TMM: பொங்கல் விழா
ஜனவரி 30, 2016 அன்று நேஷுவாவில் (நியூ ஹாம்ப்ஷயர்) 'தமிழ் மக்கள் மன்றம்' தனது தொடக்க விழாவாகப் பொங்கல் விழாவை நடத்தியது. இதுவொரு லாபநோக்கற்ற அமைப்பாகும்.

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடைய இந்த நிகழ்ச்சி நேஷுவா நார்த் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முன்மண்டபத்தில் ஆளுயர மாட்டுவண்டியுடன், புகைப்பட ஸ்டூடியோ, பொங்கல் பானை, கரும்பு, தோரணங்கள் மற்றும் மக்களின் வண்ண உடைகள் எல்லாம் தைப்பொங்கல் நடப்பதாகவே எண்ணத் தோன்றியது.

ஐநூறுக்கும் மேலானோர் வந்திருந்த இந்த நிகழ்ச்சியில் சிறியோர், பெரியோர் யாவரும் கலைநிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். பாரதி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் மாறுவேடம், ஆடல் பாடல்கள், இசை நடன நாடகம், கருவிகளுடன் இன்னிசை, கவிதை எனத் திக்குமுக்காடும் அளவுக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. சிசுபாரதி பள்ளி மாணவர்கள் இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களைப் பாடி நிறைவு செய்தனர். கனெக்டிகட் 'மானுடம்' பறைக் குழுவினரின் ஆட்டமும் பாட்டமும் அபாரமாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக திருமதி. ரஞ்சனி சைகல் (ஏகல் வித்யாலயா), திருமதி. அபர்ணா பாலாஜி (அப்யாஸ் இசைப்பள்ளி) மற்றும் லக்ஷ்மி முனுகூர் (தமிழ் அறக்கட்டளை) பங்கேற்றனர். மூவரின் சேவைகளைப் பாராட்டி, மன்றக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். மன்றத்தின் சார்பாக சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கப்பட்டது

மேலும் தகவலுக்கு: www.tmm-usa.org

கார்த்திக்,
நேஷுவா, நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com