கௌரி கிருபானந்தன்
த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சு. கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர்கள் பலர். அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்து வருபவர் கௌரி கிருபானந்தன். இவர், செப்டம்பர் 2, 1956ல், திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி-ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் வேலை பார்த்ததால் இவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1976ல் வங்கியதிகாரியாகப் பணியாற்றி வந்த கிருபானந்தனுடன் திருமணம் நடந்தது. கணவரது வேலை காரணமாகச் சிலகாலம் தஞ்சாவூரின் மெலட்டூரில் வசிக்கநேர்ந்ததது. அதுவரை தமிழைப் பேசமட்டுமே அறிந்திருந்த கௌரி, அக்காலகட்டத்தில் ஓய்வுநேரத்தை தமிழை முறையாகப் படிக்கவும் எழுதவும் கற்கப் பயன்படுத்தினார். தமிழ் கற்கக் கற்க, இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. நூலகத்திற்குச் சென்று தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் என்று தேடித்தேடி வாசித்தார். அசோகமித்திரன், தி. ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, ராஜம்கிருஷ்ணன், சிவசங்கரி போன்றோரின் நாவல்கள் இவரது வாசிப்பார்வத்தை அதிகரித்தன. தெலுங்கில் கல்வி பயின்றிருந்ததால் தெலுங்கும் சரளமாகக் கைவந்தது. இரண்டு மொழிகளிலும் நூல்களை மாறி மாறி வாசித்தார், தேர்ச்சி வந்தது.

நாற்பது வயது நெருங்குகையில் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின் நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. அக்காலகட்டத்தில் இன்னும் நிறைய வாசித்தார். தெலுங்கில் ஒரு நாவலையும், அதே நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசிப்பது இவருக்குப் பிடித்தமான ஒன்று. ஒருசமயம் அவ்வாறு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பான ஒரு படைப்பைப் படித்தவர், அந்த மொழிபெயர்ப்பின் தரத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மோசமான மொழிபெயர்ப்பில் இருந்த அந்நூல் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளருக்குக் கடிதம் எழுத, அவர், "உனக்குத் திறமை இருந்தால் நீ எழுதேன் பார்க்கலாம்" என்று பதில் அனுப்பிச் சீண்ட, அந்தச் சவாலே, கௌரி கிருபானந்தனின் எழுத்துலக வாழ்க்கைக்குப் பிள்ளையார்சுழி ஆனது.

Click Here Enlargeபிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் 'பந்தயம்' சிறுகதையை மொழிபெயர்த்து குங்குமச்சிமிழ் இதழுக்கு அனுப்பினார். 1995ம் ஆண்டில், கௌரியின் 39ம் வயதில் அச்சிறுகதை வெளியானது. அதற்கு வாசக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மொழிபெயர்ப்புகளில் அதிகக் கவனம் செலுத்தினார். குறிப்பாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று மொழிபெயர்த்தார். அவரது புகழ்பெற்ற 'அந்தர்முகம்' நாவலை இவர் மொழிபெயர்க்க, பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்குக்குமாகப் பல நூல்களை மொழிபெயர்த்தார். வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற படைப்புகளான தளபதி, பிரளயம், லேடீஸ் ஹாஸ்டல், ரிஷி, தூக்கு தண்டனை, பணம் மைனஸ் பணம், துளசிதளம், மீண்டும் துளசி போன்றவற்றைத் தமிழ் வாசகர்கள் பரவலாக அறிய இவர் காரணமானார். எண்டமூரி வீரேந்திரநாத்துக்குத் தமிழில் மிகப்பெரிய வாசகர் வட்டம் அமைய கௌரி கிருபானந்தனே காரணம் எனலாம். வீரேந்திரநாத்தின் படைப்புகள் மட்டுமல்லாது தெலுங்கு இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளரும், 'நாவல் ராணி' என்று போற்றப்படுபவருமான யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். சங்கமம், மௌனராகம், நிவேதிதா, சம்யுக்தா, தொடுவானம் போன்ற சுலோசனாவின் நூல்கள் கௌரிக்குப் புகழ் சேர்த்ததுடன், சுலோசனா ராணிக்கும் தமிழில் தக்கதொரு அடையாளத்தை, வாசக வட்டத்தை ஏற்படுத்தித் தந்தன.

டி. காமேஸ்வரி, ஓல்கா உள்ளிட்ட பல புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழ்ப்படுத்தியிருக்கும் கௌரி, தமிழிலிருந்து தெலுங்கிற்கும் அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, வாஸந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி எனப் பலரது படைப்புகளை வழங்கியிருக்கிறார். அத்தோடு, தானும் ஒரு சிறுகதை ஆசிரியராக, தமிழிலும் தெலுங்கிலும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், சிநேகிதி, தெலுங்கின் விபுலா எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் இவர் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். அவற்றில் எண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற, விற்பனையில் சாதனை படைத்த சுயமுன்னேற்ற நூல்களும் அடங்கும். ஆந்திராவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் போராளியான கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்றை 'ஆளற்ற பாலம்' என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்நூல் பரவலான வாசக வரவேற்பைப் பெற்றுள்ளது.

எளிய நடையில், எல்லோரும் வாசிக்கும் வகையில், சிடுக்கு வார்த்தைகள் ஏதுமில்லாமல் இருப்பது கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பின் மிகப்பெரிய பலம். இரண்டு மொழிகளின் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிவரும் சேவை குறிப்பிடத்தகுந்தது. தன்னை வெளிப்படுத்தாமல் மூலத்தின் பெருமைகளை எடுத்துரைப்பவரே சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது, புகழையோ, கௌரவங்களையோ நோக்கமாகக் கொண்டிராமல் தன் கடமை இது என்ற எண்ணத்தில் இப்பணியைச் செய்துவரும் இவர், தனது படைப்புகளுக்காக திருப்பூர் லயன்ஸ் க்ளப் விருது, LEKHINI organisation வழங்கிய SAKHYA SAHITHI விருது உட்படப் பல விருதுகள், பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். குப்பத்தில் அமைந்துள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் நடந்த மொழிபெயர்ப்புப் பற்றிய கருத்தரங்கில் சிறப்புரையாற்றி இருக்கிறார். மாணவர்களுக்கான பத்துநாள் மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் மொழிபெயர்ப்பின் நுணுக்கங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

'விமுக்தா' என்ற பெயரில் திருமதி ஓல்கா எழுதிய தெலுங்கு நாவலுக்கு 2015ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கும் அதே சமயத்தில் கௌரி கிருபானந்தனின் 'மீட்சி' என்ற அதன் மொழிபெயர்ப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. "மூலநூலுக்கும் அதன் மொழிபெயர்ப்புக்கும் ஒரே ஆண்டில் விருதுகள் கிடைத்திருப்பது ஆச்சரியமான, சந்தோஷம் நிறைந்த நிகழ்வு" என்று அதைப்பற்றி கௌரி குறிப்பிடுகிறார்.

இவர் மொழிபெயர்த்திருக்கும் பத்து நூல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அவற்றில் கு. அழகிரிசாமி எழுதிய 'அன்பளிப்பு' சிறுகதைத் தொகுப்பும் அடக்கம். சாகித்ய அகாதமியே அந்நூலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அசோகமித்திரன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ஓல்கா, சுலோசனா ராணி, எண்டமூரி வீரேந்திரநாத் போன்றோர் கௌரி கிருபானந்தனை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களாவர். மகன்கள். மணமாகி அமெரிக்காவில் வசிக்க, கணவருடன் சென்னையில் வசித்தபடி அமைதியாக எழுத்துப்பணி ஆற்றிவருகிறார் கௌரி கிருபானந்தன். gowri.kirubanandan.com இவரது வலைத்தளம். கணவர் கிருபானந்தனும் இலக்கிய ஆர்வலரே. இலக்கிய வளர்ச்சிக்காக கலந்துரையாடல்கள், நூல் விமர்சன அரங்குகளை நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார். ilakkiyavaasal.blogspot.in என்பது இவர்களது 'குவிகம்' இலக்கிய அமைப்பின் வலைமனை ஆகும்.

அரவிந்த்

© TamilOnline.com