டாலஸ்: பொங்கல் விழா
ஜனவரி 30, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் DFW கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடியது. மாட்டுக்குப் பொங்கல் படைத்துக் கொண்டாடும் பொருட்டு, பிரத்தியேகமாக மாடு ஒன்று தொலைதூர நகரத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மேடை நிகழ்ச்சியில் பல்வேறு நடனங்கள் இடம்பெற்றன. நடிகர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றுச் சுவைபடப் பேசினார்.

கோலப்போட்டி, சக்கரைப் பொங்கல் போட்டி, ஓவியப் போட்டியுடன் பாரம்பரிய உடைப் போட்டியும் நடந்தது. சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டி, சாக்கு ஓட்டம், உறியடித்தல் போட்டிகள் இடம்பெற்றன. இரவு சுமார் 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. அனைத்தையும் முப்பது பேர் கொண்ட தன்னார்வக் குழுவினர் செய்திருந்தனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட முந்தைய கமிட்டி உறுப்பினர்களுக்குத் தான் வரைந்த ஓவியங்களை முந்தைய தலைவர் கீதா அருணாச்சலம் பரிசாக அளித்தார். உபதலைவர் சித்ரா மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் கால்டுவெல், செயலாளர் புகழ், பொருளாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com