2500 பேர் நிறைந்துள்ள, அமைதியான ஓர் அரங்கத்தில், 150 பேர் ஒருமித்த குரலில் உலக அமைதிக்காக இனிமையாக இசைப்பதை நீங்கள் ஒரு வினாடி கண்மூடிக் கற்பனைசெய்து பார்க்கமுடியுமா? வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த அவர்களில் பெண்களை சேலையிலும், ஆண்களை குர்த்தாவிலும் தோன்றுவதைக் கற்பனைசெய்து பாருங்கள். இவர்களில், இந்திய வம்சாவளி வழிவந்த நூறுபேர், பன்னிரண்டு மொழிகள் பேசுவதை கற்பனை செய்ய முடியுமா?
மேற்கத்திய இசைக்கருவிகளின் இசைச்சங்கமமும் இத்தோடு இணைகிறது. இது மட்டுமின்றி, இவ்விசைக்கு வண்ணமயமாக நடனமாடுபவர்களையும் எண்ணிப்பாருங்கள். மேலும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் 5,000 வருடம் பழமையான இந்திய நாகரீகம் பற்றிய, இந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய படக்காட்சிகள் இவற்றையும் கற்பனை செய்தீர்களானால், அதுதான் 'ஷாந்தி - அமைதிக்கான ஒரு பயணம்'.
ஏப்ரல் 30 அன்று கூப்பர்டினோவிலும் (கலிஃபோர்னியா) மே 21 அன்று ஓக்லாந்திலும் 'ஷாந்தி' மக்களை மகிழ்விக்க வருகிறது. அதற்கான ஒத்திகைகள் நவம்பர் 2015லேயே தொடங்கிவிட்டன.
சின்சினாட்டியைச் சேர்ந்த டாக்டர். கன்னிகேஸ்வரனின் அற்புதப் படைப்பு 'ஷாந்தி'. இது சேர்ந்திசை மற்றும் இசைக்கருவிகளின் பிரம்மாண்டமான படைப்பு. வடமொழியில் இயற்றி இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட இப்படைப்பு, இளையராஜாவின் 'திருவாசகம்' வெளியாகுமுன்பே வெளிவந்தது. 2005ம் ஆண்டு 'ஷாந்தி'யைக் கண்டு ரசித்த எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடன் இதழில் "கன்னிகேஸ்வரன் இப்படைப்பில் கல்யாணி போன்ற ராகங்களை, மேற்கத்திய இசைக்கேற்ப இசையமைத்ததின்மூலம் தனது இசைப்புலமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்" என்று எழுதினார்.
கன்னிக்ஸ் கூறுகிறார்: "1984ம் ஆண்டு, நான் ஒரு முதுகலை பொறியியல் மாணவனாக இந்நாட்டுக்கு வந்தேன். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஸிம்ஃபொனி இசையை ராகங்களின் அடிப்படையில் அமைக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் ஒருவர் அதைக் குரலிசையில் முயற்சிக்கும்படிக் கூறினார். இந்திய கலைஞர்களைக்கொண்ட என்னுடைய முதல் இசைக்குழு, சின்சினாட்டியில் 1994ம் ஆண்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சியில் ரசிகப்ரியா, மாயாமாளவ கௌளை, சிம்மேந்திர மத்யமம், கீரவாணி முதலிய ராகங்கள் இசைக்கப்பட்டன. பிறகு, நான் டாக்டர் கேதரைன் ரோமா அவர்களோடு இணைந்து புதிய முயற்சியாக இந்திய, மேற்கத்திய குரலிசையை இணைத்து ராகங்களை உருவாக்கினோம். அது முற்றிலும் புதுமையானதாக இருந்தது. இந்தியக் குரல்கள் ஸ்வரங்களின் அடிப்படையிலும், மேற்கத்தியக் குரல்கள் இசைக்குறியீடுகளின் அடிப்படையிலும் ஒலித்தன. இதன் தாக்கம் சொல்லொணா ஆச்சரியத்தைத் தந்தது.
9-11க்குப் பிறகு, கன்னிக்ஸும் கேதரைனும் பேசிக் கொண்டிருந்தபோது அவர், "கன்னிக்ஸ், உலக அமைதிபற்றி நீங்கள் ஒரு படைப்பை உருவாக்குங்கள்" என்றார். இந்திய மற்றும் மேற்கத்தியப் பாடகர்களோடு இசைக்கருவிகளையும் இணைத்து, 'ஷாந்தி'க்கான ஒத்திகையை ஆரம்பித்தோம்."
"2004ல் வெளியான "ஷாந்தி" ஒரு மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்திய மற்றும் மேற்கத்தியப் பாடகர்கள் கண்களில்நீர் வழிய ஆனந்தத்தில் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர். அப்போதுதான் இது இசையைப்பற்றியது மட்டுமல்ல மக்களுக்கும் சமுதாயத்துக்குமானது என்று உணர்ந்தேன்." 'ஷாந்தி'யின் 2004 மற்றும் 2006 நிகழ்ச்சிகளை சுமார் 4000 பேர் கண்டு களித்தனர்.
கன்னிகேஸ்வரனின் ஐ.ஐ.டி. நண்பர் ராஜு வெங்கட்ராமன் அவரை ஆலன் டவுனுக்கு (பென்சில்வேனியா) அழைக்க, அங்கிருந்த பாடகர்களைக்கொண்டு 'ஷாந்தி' மீண்டும் மேடையேறியது. கடந்த பத்து ஆண்டுகளில், டாம்பா (ஃப்ளோரிடா), மினியாபொலீஸ், டொரன்டோ, ஷிகாகோ, வாஷிங்டன் டி.சி., தென்கலிஃபோர்னியா மற்றும் பல இடங்களில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனை ரசித்திருக்கிறார்கள்.
'ஷாந்தி'யை வழங்க இப்போது DCF கன்னிக்ஸை அழைத்துள்ளது. DCF ஒரு மரபுசார்ந்த கல்வி, அற விளக்கம் பற்றிய முறையான கல்வி மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க நிதியுதவும் அமைப்பாகும். 'ஷாந்தி' மூலம் திரட்டப்படும் நிதி Graduate Thelogical Union, Berkeley (M.A/PhD) கலிஃபோர்னியாவுக்குச் செல்கிறது. டாக்டர் ஸ்காட் ஹானா வியர் இயக்கும் சான்டா க்ளாரா கொரல் 'ஷாந்தி'யில் பங்கேற்கிறது. உஷா ஸ்ரீநிவாஸன் நடத்தும் சங்கம் ஆர்ட்ஸ் நாட்டியக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சி விவரம்: ஏப்ரல் 30 - Flint Center, Cupertino - 5PM and 9:00PM (2 காட்சிகள்) மே 21 - Interstake Center Auditorium, Oakland - 7:00PM நுழைவுச்சீட்டுகள் வாங்க: Ticketmaster
செய்திக்குறிப்பிலிருந்து |