சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
ஜனவரி 23, 2016 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பார்ட்லெட் உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழாவைச் சிறப்பாக கொண்டாடியது. திருமதி. அனுபமா சந்திரசேகர் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கத் தலைவர் திரு. சாக்ரடீசு பொன்னுசாமி வரவேற்புரையாற்றினார்.

டாக்டர். சவரிமுத்து தமிழின் தொன்மை, வளர்ச்சி குறித்து விவரித்தார். வரவிருக்கும் 10வது உலகத் தமிழ் மாநாட்டைச் சிகாகோ நகரில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் துணையுடன் நடத்த முற்பட்டிருப்பதையும் அறிவித்தார்கள். சவரிமுத்து அவர்களுக்கு திரு. ஆனந்தன், திரு. டோனி சூசை ஆகியோர் பொன்னாடை போர்த்தி 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கினார்கள். மறைந்த திரு. கிங்சன் ராசு அவர்களின் தொண்டை நினைவுகூர்ந்து முன்னாள் தலைவர் திரு. ரகுராமன் மற்றும் அண்ணா அலும்னி சார்பாக திரு. வெங்கட் ரவில்லா ஆகியோர் நினைவுக்கேடயம் வழங்கினர். அதை செல்வி. கீதா கிங்சன் பெற்றுக்கொண்டார்.

சிகாகோ கவிஞர்கள் திரு. முத்து வேலு, திரு. ராஜேஷ் சுந்தர்ராஜன் ஆகியோரின் கவிதைகள் அரங்கேறின. திருமதி, குழலி முத்து குழுவினர் வில்லுப்பாட்டில் தமிழர் திருநாள் பற்றி எடுத்துரைத்தனர். தொடர்ந்து சீசு குழுவினரின் நகைச்சுவைக் குறுநாடகம் “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" மக்களை சிரிப்புக்கடலில் ஆழ்த்தியது. சிறப்பு விருந்தினர்களாக திரு. பாக்யராஜ் மற்றும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் வருகை தந்தனர்.

முன்னாள் தலைவர் திரு அறவாழி அவர்களுக்கு முன்னாள் தலைவர் திரு. சோமு திரு மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. சீனி குருசாமி ஆகியோர் சமூகத்தொண்டு விருதை வழங்கினார்கள். முத்தாய்ப்பாக செங்காந்தள் நாட்டியக் குழுவினரின் கிராமப்புற நடனங்களான கும்மி, மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால்குதிரை, பறையாட்டம் மற்றும் ஒயிலாட்டம் அரங்கை அதிரவைத்தது.

நடனப் போட்டியைத் துவங்கும் விதமாக பரதத்தை ஓரணி திறம்பட ஆடியது. மற்றொரு நாட்டியக் குழுவான Dwance Academy வழங்கிய கதம்ப நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் களமிறங்கினர் சிகாகோ சூறாவளிகள் குழுவினர். இறுதியாக இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படத்தின் இசையுடன் தாரை தப்பட்டை குழுவின் கதம்ப நடனம் போட்டியை நிறைவுசெய்தது. நடனப்போட்டியில் Dwance அகாடமி முதல் பரிசும், சிகாகோ சூறாவளிகள் இரண்டாவது பரிசும் பெற்றனர்.

திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் பரிசு கொடுத்தார். செயலாளர் திரு. மணி குணசேகரன் பாராட்டுரை வழங்க, திருமதி. மாசிலாமணி மாணிக்கம், திருமதி. சுசீலா சுப்பிரமணியம் ஆகியோர் பூர்ணிமாவுக்குப் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கினார்கள். நாற்று நடுவதுமுதல் அறுவடைவரை உள்ள செயல்பாடுகளை கிராமிய நடனம்மூலம் கண்முன்னே நிறுத்தினார்கள் 'அறுவடை அரங்கேற்றம்' குழுவினர். சங்கப் பொருளாளர் திரு. பிரசாத் ராஜாராமன் நன்றி நவின்றார்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி திரு. சந்திரகுமார் வரவேற்புரையுடன் பாக்யராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி விழா தொடங்கியது. பாக்யராஜ் அவர்களின் கலகலப்பான முன்னுரையுடன் 'எந்தப் பருவம் இனிமையான பருவம்' விவாதமேடை தொடங்கியது. 'பள்ளிப்பருவமே, புதுமண வாழ்வே, நடுத்தர வயதே, அசைபோட்டு அகம்மகிழும் முதியோர் பருவமே' என நான்கு குழுவினர் விவாதித்தனர். பள்ளிப்பருவமே இனிய பருவம் என நடுவர் தீர்ப்பளித்தார்.

சிவக்குமார் முருகேசன்,
சிகாகோ

© TamilOnline.com