ஜனவரி 30, 2016 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் (GATS) பொங்கல் திருவிழாவை நடத்தியது. 1600க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடி அங்கே பானையில் பொங்கலிட்டுக் கொண்டாடினர். தமிழர் பாரம்பரிய விளையாட்டான 'உறியடி'யில் பெரியவர்முதல் குழந்தைகள்வரை பங்கேற்று மகிழ்ந்தனர்.
கோலப்போட்டியில் மகளிர் குழுக்கள் பலவிதமான கோலங்களை வரைந்து திறமை காட்டினர். அமெரிக்கப் பறையிசைக்குழுக் கலைஞர்கள் பறை வாசித்தனர். கேட்ஸின் தொண்டுக்குழு, சென்னை வெள்ள நிவாரணத்தில் ஆற்றிய தொண்டு குறித்துத் தெரியப்படுத்தினர். இலவச மருத்துவ முகாமுக்காகச் சென்றுவந்த மருத்துவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்து, நன்கொடைத் தொகை, உதவும் கரங்கள் மற்றும் விபா அமைப்பினரிடம் சேர்ப்பிக்கப்பட்டுப் பயனளித்ததைக் காணொளிமூலம் பார்க்க முடிந்தது. 300க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெரியோரும் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் காண்போர் மனத்தைக் கொள்ளைகொண்டன.
இரவுணவுக்குப் பிறகு நடந்த 'இது உங்கள் மேடை' நிகழ்ச்சியில் இயக்குனர் திரு. பாக்யராஜ் தலைமையில் உள்ளூர்ப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தலைப்பு 'யாருடன் கூடிக் குலாவினால் மிகுந்த இன்பம் - காதலியுடனா, மனைவியுடனா, நண்பர்களுடனா, பெற்றோர்களுடனா, குழந்தைகளுடனா'. அரங்கம் நிறைந்த கூட்டம் கைதட்டி ரசித்தது.
மொத்தத்தில் தித்திக்கும் பொங்கலை, நண்பர்களுடன் கூடிக் குலவிக் கொண்டாடி மகிழ்ந்தனர்
சதீஷ் பாலா, அட்லாண்டா, ஜார்ஜியா |