தென்றல் பேசுகிறது
உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஃபின்லாந்தில்தான் உள்ளது. அங்கும் அவர்கள் எப்போதும் அதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கருத்தாக உள்ளனர். அதைப்பற்றிப் பேசுகையில் கல்வியாளர் ஒருவர், "பெரியவர்கள் என்ற முறையில் எங்களுடைய பொறுப்பு மாணாக்கர்களை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான்" என்று கூறியது கவனத்தைக் கவர்ந்தது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதற்கொண்டு இந்தியாவில் பல இடங்களிலும் மாணவர்களை அரசியல் செய்யவைப்பது மிக அதிகமாக உள்ளதைக் காண்கிறோம். எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கிடையில் பெற்றோர் தம் குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களோ அங்கே போய், ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் வேடமிடும் சில தொழில்முறை அரசியல்வாதிகளின் கையில் மாட்டிக்கொண்டு வழிதப்பி விடுகிறார்கள். கல்வி வளாகங்களைக் கலக, கலவர வளாகங்களாக்கி உண்மையாகப் படிக்க நினைக்கிறவர்களையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள். அதன் மற்றொரு வெளிப்பாடுதான் மாணவர் மன்றத் தேர்தல்களே அரசியல் பின்னணியில் நடக்கின்ற அவலம். கல்விக்கூடங்கள் வன்முறை உற்பத்திக் கழகங்களாக மாறிவிடக்கூடாது. அக்கறையுள்ள பெற்றோரும், கல்வியாளர்களும் இதை ஒருமனதாக, வலுவாகக் கண்டிக்கவேண்டும். மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, கல்விக்காலத்துக்குப் பின்னர் அவர்கள் தமக்கு விருப்பமானதைச் செய்துகொள்ளலாம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி, முழுமையானதாகவும் பண்பைத் தருவதாகவும் இருக்கும். அதை நாம் ஃபின்லாந்தின் கல்விமுறையிலிருந்து கற்கவேண்டும்.

*****


இல்லினாய்ஸ் மக்கள் 8வது காங்கிரஷனல் மாவட்ட வேட்பாளரான தமிழ் அமெரிக்கர் ராஜா கிருஷ்ணமூர்த்தியை பிரைமரியில் தேர்ந்தெடுத்து ஒரு சரித்திரம் படைக்கும் முயற்சியில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். திறனும், நெடுநோக்கும் கொண்ட அமெரிக்கத் தமிழர்கள் இந்நாட்டின் அரசியல் களத்திலும் கால்தடம் பதித்து, நாம் எதிலும் எவருக்கும் சளைத்தவரல்ல என்பதை நிறுவுவதில் இப்படிப்பட்ட வெற்றிகள் பெரிதும் உதவும். ஒவ்வோர் அடியாக எடுத்து வைப்போம். இலக்கை அடைந்துவிடலாம். ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு நல்வாழ்த்துக்களையும், அவருக்குப் பக்கபலமாக இருப்பவர்களுக்குப் பாரட்டுக்களையும் உரித்தாக்குகிறோம். நவம்பர் தேர்தலிலும் உங்கள் ஆதரவு தொடரட்டும்.

*****


சென்ற 13 ஆண்டுகளில் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்திருக்கிறதாம். இப்படிப் பல நோய்களும் அபாயகரமான வகையில் அதிகரிக்கக் காரணம் உணவுப்பொருட்களில் காணப்படும் மிகையான பூச்சிக்கொல்லிகளும் பிற ரசாயனங்களும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இயற்கை விவசாயம் ஒன்றே இதற்குத் தீர்வு. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் 100 சதவீதம் இயற்கை விவசாய மாநிலமாக மாறிச் சாதனை படைத்துள்ளது. அதற்கு உதவிகரமாக இருந்தவர் ராஜ் சீலம். அவரது அனுபவங்கள் மிகுந்த நம்பிக்கையளிப்பவை. மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் வா. மணிகண்டன். வெறும் எழுத்தாளராக நின்றுவிடாமல், தீர்வுகாண்பதிலும் ஈடுபட்டுப் பல சமுதாயப் பணிகளைச் செய்துவரும் இளைஞர். மென்பொருள் துறையில் பணிசெய்தவாறே இவற்றைச் செய்யும் அவரது நேர்காணலும் உற்சாகம் தருவதக இருக்கும். மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் திறன் தேடல் போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ள மீனா ஜகதீசன், காவ்யா ரவிச்சந்திரன் பற்றிய குறிப்புகளும் பெருமைக்குரியவை. இன்னும் பல உள்ளே, நீங்களே பாருங்கள், படியுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.

வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, ஸ்ரீராமநவமி மற்றும் மஹாவீர் ஜயந்தி வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஏப்ரல் 2016

© TamilOnline.com