மாணவர்க்கான 'இன்டெல் டேலன்ட் சர்ச்' போட்டிகளில் முதல் மூன்றில், இரண்டு இடங்களைத் அமெரிக்கத்தமிழ் மாணவியர் மீனா ஜகதீசனும் காவ்யா ரவிச்சந்திரனும் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளார்கள். அமெரிக்காவின் தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் போட்டியாகும் இது. இப்போட்டியில் இவ்வாண்டு புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களான எட்டு மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர். அவர்களுள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இருவர். இரண்டாமிடம் மீனா ஜகதீசனுக்கும் மூன்றாமிடம் காவ்யா ரவிச்சந்திரனுக்கும் கிடைத்துள்ளது.
மீனா ஜகதீசன், நியூ ஹாம்ப்ஷயர்
போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர் மீனா ஜகதீசன். இவர் நியூ ஹாம்ப்யர் எக்செடரில் இருக்கும் ஃபிலிப்ஸ் எக்செடர் அகாடமியின் (PEA) சீனியர். விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குப் போக இருக்கிறார். பள்ளி கணிதச் சங்கத்தின் இணைத்தலைவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக MIT Primes நடத்திய ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்தவரும் கூட. ஆரம்பக்கல்வியை டவ்னர்ஸ் க்ரூவில் Avery Coonley பள்ளியில் படித்தார்.
துவக்கப்பள்ளி மற்றும் ஜூனியர் பள்ளியில் படிக்கும்போது Art of Problem Solving இணையதளம் உட்படப் பல தளங்களின் துணையுடன் கணித அறிவை மீனா வளர்த்துக்கொண்டார். கணிதம் மற்றும் அறிவியலுக்கான சிறப்புக் கோடைமுகாம்களிலும் பங்கேற்றார். ஃபிலிப்ஸ் எக்செடர் அகாடமியின் தலைவர் டாக்டர் ஜூமிங் ஃபெங்கை வாரந்தோறும் சந்தித்து ஆலோசனை பெறுவார் மீனா. டாக்டர். ஃபெங் மாணவர்களின் திறனறிந்து ஊக்குவிப்பதில் தேர்ந்தவர்.
ஆராய்ச்சியைப் பொருத்தவரை அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளி அளவில் நடத்தப்படும் பல பயிலரங்குகளில் மீனா பங்கேற்றிருக்கிறார். பேரா. சோகொலோவின் SUNY, Stonybrook Garcia program அவற்றில் முக்கியமானது. கார்சியா திட்டத்தின் ஒரு பகுதியாக பேரா. சோகொலோவின் குழுவில் பணிபுரிந்தார் மீனா. மீனாவின் முதல் கணித ஆராய்ச்சி டாக்டர் சூசன் டர்ஸ்ட் வழிகாட்டுதலில், உயர்நிலைப்பள்ளியில் முதலாண்டு படிக்கும்போது மேத்கேம்ப்பில் நடந்தது. இந்த அனுபவங்கள் மீனாவுக்கு மேலும் இரண்டு கணிதத் திட்டங்களை MITயின் கணிதத்துறை வழிகாட்டலில் செய்யத் துணையானது.
2015ன் கோடைக்காலத்தில், MITயின் பிரயோக கணிதத்துறைப் பேராசிரியர் ஜெயர்ன் டங்க்கெல் தலைமையில் ஓர் உயிரியல் ஆராய்ச்சிப்பணியில் மீனா பங்கேற்றார். இந்தத் திட்டத்திற்கு ரிசர்ச் சயன்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் ஆதரவும் இருந்தது. இதை இன்டெல் அங்கீகரித்து.
MIT-PRIMES திட்டம் பாஸ்டன் மற்றும் பிற இடங்களைச் சார்ந்த, பல்வேறு கல்வி வழித்தடங்களைக் கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக்குப் பின்னான ஆய்வுத் திட்டமாகும். இது புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், குழுவாக ஆராய்ச்சி செய்யவும் வழிகோலுகிறது.
மீனாவின் குடும்பம் ஒரு கணிதக்குடும்பம். தாய்வழி, தந்தைவழி தாத்தா, பாட்டிகள் யாவருமே கணிதப் பேராசிரியர்கள். தந்தைவழித் தாத்தா, பாட்டி இருவருமே கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தாய்வழித் தாத்தா, பாட்டி நியூ யார்க் பெருநகரப் பகுதியில் உயர்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். பெற்றோர்கள் இருவரும் கணினி விஞ்ஞானிகள். அப்பா சிகாகோவில் பேராசிரியர். அம்மா பெல் லேப்ஸ், நோக்கியா தொழில்நுட்பப் பிரிவில் உயர்பதவியில் இருக்கிறார். மீனாவின் சகோதரர் ரவி ஹார்வர்டில் கணிதம் மற்றும் புள்ளியியலில் முதலாண்டு படிக்கிறார்.
கணிதம் சொந்த வாழ்க்கையில் உதவுவதாகவும், மாறுபட்ட பல அனுபவங்களைத் தருவதாகவும் மீனா கூறுகிறார். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நுண்ணறிவு மேம்படவும் கணிதம் துணைசெய்வதாகச் சொல்கிறார்.
*****
காவ்யா ரவிச்சந்திரன், ஒஹையோ
காவ்யா ரவிச்சந்திரன் ஒஹையோ, ஷேக்கெர் ஹைட்ஸில் இருக்கும் ஹாத்வே பிரௌன் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். இளவயதிலிருந்தே கணிதம், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெருவிருப்பம் உடையவர். இவரது முதல் ஆய்வு முயற்சி ஐந்தாம் வகுப்பில். தண்ணீரின் pH அளவு குறித்தது அது. இன்று இன்டெல் பரிசுபெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
மனிதகுலத்துக்கு உதவுபவையாகத் தன் ஆய்வுகள் இருக்க வேண்டும் என்பது காவ்யாவின் இலக்கு. மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கும் ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். குறிப்பாக அதன் நுண்ணிய குழாய்கள் மூலம், நேனோ துகள்களுடன் மருந்துகளைச் செலுத்துவதன்மூலம் அடைப்பையும், பக்கவாதத்தையும் முன்னிலும் திறம்படக் குணமாக்க முடியும் என்பது இவரது ஆய்வுமுடிவு. காவ்யா, மூன்றரை வருடங்களாக இந்த ஆய்வுகளைச் செய்தார். புதிய முயற்சிகளால் இதை மேம்படுத்தினர். பலன், இன்டெல் பரிசு.
வெற்றிக்கு முக்கியக் காரணம் தனது பெற்றோர் என்கிறார் காவ்யா. தந்தை ரவிச்சந்திரன் மென்பொருள் வல்லுநர். PNC வங்கியில் risk model மற்றும் பகுப்பாய்வு உயரதிகாரியாகப் பணியாற்றுகிறார். தாய் ஜெயஸ்ரீ IBMல் மென்பொருள் தயாரிப்பு மேலாளர். இருவருமே கணிதம் மற்றும் அறிவியலில் விருப்பம் கொண்டவர்கள்.
அறிவியலில் ஆர்வம் ஏற்பட பெற்றோர் ஒரு காரணம் என்றால், வழிநடத்திய டாக்டர் அனிர்பன் சென்குப்தா மற்றும் டாக்டர் க்ரிஸ்டா பாவ்லோஸ்கி ஆகிய ஆசிரியர்கள் மற்றொரு காரணம் என்கிறார்.
ஆர்வங்களை வளர்த்துக் கொள்ளும் இளையோர், அதே சமயத்தில் தன்னிச்சையாக தாங்களாகவே அறிவியல்/தொழில்நுட்பம்/ கணிதம் பற்றி எவ்வித கருத்துக்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. ஆர்வமும், முயற்சியும், பயிற்சியுமே வளர்வதற்கும் கற்பதற்கும் அவசியமானவை என்பதை உணர வேண்டும்.
ஒவ்வொருமுறை ஒரு கருதுகோளை உருவாக்கும்போதும் முதலில் அதை முழுமையாக அறிந்து, உங்களுக்கு நீங்களே தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
துறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றுக்கிடையே தொடர்புகளை உருவாக்கமுயலுங்கள். முதலில் அவை சரியாக வேலை செய்யாவிட்டாலும் விடாமல் தொடர்பு காணுங்கள். அதைப்பற்றி நிறைய வாசித்து அறியுங்கள். இதுவே வெற்றிக்கு வழி என்கிறார், காவ்யா.
இன்டெல் அமைப்பின் இந்தப் போட்டியில் இந்த வருடம் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வென்றிருக்கின்றனர். போட்டிகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் உட்படப் பல முன்னாள் மாணவர்கள் இருந்தனர். நீதிபதிகள், ஒவ்வொரு போட்டியாளரையும் மிக ஆழமாகத் துருவிக் கேட்டு நேர்காணல் செய்தனர்.
வளரும் கணிதமேதைகள் இருவரையும் மேலும் சாதனைகள் செய்யத் தென்றல் வாழ்த்துகிறது. |