பிப்ரவரி 7, 2016 அன்று டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் (TAGDV) பொங்கல் விழாவை மாண்ட்கோமரி சமுதாயக் கல்லூரி அரங்கத்தில் கொண்டாடியது. குளிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் திரளாக வந்து விழாவில் பங்கேற்றனர்.
நமது பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், கோலாட்டம், கும்மி எனப் பல்வேறு நடனங்களைக் குழந்தைகள் உற்சாகமாக வழங்கினர்.
'பாரம்பரிய உணவுகள்' என்ற தலைப்பில் நடந்த சமையில் போட்டியில் பிடிகொழுக்கட்டை, தவலைவடை, போளி, கீரைவடை, முறுக்கு, பூசணி அல்வா எனச் செய்து ஜமாய்த்தனர். போட்டியில் முதல் இடத்தை திருமதி. லதா சந்திரமௌலியும், இரண்டாமிடத்தை திருமதி. ரேகா ஷ்யாம்சுந்தரும் வென்றனர்.
விழாவின் முக்கிய அங்கமாக 'மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பது வீட்டிலா, வெளியிலா' என்ற தலைப்பில் திரு. மோகன்ராம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக வரவிருந்த திரு. மதுரை முத்துவின் மனைவிக்கு நினைவஞ்சலி செலுத்திய பின் பட்டிமன்றம் துவங்கியது. நடுவர் 'மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பது வீட்டிலேயே' எனத் தீர்ப்பளித்தார்.
லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா; புகைப்படம்: கற்பகம் அரவிந்தன் |