மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி
சூதர்களைப்பற்றிய விவரங்களைப் பார்த்துவிட்டு, பிறகு மேலோட்டமாக சஞ்சயனைப்பற்றிய சில செய்திகளைச் சொல்லலாம் என்று கருதியிருந்தேன். சென்ற இதழுக்குச் சில வாசகர்கள் வெளியிட்டிருந்த எதிர்வினைகளைப் பார்க்கையில், மிக அடிப்படையான ஒரு கருத்தை அசைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன். இத்தகைய கருத்துகளை வரவேற்கிறேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த விஷயத்தில் நல்லதாகவும் ஆனது. சஞ்சயனைப்பற்றி நான் சொல்ல நினைத்தனவற்றை-அப்போது கருதியதைக் காட்டிலும் சற்று அதிகமாக-இப்போது சொல்லிவிட்டு இதன்பிறகு சூதர்களைப்பற்றியும் அதன்பின்னர் கர்ணனைப்பற்றியும் தொடர்கிறேன். நாம் இப்போது செய்வது கர்ணனைப்பற்றிய குணச்சித்திர ஆய்வன்று என்பதை இன்னொரு முறையும் சொல்லிவிடுகிறேன். சம்பவங்களைப்பற்றிய அபிப்பிராயங்களை ஓரளவுக்காவது நேர்செய்த பிறகுதான் பாத்திரப்படைப்புகளைப் பார்க்க முடியும்.

இப்போது சஞ்சயனுக்கு வியாசர் கொடுத்த அந்த 'ஞான திருஷ்டியைப்' பார்ப்போம். அது பொய்யா? இல்லை; உண்மையே. இந்தப் பார்வையை திருதிராஷ்டிரனுக்குத்தான் தருவதாக வியாசர் முதலில் சொல்கிறார். மிகுந்த தேகவலிமையும்-பத்தாயிரம் யானை பலம்-நல்ல அறிவும் ஆனால் திடமற்ற சிந்தனையும் கொண்டவனான திருதிராஷ்டிரனுக்குப் போர்க் காட்சிகளைக் காண்பதில் விருப்பமில்லை. கண்ணன் தூதுப்படலத்தில் அவனுடைய விசுவரூபக் காட்சியைப் பார்ப்பதற்காகக் கண்ணன் அவனுக்குப் பார்வையை வழங்கிய சமயத்திலேயே, "உம்முடைய இந்தத் தோற்றத்தைப் பார்த்தபிறகு எனக்கு வேறு எதையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை. இந்தப் பார்வையைப் பறித்துவிடும்" என்று மனமுருகிப் பிரார்த்தித்தவன்தான் திருதிராஷ்டிரன். ("ஓ பகவானே! மறுபடியும் என்னுடைய நேத்திரங்கள் மறைந்துபோகப் பிரார்த்திக்கிறேன். உம்மைப் பார்த்தேன். இனி மற்றவரைப் பார்க்க விருப்பமில்லை' என்றான்" - உத்யோக பர்வம், அத்: 137, பக்: 436).

அப்படியொரு பக்தி இருந்த இடத்தில் அநியாயத்தின்மீது பற்றும், தன்னுடைய மகன் என்ற ஒரே காரணத்தால் அகவிழியை மறைக்குமளவுக்குப் பாசமும், திடசித்தமின்மையும் சேர்ந்த கலவையாகக் காட்சியளிக்கிறான் திருதிராஷ்டிரன். அரக்குமாளிகைத் திட்டத்துக்கு சம்மதமளித்ததிலிருந்து, பாஞ்சாலியைப் பணயம் வைத்தபோது, "ஜயித்தாயிற்றா, ஜயித்தாயிற்றா" என்று பரபரப்பாக அருகிலிருந்தவர்களிடம் கேட்டறிந்தவன்தான் இவன். அது ஒருபுறமிருக்கட்டும். யுத்தகளக் காட்சிகளைக் காண வியாசர் 'பார்வை' தர முன்வந்தாலும் அவற்றைப் பார்க்கும் மனவலிமை இல்லை திருதிராஷ்டிரனுக்கு. வெற்றியைப்பற்றியும், அங்கே விழப்போகும் நபர்களைப்பற்றியும் அவனுக்கே பெருத்த ஐயமிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், மகன்கள் இறந்துவிழுவதைத்தான் காணப்போகிறோம் என்ற எண்ணம் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. இந்தக் குறிப்பு பாரதத்தில் நேரடியாக இல்லை.

ஆனால், பார்வையைத் தருகிறேன் என்று சொன்ன வியாசர் அதற்குச் சொன்ன சிறிய முன்னுரை, இந்த அனுமானத்துக்குத் தேவையான அடிப்படையைத் தருகிறது. அதைப் பாருங்கள்: "அரசனே! உன்னுடைய புத்ரர்களும் மற்ற அரசர்களும் காலனால் சூழப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் ஒருவரையொருவர் எதிர்த்து நாசஞ்செய்யவே போகிறார்கள். பாரத! அவர்கள் காலனால் சூழப்பட்டு நாசமடைகையில் நீ காலத்தினுடைய மாறுபாட்டையறிந்து, துக்கத்தில் மனத்தைச் செலுத்தாதே. அரசனே! புத்ர! நீ இந்த யுத்தத்தைப் பார்ப்பதற்கு விரும்புவாயாயின் உனக்குக் கண்ணைக் கொடுக்கிறேன். இந்த யுத்தத்தைப் பார்" என்றார். உன்பிள்ளைகள் சாகப்போகிறார்கள். அதைப் பார்க்க விருப்பமாயிருந்தால் கண் தருகிறேன் என்று சொன்னால், பாரக்கவா முடியும்! பார்க்க விரும்பவில்லை, ஆனால் கேட்கவிரும்புகிறேன் என்றான் திருதிராஷ்டிரன். அப்போதுதான் சஞ்சயனுக்கு அந்த ஞானதிருஷ்டியை வியாசர் அருளுகிறார். இதோ அவருடைய மொழியிலேயே தருகிறேன்: "ராஜனே! இந்த ஸஞ்சயன் உனக்கு இந்த யுத்தத்தைச் சொல்லுவான். இவனுக்கு யுத்தத்தில் எல்லா விஷயமும் கண்ணுக்குப் புலப்படும். அரசனே! ஸஞ்சயன் ஞானக்கண்ணை அடைந்து யுத்தத்தை உனக்கு உரைப்பான். ஸர்வஜ்ஞனும் (யாவும் அறிந்தவன்) ஆவான். வெளிப்படையாகவோ, ரஹஸ்யமாகவோ, பகலிலோ இரவிலோ (நடக்கும்) எல்லாவற்றையும், மனத்தினாலே எண்ணப்பட்டாலும், ஸஞ்சயன் அறியப் போகிறான். இவனைச் சஸ்திரங்கள் பிளவா. இவனைச் சிரமம் வருத்தாது. இந்த ஸஞ்சயன் உயிருடன் இந்த யுத்தத்திலிருந்து விடுபடப் போகிறான்." (பீஷ்மபர்வம், அத்: 2).

நடப்பதனைத்தையும் பார்ப்பான்; ஒவ்வொருவர் மனத்திலே என்ன நினைக்கிறார் என்பதையும் அறிந்துகொள்வான் என்று இவ்வளவு விரிவான வரத்தைக் கொடுத்தால், சஞ்சயன் யுத்தகளக் காட்சிகள் அனைத்தையும் திருதிராஷ்டிரனுக்கு எதிரில் அமர்ந்தபடி வருணித்தான் என்று தோன்றும்தான். அப்படிப்பட்ட எண்ணம் ஏற்படுவதற்கு இடமில்லாமல் இல்லை. ஆனால், இப்படி உண்மையிலேயே நடந்திருந்தால், யுத்த வருணனை எப்படித் தொடங்கவேண்டும்? 'களத்தில் இரண்டு சைனியங்களும் அணிவகுத்து நிற்கின்றன. இப்போது அர்ச்சுனன் வில்லைக் கீழே போடுகிறான். இன்னின்னது பேசுகிறான், கிருஷ்ணன் அவனுக்கு இவ்வாறு உபதேசிக்கிறான்' என்றெல்லாம் அல்லவா வருணனை தொடங்க வேண்டும். ஆனால், எப்படித் தொடங்குகிறது? இதற்குப் பதினோரு அத்தியாயங்கள் கழித்து, அதுவும் பீஷ்மர் இறந்தார் என்று சொன்னபடித் தொடங்குகிறது. அதையும் பார்ப்போம்:

"மஹாராஜரே! நான் ஸஞ்சயன். பரதரேறே! உமக்கு வந்தனம் செய்கிறேன். சந்தனுவின் புத்திரரும் பரதகுலத்திற் பிறந்தவர்களுக்குப் பிதாமஹருமான பீஷ்மர் கொல்லப்பட்டார். எல்லா யுத்த வீரர்களுள்ளும் சிறந்தவரும், எல்லா வில்லாளிகளுக்கும் ஆதாரமானவரும் குருகுலத்தில் பிறந்தவர்களுக்குப் பிதாமஹருமான அப்படிப்பட்ட பீஷ்மர் இப்போது சரதல்பத்தையடைந்து படுத்திருக்கின்றார். அரசரே! எவருடைய வீர்யத்தை ஆதாரமாய்க் கொண்டு உம்முடைய குமாரன் சூதாடினானோ அந்த பீஷ்மர் சிகண்டியினால் கொல்லப்பட்டு யுத்தகளத்தில் படுத்திருக்கிறார்......" என்று இவ்வாறுதான் யுத்தத்தின் முதல் வருணனை தொடங்குகிறது (பீஷ்ம பர்வம் அத்: 13, பக்: 43). அப்போது பதறிப்போகும் திருதிராஷ்டிரன் "எப்படிக் கொல்லப்பட்டார்?" என்று கேட்க, அது தொடங்கி ஆறு அத்தியாயங்களுக்கு முதல் பத்துநாள் யுத்தத்தைச் சுருக்கமாகச் சொல்லிமுடித்து, மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்து, பகவத்கீதை உபதேசிக்கப்பட்டதை 19ம் அத்தியாயத்திலிருந்து தொடங்குகிறான்.

இப்போது நாம் படிக்கும் பகவத்கீதை, பீஷ்ம பர்வத்தின் ஆரம்பத்திலன்று, பத்துநாள் யுத்தத்தின் முன்கதைச் சுருக்கத்துக்குப் பிறகே தொடங்குகிறது. 'தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் திரண்டிருந்த நம்மவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் சஞ்சயா' என்று தொடங்கி, பதினெட்டு அத்தியாயங்களுக்கு கீதோபதேசம் முடிந்தபின்னால், மீண்டும் முதல்நாள் யுத்தத்தில் தொடங்கி, பத்துநாள் யுத்தத்தையும் சொல்லி முடிக்கிறான் சஞ்சயன். அப்படியானால் இந்த யுத் வருணனை தொடங்குவது யுத்தம் ஆரம்பித்துப் பத்தாம் நாள் இரவில்!

இப்படியேதான் துரோணர், கர்ணன் வீழ்ச்சிகளின்போதும் சஞ்சயன் நகருக்குத் திரும்பினான் என்ற குறிப்பு ஒவ்வோரிடத்திலும் மறுபடி மறுபடி வருகிறது. அதாவது, பத்தாம் நாள் இரவுக்குப் பிறகு பதினைந்தாம் நாள் இரவு, பதினேழாம் நாள் மதியம் என்றுதான் சஞ்சயன் நகரம் திரும்புகின்ற குறிப்பு வருகிறது. அப்படியானால் சஞ்சயன் எங்கிருந்து நகரத்துக்குத் திரும்பினான்? யுத்த களத்திலிருந்துதான்! இதற்கிடையில் ஒருசமயம் திருதிராஷ்டிரன் "அர்ச்சுனனைக் கொல்வதற்காக என்றே கர்ணன் இந்திரனிடமிருந்து சக்தியாயுதத்தை வாங்கி வைத்திருக்கிறானே, அதைச் செலுத்தினால் அர்ச்சுனன் கண்ணன் இருவருமே இறப்பார்களே. அதை விடச்சொல்லி கர்ணனுக்கு நீ நினைவுபடுத்தவில்லையா? நீதான் யுத்தகளத்திலேயே இருக்கிறாயே, இதை ஏன் மறந்தாய்?" என்று திருதிராஷ்டிரன் கேட்பதும், பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சஞ்சயன் பீமனிடத்தில் பிடிபடுவதும், நாம் நினைப்பதைப்போல சஞ்சயன் எப்போது பார்த்தாலும் திருதிராஷ்டிரனுக்கு எதிரில் இருந்தபடி இந்த வர்ணனையைச் செய்யவில்லை என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்கின்றன.

அப்படியானால், இந்த 'ஞான திருஷ்டி' எதற்காக என்று கேட்கத் தோன்றும். யுத்தகளத்தின் நீள அகலங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தான். பதினான்காம் நாள் காலையில் ஜயத்ரத வதத்தின்போது துரோணர் தன்பக்க சேனையை அணிவகுக்கிறாரே, அப்போது பின்வரும் நீளஅகலங்கள் சொல்லப்படுகின்றன: "பாரத்வாஜராலே (பரத்வாஜ முனிவரின் மகனான துரோணராலே) ஏற்படுத்தப்பட்ட சக்ரவியூகத்தை நடுவில்கொண்ட சகடவியூகமானது பின்பக்கத்தில் ஐந்து கவ்யூதி அகன்றும், பன்னிரண்டு கவ்யூதி நீண்டுமிருந்தது" (துரோண பர்வம், 87ம் அத்தியாயம் பக்கம் 290). கவ்யூதியா? அப்படியென்றால்? சுருக்கமாக, இருபது மைல் (32 கிமீ) அகலம்; 48 மைல் (77 கிமீ) நீளம். இது பதிமூன்றுநாள் யுத்தத்தில் அழிந்தது போக, மீதமிருந்த சைனியம்-அதுவும் கௌரவர் பக்கத்து சைனியம்-அணிவகுத்து நின்றதன் அளவு. இந்த நீளஅகலங்களை எப்படி மைல் கணக்குக்கு மாற்றினேன் என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com