வா.மணிகண்டன்
விளையாட்டாக ஆரம்பித்ததுதான். சமூகப்பணிக்கான விதையாக முளைத்து, செடியாய் வளர்ந்திருக்கிறது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கல்வி ஆலோசகர் வா. மணிகண்டன். 2005 முதலே 'பேசலாம்' என்ற தலைப்பில் வலைப்பதிவு தொடங்கி அதில் எழுதி வந்தார். நாளடைவில் இவரது சுவாரஸ்யமான எழுத்துக்களுக்கென்று ஒரு வாசகவட்டம் குழுமிவிட்டது. நட்புவட்டம் இந்தியாவுக்கப்பாலும் விரிவடைந்தது. அதன் உதவியுடன் சிறு சிறு பண உதவிகளைச் செய்யத் தொடங்கினார். அது இன்றைக்கு 'நிசப்தம் அறக்கட்டளை' ஆக வளர்ந்து நிற்கிறது. கல்வி, மருத்துவம், மழை வெள்ள நிவாரண உதவிப்பணிகள் என்று இதுவரை கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்க்குமேல் செலவிட்டிருக்கிறது நிசப்தம். மரக்கடையில் வேலைசெய்யும் சாதாரண மனிதர்முதல் வெளிநாடுகளில் வேலை செய்யும் மென்பொருள் வல்லுனர்கள்வரை பலர் அளித்த நன்கொடைகளைக் கொண்டு நடந்திருக்கிறது. எப்படிச் சாத்தியமானது என மனம்திறக்கிறார் மணிகண்டன். வாருங்கள், கேட்கலாம்.

தென்றல் : நிசப்தம் அறக்கட்டளை ஆரம்பிக்க உந்துதலாக இருந்தது எது?
மணிகண்டன் : அறக்கட்டளை தொடங்குகிற எண்ணம் எதுவுமில்லாமல்தான் இருந்தேன். அவ்வப்போது சில உதவிகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கிராமத்துத் தச்சரின் மகன் (பெயர் பாலாஜி) ரோபோடிக்ஸில் கலக்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு ஜப்பானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், பணமில்லாததால் தவித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். முயற்சித்துப் பார்க்கலாம் என்று முந்தின நாள் இரவில் அந்த மாணவன் குறித்து நிசப்தம் தளத்தில் எழுதினேன். மற்றவர்களிடமிருந்து பணத்தை வாங்கி நாம் கொடுப்பதைவிடவும் அந்த மாணவனுடைய வங்கிக் கணக்கையே நேரடியாகக் கொடுத்துவிடுவது உசிதம் என்று தோன்றியது. நமக்கேன் வம்பு என்கிற பயம்தான் முக்கியக் காரணம். எழுதிய அடுத்தநாள் காலையில் அவனது கணக்குக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வந்திருந்தது. வாயடைத்துப் போனேன். அதே போலத்தான் ஒரு சலவைத் தொழிலாளியின் மகளுக்கும். பொறியியல் படிப்புச் செலவுக்கு உதவச்சொல்லி எழுதிய அடுத்தநாள் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்ந்த பணத்தைப் பார்த்து அரண்டு போனார்கள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தலைகீழாக நடந்து கொண்டிருந்தேன். இந்த உலகம் என்னையும் நம்புகிறது என்று உணர்ந்துகொண்ட தருணங்கள் அவை.

சந்தோஷமாக இருந்தாலும் பயனாளிகளிடம் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்கிறது என்பதால் அதை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் நிசப்தம் அறக்கட்டளை. பண விவகாரம் பிரச்சனையைக் கொண்டுவந்து சேர்த்துவிடும் வீட்டில் பயமுறுத்தினார்கள். மத்தியதரக் குடும்பத்தில் உருவாகக்கூடிய எளிய பயம் அது. எனக்கும் அந்த பயமும் தயக்கமும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை மட்டும் எனது செலவுக்காக வைத்துக்கொண்டு சம்பளப் பணத்தின் பெரும்பகுதியைத் தம்பியிடம் கொடுத்துவிடுகிற ஆள் நான். அடுத்தவர்களின் நன்கொடையைக் கையாள முடியுமா என்கிற சந்தேகம் இல்லாமலில்லை. ஆனால் வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என நம்பினேன். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதையும் யாருக்கெல்லாம் உதவி செய்திருக்கிறோம் என்ற பட்டியலை (பேங்க் ஸ்டேட்மெண்ட்டை) அப்படியே எடுத்து நிசப்தம் தளத்தில் பதிவுசெய்யத் தொடங்கிய பிறகு யாருக்கும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. பணவிஷயத்தில் வெளிப்படைத்தன்மை பெரும்பலம்.

தென்றல்: உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு தனிநபர். இவ்வளவு பேர் உங்கள்மீது நம்பிக்கை வைத்து உதவ என்ன காரணம்?
மணிகண்டன்: உண்மையாகவே எனக்கும் தெரியவில்லை. அறக்கட்டளையின் நிதியிலிருந்து தொகை எதையும் நான் எடுத்துக்கொள்வதில்லை. பயனாளிகளைப் பார்ப்பதற்காகவோ அல்லது அறக்கட்டளைப் பணிக்காகவோ வெளியூருக்குச் சென்றால் சொந்தச் செலவில்தான். அறக்கட்டளை சம்பந்தமாக எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதிவிடுகிறேன். அதேபோல ஒவ்வொரு மாதமும் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே நிசப்தம் தளத்தில் பதிவிடுகிறேன். இவையெல்லாம்தான் நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். இது என்னுடைய அனுமானம்தான். சரியான பதிலை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.

தென்றல்: உங்கள் இளமைப்பருவம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
மணிகண்டன்: சொந்த ஊர் கரட்டடிபாளையம். ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சற்றே பெரிய கிராமம். வாய்க்காலும் வயலுமாகச் செழிப்பான ஊர் அது. படித்தது அருகிலுள்ள டவுனான கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில். நூற்றாண்டு கண்ட பள்ளி அது. அப்பா வாசுதேவன் மின்சாரவாரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா சுப்புலட்சுமி கிராமநிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். அதனால் ஒழுங்காகப் படிக்கச் சொல்லி அழுத்தம் இருந்து கொண்டேயிருந்தது. என்றாலும் திருட்டுத்தனமாகக் குருவி பிடித்தேன். வாய்க்காலில் குதித்து விளையாடினேன். முயல் வேட்டையாடினேன். அப்புறம் என்னனென்னவோ செய்தேன். அந்தத் திருட்டுத்தனங்கள் பால்யத்தை பால்யமாகவே காத்தன.

மாலை அலுவலகம் முடித்துவரும் அம்மாவின் மங்கல வாழ்த்துக்கும் மண்டைக் கொட்டுக்கும் பயந்து எண்பது சதவீத மதிப்பெண் வாங்குகிற அளவுக்குப் படித்தேன். அது ஓரளவுக்கு மரியாதையான மதிப்பெண்தான் என்றாலும் ஏகப்பட்ட பேர்கள் அதைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கி என்னைச் சுமாராகப் படிக்கும் மாணவன் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ப்ளஸ் டூவில் முதல் பிரிவு படித்தவர்களில் முக்கால்வாசி மாணவர்கள் பொறியியல் குட்டையில் விழும் பருவம் தொடங்கியிருந்தது. அதனால் நானும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அதில் எட்டிக் குதித்தேன். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி நன்றாக முக்கியெடுத்தது. நல்ல கல்லூரிதான் என்றாலும் பி.ஈ. முடித்தபோது என்மீதே எனக்கு நம்பிக்கை வந்திருக்கவில்லை. வெளியில் சொன்னால் சிரிப்பார்கள் - 'வேலைக்குப் போகச்சொல்லி வற்புறுத்துவார்கள்' என்று பயந்துதான் எம்.டெக். சேர்ந்தேன். அப்பாவுக்கு அது பெரும்செலவு. ஆயினும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி உலகத்தின் சாளரங்களைத் திறந்து காட்டியது. வேலை, சம்பளம் என்று வாய்த்தவுடன் எல்லோருக்கும் நடக்கக்கூடியது எனக்கும் நிகழ்ந்தது. மனைவி பெயர் வேணி. மகன் பிறந்தான். இப்பொழுது அம்மா, அப்பா, தம்பியின் குடும்பம் நாங்கள் என எல்லாரும் பெங்களூருவில் கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். எனது அத்தனை வேலைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டு என்னைத் தண்ணீர் தெளித்து விட்டிருக்கிறார்கள்.



தென்றல்: சென்னைப் பெருவெள்ளத்தின் போது செய்த பணிகள் குறித்தும், சமீபத்தில் கடலூரில் செய்த சமூகப்பணிகள் குறித்தும் சொல்லுங்கள்...
மணிகண்டன்: சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவலாம் என்று நிசப்தம் தளத்தில் எழுதிய பத்தே நாட்களில் கிட்டத்தட்ட அறுபது லட்ச ரூபாய் பணம் வந்தது. பணம் ஒரு பிரச்சனையாக இருக்காது என்று தெரியும். நம்பிக் கொடுக்கிறார்கள். உலகின் எங்காவது ஒரு மூலையிலிருந்து தமது உழைப்பில் விளைந்த காசை ஏதோவொரு நம்பிக்கையில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குத் துளிப்பங்கம் வந்தாலும்கூட மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவனாகிவிடுவேன் என்று உணர்ந்திருக்கிறேன். அதுதான் பயமாக இருந்தது. சரியான மனிதர்களுக்கு உதவி போய்ச்சேர வேண்டும் எனக் கங்கணம் கட்ட வேண்டியிருந்தது. வந்திருக்கும் பணத்தை வைத்து அரிசி, பருப்பு, சர்க்கரையில் ஆரம்பித்து பற்பசை வரை முப்பது பொருட்கள் அடங்கிய மூட்டை ஒன்றை முதற்கட்டமாக வழங்கினோம். ஒவ்வொரு மூட்டையும் ஆயிரம் ரூபாய் மதிப்பு பெறும். மொத்தம் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

இரண்டாம் கட்டமாக கடலூரின் பெரிய காட்டுப்பாளையம்; இந்த ஊரின் தலித் குடியிருப்பு மழை வெள்ளத்தில் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த தொண்ணூற்றைந்து குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஆடு, மாடுகள், முந்திரி உடைக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றை - கிட்டத்தட்ட எட்டுலட்ச ரூபாய்க்கு வழங்கினோம். மூன்றாம் கட்டமாக முந்நூறு குடும்பங்களுக்கு டிரில்லிங் எந்திரம், மருந்து தெளிக்கும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் - அவற்றைக் கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிற வகையிலான பொருட்கள் இவை - கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறோம்.

கணக்குப் போட்டால் சற்றேறக்குறைய நாற்பது லட்ச ரூபாயை நெருங்கியிருக்கிறது. வெள்ள நிவாரணப் பணிகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று ஜூன் மாதத்தில் கல்விக்கட்டணமாகக் கொடுப்பதற்காக கணிசமான தொகை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம் அறக்கட்டளையின் வழியாகச் செய்யப்படுகிற கல்வி மருத்துவ உதவிகளை வழக்கம் போலவே தொடரலாம் என்று எண்ணம்.

தென்றல்: இப்பணிகளின்போது நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன, எப்படிச் சமாளித்தீர்கள்?
மணிகண்டன்: ஒவ்வொரு நிகழ்வின் போதும் 'அப்படியாமா இப்படியாமா.. அப்படி நடக்குதாமா.. இப்படி ஆகுதாமா' என்று தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காத மற்றவர்கள் நம்மை பயமூட்டிவிடுவதுதான் மிகப்பெரிய நடைமுறைச் சிக்கல். சின்னச்சின்ன பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் ஏகப்பட்ட பேர் பின்னாலிருந்து வேலைசெய்து கொடுக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் என்று ஏதாவதொரு பக்கத்திலிருந்து உதவி வந்துவிடுகிறது. எந்தவொரு காரியத்தையும் தள்ளிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் ஏதாவது பயமிருந்து கொண்டேதான் இருக்கும். துணிந்து ஆரம்பித்துவிட்டால் அவையவை தானாக நடக்கின்றன என்பதுதான் அனுபவபூர்வமாக நான் உணர்ந்த உண்மை.

தென்றல்: நற்பணிகளில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் பற்றி...
மணிகண்டன்: ஆயிரக்கணக்கானவர்கள்! நன்கொடையாளர்கள், பயனாளிகளுக்கும் எனக்குமிடையில் ஒருங்கிணைப்பவர்கள், திட்டப்பணிகளை செயல்படுத்தித் தரும் தன்னார்வலர்கள், மனோரீதியிலான ஆதரவளிக்கும் வாசகர்கள் என்று துல்லியமாகக் கணக்குப் போடமுடியாத எண்ணிக்கை இது. கிட்டத்தட்ட ஓர் இயக்கம் போல வளர்ந்திருக்கிறது. ஆனால் இயக்கம் என்று சொல்லிக் கொள்வதில்லை. அப்படிச் சொல்ல வேண்டியதுமில்லை. செய்கிற வேலைகளில் மனது வெகு திருப்தியாக இருக்கிறது.

தென்றல்: இதுபோன்ற பணிகளுக்கு குடும்பத்தின் உறுதுணையும் அவசியம் அல்லவா?
மணிகண்டன்: நிச்சயமாக. கூட்டுக்குடும்பம் என்று சொன்னேன் அல்லவா? அது பலவிதங்களில் நல்ல விஷயம். எனக்கு பெரிய குடும்பப் பொறுப்பு எதுவுமில்லை. திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் அலுவலகம். வார இறுதி நாட்களில் அறக்கட்டளை என்று ஒதுக்கி வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் பயப்பட்டார்கள். வீட்டிலேயே தங்குவதில்லை என்று தயங்கினார்கள். பிறகு பயனாளிகளை அவர்கள் நேரில் சந்திக்கும் போதெல்லாம் நெகிழத் தொடங்கினார்கள். சரியான பாதையில் போகிறான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இப்பொழுதெல்லாம் கண்டுகொள்வதில்லை. 'இந்த வாரம் எந்த ஊருக்கு?' என்று கேட்பதோடு சரி. எந்த ஊராக இருந்தாலும் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் தனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு மனைவி விட்டுக் கொடுத்துவிடுகிறாள்.

தென்றல்: ஒரு கவிஞராக இன்றைய கவிதைச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மணிகண்டன்: கவிதை எழுதிச் சில வருடங்கள் ஆகிவிட்டன. எக்ஸ். கவிஞர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். கவிதை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தனித்த மனநிலை வேண்டும். இப்பொழுது அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறேன். அவ்வப்போது வாசிக்கிறேன். ஆனால் அவ்வளவாக உவப்பாக இல்லை. தமிழ் கவிதையுலகில் ஏதோ மிகப்பெரிய தடை இருக்கிறது.

தென்றல்: கடந்த ஆண்டு அமெரிக்கா வந்திருந்தீர்கள் அல்லவா, அமெரிக்கா பற்றிய உங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
மணிகண்டன்: அமெரிக்காவே சுவாரஸ்யம்தான். அடிக்கடி வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். ஒரு வார இறுதி நாளன்று டென்வரில் தங்கியிருந்த ஏங்கில்வுட் என்கிற இடத்திலிருந்து நகரத்தின் பதினாறாவது தெருவரைக்கும் - கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோமீட்டர் நடந்தேன். தன்னந்தனியாகத்தான். அப்பொழுது குளிர்காலம் தொடங்கியிருக்கவில்லை. அருமையான பருவம். கிட்டத்தட்ட ஒரு நாளே கரைந்தது. வீடுகளையும், தெருக்களையும், அந்த ஊரின் பிச்சைக்காரர்களையும், கஞ்சா புகைப்பவர்களையும் நடந்தால் மட்டுமே அருகிலிருந்து பார்க்கமுடியும் என்று தோன்றியது. ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால் சாலையில் மனித நடமாட்டமே இருப்பதில்லை. தனித்துக்கிடப்பது போன்ற ஒரு மனநிலை உருவாகிவிடுகிறது.

இன்னொரு சமயம் ட்வின் சிட்டீஸ் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். பெங்களூர் தமிழ்க் குழந்தைகளை விடவும் நன்றாக அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. மற்றொரு நாள் டென்வரின் விவசாயிகளிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பயிர் செய்யும் காலத்தில் விதைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அறுவடையின் போது மீண்டும் விவசாயம் பார்க்கிறார்கள். Part time farmers. ஆனால் இந்தியாவில் விவசாயி முழுநேரமும் விவசாயியாகவே இருக்கிறான். கடன்காரன் ஆகிறான். இந்திய விவசாயியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் செய்யவேண்டிய வேலைகள் இருக்கின்றன எனத் தோன்றியது.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக டென்வர் மாகாணத்தின் தலைமையிடத்தில் நிகழ்ந்த மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இருபதுபேர் கூட போராட்டத்தில் இல்லை. வேடிக்கை பார்க்கத்தான் சென்றிருந்தேன். பேசச் சொன்னார்கள். பேசினேன். இப்படி எவ்வளவோ சுவாரஸியமான விஷயங்கள். இவற்றையெல்லாம் விடவும் சில சுவாரஸியமான சம்பவங்களும் உண்டு. ஆனால் அதைத் தனியாகத்தான் சொல்ல முடியும்.

தென்றல்: கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவிகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள். பள்ளிகளின் தரம், மாணவர்களின் மேம்பாடு, ஆசிரியர்களின் திறன் பற்றி நீங்கள் என்ன அவதானிக்கிறீர்கள்?
மணிகண்டன்: அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தனித்து இயங்குகிறவர்களாக (Indepedent) இருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவர்களாகக் குளித்து, அவர்களாக உண்டு, அவர்களாகப் பள்ளிக்குக் கிளம்பிச் செல்கிறார்கள். விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பொதுவான நிலை. ஆனால் நகர்ப்புற அல்லது தனியார் பள்ளிகளுக்கு இது வாய்ப்பதில்லை. குளிப்பாட்டி விடவேண்டும். உணவூட்டி விடவேண்டும். வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றிவிட்டு வரவேண்டும். மாலை நான்கு மணிக்கு ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு பொடிக் குழந்தைகள் சாரிசாரியாக நடந்து வீட்டுக்குச் செல்வதை அரசுப் பள்ளிகளில் இயல்பாகப் பார்க்க முடிகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் இது சாத்தியமில்லை. ஓரளவு காசு சேரச்சேர அதீதமான பயத்தைத் தேடிக்கொள்கிறோம். 'பைப் தண்ணியைக் குடிச்சா சளி புடிச்சுக்கும்' என்பதில் ஆரம்பித்து 'மண்ணில் விளையாடினால் பூச்சி வந்துடும்' வரைக்கும் எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள்! எட்டாம் வகுப்புக் குழந்தைகூடச் சாலையைத் தனித்துத் தாண்ட முடியுமாமல் தவிக்கிறது.

அதேபோல 'அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள்; யாரையும் கண்டுகொள்வதில்லை' என்பதெல்லாம் பொதுமைப்படுத்தப்பட்ட வாதம். பெரும்பாலான அரசு மற்று அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். நேரடியாகவே பார்த்திருக்கிறேன். பிறகு எங்கே தேங்கிப் போய்விடுகிறார்கள் என்று கேட்டால் exposure என்று சொல்லலாம். நகர்ப்புற, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கக்கூடிய நவீன வசதிகள் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை. வெளிப்புற ஆலோசகர்கள், பயிற்சியாளர்களை வைத்துப் பயிற்சிகள் அளிக்கப்பட்டால் பெரும்பாலான கிராமப்புற/அரசுப் பள்ளிகள் பின்னியெடுத்துவிடுவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.

தென்றல்: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
மணி : 'போகிற போக்கில் போய்க் கொண்டேயிருப்போம்' என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் செய்கிற வேலையை மனசாட்சிக்குப் பங்கமில்லாமலும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செய்துகொண்டிருக்க வேண்டும். அது நம்மை சரியான இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. 'இதனை இதனால் இதன் முடிக்கும் என்றாய்ந்து'தான் ஒவ்வொரு வேலையும் நம்மிடம் வந்து சேர்கிறது என முழுமையாக நம்புகிறேன். அதனால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கால்போன போக்கில் போய்க் கொண்டேயிருக்கலாம். வழியெங்கும் அன்பை விதைத்தல் தவிரச் சத்தியமாக வேறொன்றையும் யோசிக்கவில்லை.

"வாசிக்கிறோம், புத்தகம் எழுதுகிறோம். நான்கு பேர் நம் எழுத்தை வாசிக்கிறார்கள் என்ற அத்தனையையும் தாண்டி இது போன்ற காரியங்கள் காலாகாலத்துக்கும் நிம்மதியைத் தந்து கொண்டிருக்கும். அது போதும். எழுத்துவழியாகச் செய்யமுடிந்த முக்கியமான காரியம் இது என்று நினைத்துக் கொள்கிறேன்." என்கிறார் மணிகண்டன். அவரது முயற்சிகளை வாழ்த்துவோம்.

தொகுப்பு: அரவிந்த்

*****


மணிகண்டன் என்ற எழுத்தாளர்
மணிகண்டனின் முதல் கவிதைத் தொகுப்பு 'கண்ணாடியில் நகரும் வெயில்'. இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து 'சைபர் சாத்தான்கள்' என்னும் தொடர் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதையும் உயிர்மையே நூலாக வெளியிட்டது. கதை, கவிதை, கட்டுரைகள் என்று உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, புது எழுத்து, அம்ருதா, அமுதசுரபி எனப் பல இதழ்களில் எழுதினார். இவர் எழுதிய 'என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி', என்ற கவிதைத் தொகுப்பும், 'லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்', 'மசால் தோசை 38 ரூபாய்' போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் வாசகர்களால் நன்கு வரவேற்கப்பட்டன. தனது நிசப்தம் இணையதளத்திற்காக 2013ம் ஆண்டுக்கான சுஜாதா இணைய விருது பெற்றிருக்கிறார். குமுதம் ரிப்போட்டரில் இவர் எழுதிய 'கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ்' என்ற விழிப்புணர்வுத் தொடரும், தினமணியில் எழுதிய சினிமா பற்றிய 'செல்லுலாய்ட் சிறகுகள்' தொடரும் பரவலான வாசக கவனத்தைப் பெற்றன. 2016ம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவராக ஆனந்தவிகடன் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. விரைவில் 'மூன்றாம் நதி' என்னும் தலைப்பிலான நாவல் வெளியாக இருக்கிறது.

*****


விசும்பலின் ஓசை
அறக்கட்டளை உதவிகளின்போது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அவற்றை எண்ணிக் கண்ணீர் விட்டதுண்டு. உதாரணத்துக்கு ஒன்றைமட்டும் சொல்கிறேன்.

ராகவர்ஷினி என்ற எட்டுமாதக் குழந்தைக்கு ஈரலில் பிரச்சனை. ஈரல்மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. ஏழைக்குடும்பம். அறக்கட்டளையிலிருந்து எழுபதாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அவ்வப்போது விசாரிப்பேன். ஒருசமயம் பேசியபோது தேவையான பணத்தைப் புரட்டிவிட்டதாகவும் சிகிச்சைக்கு அனுமதி வாங்க அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். உறுப்புமாற்று அறுவை சிகிச்சை என்பதால் நிறைய நடைமுறைச் சிக்கல்கள்.

இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். ஒருநாள் குழந்தையின் உறவினர் அழைத்தார். அவர்தான் அறக்கட்டளையோடு தொடர்புகொண்டு எல்லாம் செய்தவர். "ஆபரேஷன் முடிஞ்சுதுங்களா? குழந்தை எப்படி இருக்கு?" என்றேன்.

"இல்ல சார்..ஆபரேஷன் நடக்கல" என்றார்.

ஒருவேளை அதிகப் பணம் தேவைப்படுகிறதோ என்று நான் நினைக்கும் சமயத்தில், "உங்ககிட்ட பணம் கேட்ட சமயத்திலேயே ரொம்ப லேட் செஞ்சா குழந்தை தாங்காதுன்னு சொன்னாங்க. இவ்வளவு நாள் தாங்கினதே பெரிய காரியம். அப்ரூவல், பெர்மிஷன் அங்க இங்கன்னு இழுத்தடிச்சுட்டாங்க" என்றார்.

"குழந்தைக்கு என்னாச்சு?"

என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே பதிலைத்தான் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரே தொடர்ந்து "உங்க அட்ரஸை எஸ்.எம்.எஸ். அனுப்பறீங்களா?" என்றார்.

"எதுக்குங்க?"

"ஆஸ்பத்திரியில் இருந்து எல்லாப் பணத்தையும் திரும்ப வாங்கிட்டோம். யார்கிட்ட இருந்து வாங்கினோமோ அவங்கவங்களுக்கு டி.டி. அனுப்பிட்டு இருக்கோம்."

எனக்குச் சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? ஏற்கனவே சில லட்சங்களைச் செலவு செய்திருக்கிறார்கள். வசதியான குடும்பமும் இல்லை. இந்தத் தொகை அவர்களுக்கு நிச்சயம் பயன்படும். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாருக்கும் எதுவும் தெரியப்போவதுமில்லை. ஆனாலும் திருப்பிக் கொடுக்கிறார்கள்!

"ஏன் திருப்பித் தருகிறீர்கள்" என்று நான் கேட்டதற்கு, "எங்களுக்கும் மனச்சாட்சி இருக்கு சார். இந்தப் பணம் இந்தமாதிரிக் கஷ்டப்படற .வேற யாருக்காச்சும் பயன்படுமில்ல? அதுனால குழந்தையோட அப்பாவும் அம்மாவும் பணத்தைத் திருப்பி கொடுத்துடச் சொல்லிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கா அனுப்பிச்சிட்டிருகோம்" என்றார். முகவரியைக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தேன்.

அன்றைய இரவில் எனது விசும்பலின் ஓசை, மின்விசிறியின் சப்தத்தில் மற்றவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

*****


அறக்கட்டளைக்கு உதவ
அறக்கட்டளைக்குத் தரப்படும் நன்கொடைகளுக்கு இந்தியாவில் வரிவிலக்கு உண்டு. உதவ விரும்புவோருக்குப் பணம் அனுப்பவேண்டிய வங்கி விவரம் இங்கே: www.nisaptham.com

© TamilOnline.com