பிப்ரவரி 06, 2016 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் (New England Tamil Sangam-NETS) பொங்கல் விழாவை லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, வண்ண வண்ணச் சேலைகள் தரித்து விழாக்குழுவினர் வரவேற்றனர். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பாஸ்டனைச் சுற்றியுள்ள மாசசூசெட்ஸ், கனெக்டிகட், ரோட் ஐலண்ட், நியூ ஹாம்ஷயர், வெர்மான்ட் என்று பல மாகாணங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் சங்கத் தலைவர் திருமதி. பமிலா வெங்கட் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிகளைத் திரு. பூங்குன்றன் வீரமணியும், திருமதி. சாந்தி சுந்தரமூர்த்தியும் தொகுத்து வழங்கினர். நெட்ஸ் இளைஞர் குழு உறுப்பினர்களுக்கும் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பெரும்பாலும் திரைப்படங்களைத் தொடர்புபடுத்தியே நிகழ்ச்சிகளை அளித்தார்கள். அதிலும், கிராமிய உடைகளுடன் வலம்வந்த கலைஞர்கள் சற்றுக் கூடுதல் கைதட்டல் பெற்றனர். நமது பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிலப்பதிகாரத்தில் "ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும்" என்றும், சீவகசிந்தாமணியில் "அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே" என்றும், திருப்பாவையில் "சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது பறை. இந்த இசைக்கருவி தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவி. கனெக்டிகட் மானுடம் குழுவின் பறையிசை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது. தலைவர் பமிலா வெங்கட் கலைஞர்களைப் பாராட்டிப் பரிசளித்தார். இறுதியில் நெட்ஸ் செயற்குழுவின் பொருளாளர் திரு. கமலனாதன் ஞானதேசிகன் நன்றியுரையோடு மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.
வாழையிலை விருந்து மிகச்சிறப்பு. உணவுப்பகுதியில் செயலாளர் திரு. பூங்குன்றன் தருமராசன் மற்றும் குழுவினர் திறம்படச் செயலாற்றினர். நாமும் "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு விடைபெற்றோம்.
முனைவர் ரமேஷ், மாசசூசெட்ஸ், பாஸ்டன் |