இது ரெண்டும் இல்லாம என்னால இருக்க முடியாது" என்று படேல் கடை குல்ஃபி ஐஸ்போல் பெரிய ஐஸாக அவள் தலையில் வைத்தான்.

"அசடு வழியாத. சகிக்கல. நாளைலேர்ந்து ஜிம் போக ஆரம்பி. மார்னிங் ஜாக் போயிட்டு வந்த பிறகுதான் காஃபி. காலைல இட்லி தோசை எல்லாம் கிடயாது, ஓட்ஸ் கஞ்சிதான். சொல்லிட்டேன்."

சிறுவயதிலேயே காலையில் ஓடச்சொன்னால், அம்மா கண்ணிலிருந்து மறையும்வரை ஓடிவிட்டு, பிறகு சோம்பேறி நடை நடந்த ஆள் மூர்த்தி என்று அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

கல்லூரியில் நண்பர் கூட்டம் அனைத்தும் சிக்ஸ் பாக் மோகத்தில் இருந்த காலத்தில்கூட, மூர்த்தி மைசூர்பாக்கை மொசுக்கிக்கொண்டு இருந்த நாட்கள் பல.

இருந்தாலும் யோகிதா விடுவதாய் இல்லை. தனது தடாலடி டயட் திட்டத்தை அவள் அமல்படுத்தினாள்.

ஃபுல்மீல் சாப்பிட்ட நாக்குக்கு, ஓட்மீலைப் பார்த்தாலே எரிச்சல் வந்தது. பிரியாணியைப் பார்த்த கண்கள், அந்தப் பச்சை கீன்வாவைப் பார்க்கவே மறுத்தன. வாரம் தவறாமல் அரைகிலோ மிக்சரை வாங்கிய கைகள், அதே கடையில் ஆல்மண்ட் பாலை வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன.

"ஏம்மா, இன்னிக்காவது அடை அவியல் பண்ணேன்! இந்த சாலடை சாப்டு சாப்டு நாக்கு செத்துப்போச்சு" என்றான் அவன் நப்பாசையில் நாக்கை நீட்டியவாறு.

"நோ நோ. நத்திங் டூயிங். டயட்ட பிரேக் பண்ணக்கூடாது. ஒழுங்கா இந்த சூப்பக் குடிச்சிட்டு பாக்கி இருக்கற சாலட சாப்டுமுடிங்க. நான் போய் கேழ்வரகு தோசை எப்படிப் பண்ணனும்னு ஆன்லைன்ல பாக்கணும்" என்று கறாராகக் கூறிவிட்டாள்.

"ஏம்மா யோகி, நான் வேணும்னா யோகா கிளாஸ் சேர்ந்துக்கட்டுமா? என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போறாங்க. யோகா பண்ணா தானாகவே மெட்டபாலிஸம் அட்ஜஸ்ட் ஆயிடுமாம். சாப்பாட்டுல எந்தக் கட்டுப்பாடும் வேணாமாம். என் ஃப்ரெண்டு பத்ரிகூட வஜ்ராசனம் கத்துண்டுபாதி வயிறக் கொறச்சுட்டான். நான் சேரட்டுமா, என்ன சொல்ற?"

"இதப் போய் எங்கிட்ட கேக்கணுமா? மொதல்ல உங்க ஃப்ரெண்டு பத்ரிக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். என்னால முடியாதத அவர் சாதிச்சுட்டார். உங்கள எக்சர்சைஸ் பண்ண சம்மதிக்க வெச்சுட்டார். நீங்க சீக்கிரமா அந்த யோகா ஸ்டுடியோவுல என்ரோல் பண்ணுங்க. பத்ரியும் உங்களுக்குச் சில ஆசனங்கள் சொல்லிக் கொடுப்பார். ஆமா, அந்த யோகா ஸ்டுடியோ பேரு என்ன சொன்னீங்க?

"Bend it like பக்தவத்சலம்".

"பக்தவத்சலம் யாரு, யோகா குருவா?"

"ஆமாம். கலிஃபோர்னியாவிலையே அவர்தான் நம்பர் ஒண்ணாம். வாரம் 3 முறைதான் இந்த ஸ்டுடியோவுக்கு வருவாராம். மீதி நேரம் எல்லாம் ஹாலிவுட் செலப்ரிடிஸ்க்கு சொல்லிக் கொடுக்க லாஸ் ஏஞ்சலஸ் போயிடுவாராம். அவரப்பத்தி பத்ரி நெறைய சொல்லிருக்கான்."

"நீங்க இவ்ளோ ஈடுபாட்டோடப் பேசறதப் பாத்தாலே எனக்குப் பாதி நம்பிக்கை வந்துடுச்சு. நான் போய் பத்ரியை நேரில் பார்த்து தேங்க் பண்ணணும். Such a nice person."

பக்தவத்சலம் தன் பதியை பெண்டெடுக்க ஆரம்பித்ததில் மகிழ்ந்து போனாள் யோகிதா. மூன்று மாதங்கள் ஓடின.

"ஏங்க, யோகா பண்ணிட்டு வரும்போதெல்லாம் ஒரே ஏப்பமா விடறீங்களே. இது என்ன ஒருவித சைடு எஃபெக்டா?" என்றாள் யோகி.

"ஆமா, எங்க குரு பக்தவத்சலம் எனக்குன்னே ஒரு ஆசனம் சொல்லிக் கொடுக்கறார். 'ஆனந்தாசனம்'னு பேரு. அது பண்ணும் போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி! ஒடம்புக்கும் மூளைக்கும் ஒரு புதுத்தெம்பு கெடச்சாமாறி ஒரு ஃபீலிங். அது பண்ணும்போது வேண்டாத வாயுவெல்லாம் வெளிலவரது சகஜம்தான்னும் சொன்னார்."

"இல்லே, மூணுமாசமா யோகா போறீங்க. நான் உங்கள ஸ்ட்ரிக்ட் டயட்டுல வெச்சிருக்கேன். அப்பறம் ஏன் உங்க ஒடம்பு கொறயவே மாட்டேங்குது?" என்று இறுகிய முகத்துடன் மூர்த்தியைக் குடையத் தொடங்கினாள்.

"அது ஒண்ணும் இல்லைமா, இப்போ நாங்க முதுகுத்தண்டை கான்சன்ட்ரேட் பண்றோம். திரிகோண ஆசனம் பண்ண ஆரம்பித்தால் தானாத் தொப்பை குறையும்னு பக்தவத்சலம் காரண்டி கொடுத்திருக்கார். கொஞ்சம் பொறுமையா இருந்து பாரேன்."

"என்னமோ போங்க, நீங்க சுறுசுறுப்பா இருந்து ஹெல்த்தைப் பாத்துக்கிட்டாலே போதும். எனக்கு வேறென்ன வேணும்!"

மறுநாள் சாயங்காலம் வழக்கமாக வாங்கும் பச்சை சாலட் இலைகளைப் பத்துமடங்கு விலை கொடுத்து அந்தக் கடையில் வாங்கிய கையோடு, யோகிதாவுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

'இது மூர்த்தியோட யோகா டைம் ஆச்சே? இன்னிக்கு அவர் ஸ்டுடியோவுக்குப் போய் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்' என்று நினைத்துக்கொண்டு எலெக்ட்ரிக் காரில் கிளம்பினாள்.

யோகா ஸ்டுடியோ பார்க்கிங்கில் ஈ காக்காய் இல்லை. உள்ளே போய் விசாரித்ததில் குரு பக்தவத்சலம் இரண்டு மாதமாக அங்கு வருவதே இல்லை என்றும், ஸ்டுடியோ சீரமைப்புக்காகமூடப்பட்ட விஷயமும் தெரிய வந்தது.

யோகிதாவிற்கு பதற்றமானது. இரண்டு மாதமாக இந்த மனிதர் எங்கு போகிறார் என்று அவள் மனம் 50 shadesல் குழம்பியது.

சற்றே திரும்பிய அவள் கண்ணில் அருகில் இருந்த பார்க்கிங் வாசலில் பத்ரியின் கார் தென்பட்டது. உள்ளே போய் பத்ரிக்கு ஒரு ஹை சொல்லிவிட்டு வரலாம் என்று நுழைந்தவளை, "வாங்க மேடம்" என்று ஆனந்தபவன் முதலாளி அன்போடு வரவேற்றார்.

"புதுசா ஓபன் பண்ணியிருக்கீங்களா?" என்று கேட்பதற்குள், "யெஸ், ஓபன் பண்ணி 2 மாசம்தான் ஆகுது" என்று முடித்தார். கண்களை அலையவிட்ட யோகிதாவுக்கு அதிர்ச்சி.

மூர்த்தி, பத்ரி இருவர் முன்னும் முறுகலான ஆனந்தபவன் நெய்ரோஸ்ட்டில் ஆவி பறப்பதைப் பார்த்ததும், யோகிதாவின் காதுகளிலிருந்து புகை பறந்தது.

ராமா கார்த்திகேயன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com